விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயற்குழு தீர்மானங்கள்
இளவரசன் சாவை குற்றப் புலனாய்வுக்கு உட்படுத்த வேண்டும்!
தருமபுரி, விழுப்புரம் மாவட்டங்களில் 144 தடையாணையை திரும்பப் பெறவேண்டும்!
ஆசிரியர் தகுதித் தேர்வு - அரசாணை 252-ஐ முழுமையாகத் திரும்பப் பெறவேண்டும்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயற்குழு தீர்மானங்கள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயற்குழு இன்று (26-7-2013) காலை 10 மணியளவில் சென்னை, வேளச்சேரியிலுள்ள தாய்மண் அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச் செயற்குழுவில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. தருமபுரி இளவரசன் சாவைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் விடுத்த வேண்டுகோளை அங்கீகரிக்கும் வகையில் தமிழக அரசு நீதிவிசாரணைக்கு ஆணையிட்டுள்ளது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்பதுடன் தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேவேளையில், நீதி விசாரணையானது நீதியரசர் சிங்காரவேலு அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்டிருப்பதற்கு மாற்றுக் கருத்து எழுந்துள்ளது. இதனை தமிழக அரசு மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன், இந்த நீதி விசாரணை இளவரசன் இறப்பை மட்டுமே முன்னிறுத்தாமல், திவ்யா-இளவரசன் ஊரைவிட்டு வெளியேறிய 2012 அக்டோபர் 8ஆம் நாளிலிருந்து அதனைத் தொடர்ந்து நடந்த சாதிவெறியாட்டங்கள், திவ்யா தந்தை நாகராஜன் சாவு, இளவரசனிடமிருந்து திவ்யாவைப் பிரித்து கடத்தியது, 4-7-2013 இளவரசன் சாவு வரையில் நடைபெற்ற அனைத்துப் பின்னணிகளையும் முழுமையாக விசாரிக்க தமிழக அரசு ஆணையிட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.
2. தருமபுரி இளவரசன் சாவில் ஏராளமான ஐயங்கள் சட்டம் சார்ந்த மருத்துவத்துறை வல்லுநர்களாலேயே எழுப்பப்பட்டுள்ளன. அது தற்கொலைதான் என ஐயத்திற்கிடமின்றி உறுதியாகத் தெரிவித்திட இயலாத நிலை உள்ளது. விடுதலைச் சிறுத்தைகளைப் பொறுத்தவரையில் அது படுகொலைதான் எனக் கருதுகிறோம். இந்நிலையில், அது படுகொலை இல்லை என்று அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. தமிழகத்தையே உலுக்கியிருக்கும் உணர்ச்சிப்பூர்வமான பிரச்சனை என்பதால் இளவரசன் சாவை அறிவியல்பூர்வமான முறையில் குற்றப்புலனாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும், தடய அறிவியல் துறையின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் புலனாய்வு நடத்திட ஆணையிட வேண்டுமென்றும் தமிழக அரசை இச்செயற்குழு வற்புறுத்துகிறது.
3. அண்மைக் காலமாக சாதியவாத சக்திகள் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் வெளிப்படையாக சாதிவெறியைத் தூண்டும்படி செயல்பட்டு வந்தனர். தருமபுரி, மரக்காணம் உள்பட வடமாவட்டங்களில் தலித் மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு கடந்த சில மாதங்களாக விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக குற்றவியல் நடைமுறைச்சட்டம் 144-வது பிரிவின்படி தடையாணை பிறப்பித்துள்ளது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு மற்றும் வன்முறைகளுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத விடுதலைச் சிறுத்தைகளுக்கு, குறிப்பாக கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் நுழையவே கூடாது எனத் தடை விதித்திருப்பது முற்றிலும் சனநாயகத்துக்கு விரோதமானதாகும். அத்துடன், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் அவருக்கான உரிமைகளையும் இந்த ஆணை பறித்துள்ளது. மேலும் தருமபுரி இளவரசன் உடலுக்கு அஞ்சலி செலுத்த விடாமலும் தடைவிதித்து சனநாயகத்தை நசுக்கியுள்ளது. தமிழக அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகளின் மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அதேவேளையில், தமிழக அரசு இரு மாவட்டங்களிலும் விதிக்கப்பட்டுள்ள 144-தடையாணையை உடனடியாகத் திரும்பப் பெற்று சனநாயகத்தைப் பாதுகாத்திட முன்வரவேண்டுமென இச்செயற்குழு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.
4. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 5 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய இந்திய அரசு முனைந்தபோது அவ்வாறு விற்பனை செய்யக்கூடாது எனக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்ததோடு, விற்பனை செய்வதைத் தவிர்க்க இயலாத நிலை இருப்பின் அதனைத் தமிழக அரசுக்கே விற்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை விடுத்தது. எமது கோரிக்கையை ஏற்கும் வகையில் தமிழக அரசு உடனடியாக முன்வந்து தானே வாங்கிக்கொள்வதாக இந்திய அரசுக்கு மடல் எழுதியது. அதன்படி, தற்போது தமிழக அரசு அதனைப் பெற்றுக்கொள்ளும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு இந்தியாவுக்கே ஒரு முன்னோடியாக வழிகாட்டியுள்ளது. இதன் மூலம் பொதுத்துறைகளை மெல்ல மெல்ல தனியார்மயப்படுத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முன்மாதிரியான நிலைப்பாட்டை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது.
5. வரும் ஆகஸ்ட் 17, 18 ஆகிய நாட்களில் ஆசிரியர் தகுதித் தேர்வினை நடத்த தமிழக அரசு அறிவிப்புச் செய்துள்ளது. அத்தேர்வில் 60 விழுக்காடு மதிப்பெண் பெற்றவர்களே தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர் என்று அரசாணை எண் 181-ல் கூறப்பட்டுள்ளது. அத்துடன், கல்வித் தகுதியின் அடிப்படையில் ‘வெயிட்டேஜ்’ என்னும் பெயரில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அரசாணை எண் 252-ன்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு அரசாணைகளும் எளிய மக்களுக்கு மறைமுகமாக சமூகநீதியை மறுக்கும் சதி முயற்சியாகவே அமைந்துள்ளது. தலித்துகள்-பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இதனால் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு அரசாணை எண் 252-ஐ முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும், அண்டை மாநிலங்களில் உள்ளதைப் போல, தலித்துகள்-பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு தகுதித் தேர்வுக்கான மதிப்பெண்ணில் தளர்வு அளிக்கும் வகையில் அரசாணை எண் 181-ஐ திருத்தம் செய்ய வேண்டும் எனவும் இம்மாநிலச் செயற்குழு தமிழக அரசை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
6. ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்பதற்கான சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 1ஆம் நாள் திராவிடர் கழகத்தின் சார்பில் ஒருங்கிணைக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் பெருந்திரளாகக் கலந்துகொள்வது என இச்செயற்குழு தீர்மானிக்கிறது.
7. ‘டெசோ’ அமைப்பின் சார்பில் ஆகஸ்ட் 8ஆம் நாள் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது. குறிப்பாக, கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் திருவள்ளூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகிக்கிறார். அப்போராட்டத்தில் திமுக, திக ஆகிய கட்சித் தோழர்களுடன் இணைந்து செயலாற்றிட வேண்டுமென திருவள்ளூர் மாவட்டத் தோழர்களுக்கு இச்செயற்குழு வழிகாட்டுகிறது.
8. எதிர்வரும் செப்டம்பரில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன் வெல்த் நாடுகளின் கூட்டத்தை அங்கே நடைபெறவிடாமல் தடுப்பதற்கு இந்திய அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது. அதேவேளையில், இம்மாநாட்டைத் தடுத்திட இயலாதநிலை இருப்பின், அம்மாநாட்டில் இந்திய அரசு கலந்துகொள்ளாமல் தவிர்க்க வேண்டுமென இந்திய அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
9. ஈழத்தில் வடக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள மாகாணத் தேர்தலில் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இலட்சக்கணக்கான தமிழர்களும் வாக்களிக்க உரிமை வழங்கிட இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக