சினிமாவை பார்த்து ஏமாறும் காலம் அல்ல: விஜயகாந்த்தின் முதல்வர் கனவு பலிக்காது

அம்பேத்கர் புரட்சி பேரவை இயக்கம் விடுதலை சிறுத்தை கட்சியில் இணைந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமாவளவன் பேசியதாவது:-
பல்வேறு கட்சிகளில் இருந்தும், அமைப்புகளில் இருந்தும் விலகி பலர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த வண்ணம் உள்ளனர். உலக முழுவதும் உள்ள தமிழர்களுக்கான இயக்கமாக விடுதலை சிறுத்தை வளர்ந்து வருகிறது. மற்ற கட்சிகளை உடைக்க வேண்டும், பலவீனப்படுத்த வேண்டும் என்று நான் செயல்பட்டது இல்லை. நம்பிக்கையான, நன்மதிப் பான அமைப்பாக விடுதலை சிறுத்தை விளங்குகிறது. இதை மேலும் விரிவாக்கவும், வலுவாக்கவும் வேண்டும்.
சென்னை விடுதலை சிறுத்தையின் கோட்டையாக மாறிவருகிறது. 2006-ம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக என்னை பிரசாரம் செய்ய அழைத்தார்கள்.
90 தொகுதிகளில் பிரசாரம் செய்தேன். சென்னையிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டேன். 6 தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றியது. எம்.ஜி.ஆர். காலத்தில் கிடைக்காத வெற்றி எனது பிரசாரத்தால் கிடைத்தது. அ.தி.மு.க. வின் வெற்றிக்கு விடுதலை சிறுத்தையின் பங்களிப்புதான் காரணம். விடுதலை சிறுத்தைகள் கட்சி சென்னையில் மிகப்பெரிய வளர்ச்சி பெற்று வருகிறது.
இந்த கட்சியில் சூப்பர் ஸ்டாரும் இல்லை, நடிகரும் இல்லை கவர்ச்சிக்கு இங்கு இடம் இல்லை. திரை உலகில் சம்பாதித்த பணத்தை வைத்து பேரும் புகழுடன் இருப்பதால் அரசியல் கட்சி தொடங்கி ஜெயித்து விடலாம் என்ற குருட்டு நம்பிக்கையில் சிலர் வருகிறார்கள். சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை இன்றைய இளைஞர்கள் நன்றாக புரிந்து இருக்கிறார்கள்.
சினிமாவை பார்த்து ஏமாறுகிற காலம் அல்ல இது. அதனால் சினிமாவை காட்டி நாட்டை ஆண்டு விடலாம் என்ற கனவு பலிக்காது. அப்படியானால் நகைச்சுவை நடிகர் கூட அரசியலுக்கு வரலாமே... அவரை ஏமாற்றிய சிங்கமுத்து கூட வரலாம்.
நடிகர் விஜயகாந்த் 2006 தேர்தலில் 236 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். 210 இடங்களில் டெபாசிட் கூட கிடைக்கவில்லை. விருத்தாசலத்தில் மட்டும் அவர் வெற்றி பெற்றார்.
தமிழ்நாடு முழுவதும் அந்த கட்சி பெற்ற ஓட்டு 8 சதவீதம். நடிகர் வடிவேல் போட்டியிட்டால் கூட 10 சதவீத ஓட்டுகள் பெற முடியும். அப்படி இருக்கும் பட்சத்தில் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு பிறகு விஜயகாந்த் தான் முதல்வர் என்ற மாயையை உருவாக்குகிறார்கள்.
விஜயகாந்த் கட்சி திருச்செந்தூர், வந்தவாசி தொகுதியில் வாங்கிய ஓட்டு முதல்வர் கனவை தவிடுபொடியாக்கி விட்டது. மக்களுடன் தான் கூட்டணி என்று கூறிய அவர் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற நிலைக்கு மாறி இருக்கிறார். அவரை குறைத்து மதிப்பிட வில்லை. சினிமாவை வைத்து அரசியல் நடத்தலாம் என்பது பகல் கனவு. எந்த காலத்திலும் அது நடக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் முகம்மது யூசுப், ராஜி, ஆர்.பி.குமார், கபிலன், எழில்கரோலின், துரை, அப்துல்நாசர், அப்துல் முபாரக், முகம்மதுகாசிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக