இந்திய-இலங்கை அதிபர் தேர்தல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் விடுதலைச்சிறுத்தைகளும்!

இந்திய-இலங்கை அதிபர் தேர்தல்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும்
விடுதலைச்சிறுத்தைகளும்!


இந்தியாவில் மீண்டும் காங்கிரசு ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்பது கடந்த மே 2009இல் நடந்த பொதுத்தேர்தலின் போது இனமான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனின் எண்ணமாகவும் ஏக்கமாகவும் இருந்தது. ஆனால், நமது எதிர்பார்ப்புக்கு மாறாக, யாருடைய தயவும் இல்லாமலேயே ஆட்சியமைக்கவும், எந்தவொரு அச்சமும் இல்லாமலேயே ஐந்தாண்டுகளுக்கு முழுமையாக ஆட்சியை நடத்தவும் கூடிய வலிமையைப் பெற்றுவிட்டது காங்கிரசு.

ஈழவிடுதலைக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பெரும்பகையான காங்கிரசு கட்சி மறுபடியும் கூடுதல் வலிமையோடு ஆட்சி பீடத்தில் அமர்ந்து விட்டது. போதிய வலுவுள்ள மாற்றுத் தலைமை அல்லது மாற்றுக் கட்சி இல்லாத நிலையில், மீண்டும் மீண்டும் காங்கிரசுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். ஆகவே, கடுமையாக நீர்த்துப் போயிருந்த உத்தரபிரதேசத்தில்கூட மீண்டும் காங்கிரசுக்கு செல்வாக்கு உயர்ந்திருக்கிறது. மொத்தத்தில் நமது விருப்பத்துக்கு மாறாக, இந்தியாவில் காங்கிரசு ஆட்சி வலுவான மக்கள் ஆதரவுடன் அமைந்துவிட்டது. தமிழீழத்துக்கு எதிரான அரசியல் சூழல் இந்தியாவில் மீண்டு வலுப்பெற்று விட்டதே என்று நொந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லாத நிலையே நமக்கு ஏற்பட்டுவிட்டது.



இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலின் முடிவுகளும், அதனைத் தொடர்ந்து அங்கே ஏற்பட்டு வருகிற அரசியல் சூழல்களும் நம்மை மேலும் மேலும் நொறுங்கச் செய்கின்றன. கடந்த சனவரி 26, 2010 அன்று சிங்கள அதிபருக்கான தேர்தல் நடந்துமுடிந்தது. உலகமே அத்தேர்தலின் முடிவுகளை அறிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தது. குறிப்பாக, உலகத் தமிழினம் கூடுதலான பரபரப்போடும் பதற்றத்தோடும், எப்படியாவது இராஜபக்சே மண்ணைக் கவ்வ வேண்டும் என்கிற வெறியோடும் அத்தேர்தல் முடிவுகளை அறிய துடித்தது. ஆனால், அன்று நள்ளிரவே நம் கனவுகள் கலைந்தன. இராஜபக்சே தொடமுடியாத உயரத்தில், வெற்றியின் உச்சத்தில் நின்று நம்மைப் பார்த்து ஏளனம் செய்யும் நிலை ஏற்பட்டுவிட்டது.


இலங்கை வரலாற்றில் முன்னெடுப்போதுமில்லாத அளவில், மிக மிக கூடுதலான வாக்குகள் பெற்று, மறுபடியும் இராஜபக்சே அதிபராகிவிட்டார். தலையிலடித்துக் கொள்வதைத்தவிர வேறுஎன்ன செய்வது? தமிழீழத்திற்கும் தமிழினத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் முதன்மையான, கடுமையான எதிரிகளின் கைகளில் மறுபடியும் இலங்கையின் ஆட்சியதிகாரம் சிக்கிக்கொண்டது. வெந்து புழுங்கி வேதனைப்படுவதைத் தவிர வேறென்ன வழி? இந்தியா விலும், இலங்கையிலும் வெற்றிக் களிப்பில் இனத்தின் பகைவர்கள்! உலகத் தமிழினமோ உள்ளம் புழுங்கும் ஊமைகளாய் வாயடைத்துக் கிடக்கும் நிலை! ஈழத்தமிழினத்தின் எதிர்காலம் இனி என்ன ஆகுமோ என்கிற பேரச்சம் இன உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனையும் ஆக்கிரமித்துள்ளது.


நமது இனப்பகைவர்களுக்கிடையில் அதிகாரப் பகை! அவர்களில் யார் வென்றாலும் நமக்குப் பாதுகாப்பில்லை! ஆனாலும், ஈழத்தமிழினம் இனவெறியன் இராஜபக்சே ஆட்சி பீடத்தில் தொடரக்கூடாது என்று இன்னொரு இனப்பகைவன் சரத் பொன்சேகாவை ஆதரித்தது. இனத்தை அழித்ததில் இருவரும் கூட்டாளிகளே! எனினும், இந்த இருவரில் ஒருவரைத்தான் ஆதரிக்கமுடியும் என்கிற இக்கட்டான நிலை தமிழனுக்கு! வேறுமாற்று இல்லை! எனவே, இரண்டு இனவெறி பிடித்த கொலைவெறியர்களில் ஒருவரை ஆதரிக்க வேண்டிய அரசியல் கட்டாயம்!


இந்நிலையில், ஈழத்தமிழர்களும் மலையகத் தமிழர்களும் ஏறத்தாழ அறுபது அல்லது எழுபது விழுக்காடு அளவில், இராஜபக்சேவை எதிர்த்து சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்துள்ளனர். ஆயினும், இராஜபக்சேவை சரத் பொன்சேகாவால் வெற்றிபெற இயலவில்லை. இன்று இராஜபக்சேவின் இராணுவம் சரத் பொன்சேகாவை சிறைப்பிடித்து வதை செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


இந்திய - இலங்கை அரசியல் சூழல்களும் இருநாடுகளுக்குமிடையிலான உறவுகளும் போக்குகளும் நம்மைப் பெருங்கவலையிலும் பேரச்சத்திலும் ஆழ்த்தியுள்ளன. நமது விருப்பங்களுக்கும் நமது நலன்களுக்கும் எதிரான சூழல்கள் உருவாகிறபோது, அவற்றின் போக்கிலேயே நாம் மிகுந்த எச்சரிக்கையோடு பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. அத்தகைய சூழல்களை எதிர்கொள்ளாமல் ஒதுங்கி நின்று, ஒடுங்கிவிடமுடியாது. அத்தகைய ஒரு நெருக்கடியில் தான், தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள், சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை எடுத்தனர்.

இராஜபக்சேவின் கூட்டாளியாயிருந்து, இராணுவத் தளபதி என்ற நிலையில் இனப்படுகொலை செய்ததில் சரத் பொன்சேகாவின் பங்கும் மன்னிக்கவே முடியாததாகும்.

அத்துடன், சரத் பொன்சேகா எதிர்க்கட்சியினரின் பொது வேட்பாளர்! ரணில் விக்கிரசிங்கேவின் தலைமையிலான கூட்டணியின் பொது வேட்பாளர்! அக்கூட்டணியில், தமிழினத்தையும் தமிழீழத்தையும் வெளிப்படையாக, வெகு காலமாக, மூர்க்கமாக, முழு மூச்சாக எதிர்க்கிற இனவெறி அமைப்பான ஜேவிபியும் ஒரு அங்கம்! சமாதான ஒப்பந்தம் என்ற பெயரில் நட்புறவாகப் பழகி, நரித்தனமான சதிவேலைகளில் ஈடுபட்டு ஈழவிடுதலைக்கு எதிராக செயல்பட்டு, புலிகளுக்கு நம்பிக்கைத் துரோகமிழைத்த ரணில் விக்கிரசிங்கேவால் அறிவிக்கப்பட்டு, சிங்கள இனவெறி அமைப்பான ஜேவிபியின் ஆதரவோடு போட்டியிட்ட, அண்மையில் கொடூரமான இனப்படுகொலை செய்த போர்க் குற்றவாளி சரத் பொன்சேகாவைத் தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது.

இராஜபக்சே என்கிற போர்க்குற்றவாளி ஆட்சியில் தொடரக்கூடாது என்னும் நிலைப்பாட்டில், சரத் பொன்சேகா என்கிற போர்க் குற்றவாளியை ஆதரிப்பது என்னும் நிலைப்பாட்டை, ஈழத்தமிழினம் மேற்கொண்டது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதனை இராஜதந்திரமாக அறிவித்தது. ஆனால், அதிபர் வேட்பாளராகப் போட்டியிட்ட அதே கூட்டமைப்பைச் சார்ந்த சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை, இந்திய உளவுத்துறையின் சதி என்று விமர்சித்தார். இந்திய அரசு இராஜபக்சேவையும் ஆதரிக்கிறது; உளவுத்துறையின் மூலம் சரத் பொன்சேகாவையும் ஆதரிக்கிறது- என்று அய்யா வேலுப் பிள்ளையின் இறுதி அஞ்சலிக்காக ஈழம் சென்றிருந்தபோது சிவாஜிலிங்கம் நேரில் கூறினார்.

இந்திய உளவுத்துறையான ‘ரா’ என்னும் அமைப்பின் தூண்டுதலில்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, சரத் பொன்சேகாவை ஆதரிக்கிற முடிவை எடுத்துள்ளது என்று வெளிப்படையாகவே அவர் விமர்சனங்களை வைத்தார். அது தவறான தகவல் என்று அக்கூட்டமைப்பைச் சார்ந்த செல்வம் அடைக்கலநான் போன்றவர்கள் மறுத்தனர்.


தேர்தல் அரசியலில் இத்தகைய யூகங்களும் விமர்சனங்களும் தவிர்க்க முடியாதவைதான். எதிரிகளுக்கிடையில் அதிகாரப் போட்டி! இரண்டு எதிரிகளையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளவும், வீழ்த்தவும் போதிய வலிமை இல்லாத நிலையில், ஒரு எதிரியைக் கொண்டுதான் இன்னொரு எதிரியை வீழ்த்தமுடியும். நாமும் நம்மை வலிமைப்படுத்திக்கொள்ள முடியும். அத்தகைய இராஜதந்திரங்கள் வரலாற்றின் நெடுகிலும் காணலாம். எனவே, வேறு வழியில்லாத நிலையில், தவிர்க்கமுடியாத நெருக்கடியில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, சரத் பொன்சேகா என்கிற இன்னொரு இனவெறிக் கூட்டணியின் வேட்பாளரை ஆதரித்துள்ளது.

இதுபோன்ற
ஒரு நெருக் கடியில்தான் விடுதலைச்சிறுத்தைகள் திமுக கூட்டணியில் கடந்த தேர்தலின்போது நீடித்தது. இந்தியாவில், தமிழினத்தின் பகையான தமிழீழத்தின் பகையான காங்கிரசு கட்சிக்கு மாற்றாக போதிய வலிமையுள்ள எதிர்க்கட்சி இல்லை.


கொள்கையளவிலும் செயலளவிலும் பாரதிய சனதா, தமிழினத்திற்கும் தமிழீழத் திற்கும் நேரெதிராகவே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பாரதிய சனதாவை நமக்கான நட்பு சக்தியாகக் கருதி, காங்கிரசுக்கு மாற்றாக ஆதரிக்க இயலாத நிலை! அத்துடன், சிறுபான்மையினருக்கும், தலித்துகளுக்கும் நேரெதிராகவே பாரதிய சனதா கட்சி செயல்பட்டுவந்துள்ளது! தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆகவே, இந்திய அளவில் காங்கிரசுக்கு மாற்றாக பாரதிய சனதா கூட்டணியைத் தேர்வு செய்யவே இயலாத சூழல்தான் விடுதலைச்சிறுத்தைகளுக்கு.

அதே வேளையில், தமிழக அரசியலரங்கில் நிலவும் சூழலும் ஈழவிடுதலை அரசியலுக்கு ஆதரவான மாற்று சக்தியைக் கொண்டதாக இல்லை. திமுக - அதிமுக இரண்டு கட்சிகளில், ஈழத்திற்கும் புலிகளுக்கும் நேரெதிரான நிலைப்பாடுகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிற கட்சி அதிமுக என்பதை உலகம் அறியும்.


புலிகளுக்கு இந்தியாவில் தடை கொண்டுவர காரணமாக இருந்தது அதிமுகதான் என்பதை அதன் பொதுச்செயலாளரே பலமுறை ஒப்புதல் வாக்கு மூலமாக கூறியிருக்கிறார். இராஜீவ் கொலைவழக்கில், பிரபாகரனை இந்தியா கைது செய்து தண்டிக்க வேண்டும்என்று சட்டப்பேரவையிலேயே தீர்மானம் போட்டவர் செல்வி ஜெயலலிதாதான்.

இனம் கொடூரமாக அழித்தொழிக்கப்பட்டுக் கொண்டிருந்த கடைசி கட்டத்தில்கூட, போர் நடந்தால் மக்கள் சாவது இயல்புதான்என்று கருத்து சொன்னவர் ஜெயலலிதா! மேதகு பிரபாகரன் அவர்களின் சர்வதேச ஊடகவியலாளர் சந்திப்பைப் பற்றி கருத்தாய்வு செய்ததற்காக ‘பொடா’ சட்டத்தை ஏவி பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்ட பலரை 18 மாத காலம் சிறைப்படுத்தி கொடுமை செய்தவர்தான் ஜெயலலிதா! கொள்கை அடிப்படையிலேயே தமிழீழத்தை ஏற்றுக்கொள்ளாதவர் ஜெயலலிதா!

இத்தகைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவை ஆதரிப்பதில், அதிலும் ஈழச்சிக்கலை முன்னிறுத்தி ஆதரிப்பதில் விடுதலைச்சிறுத்தைகளுக்கு உடன்பாடில்லாத நிலை. அதிமுகவை ஆதரிப்பதால், காங்கிரசு ஆட்சியைத் தடுத்துவிட முடியுமா என்றால் அதற்கும் வாய்ப்பே இல்லை. திமுகவை தோற்கடித்து, அதிமுகவை வெற்றிபெற வைத்தாலும், அதிமுக, காங்கிரசு ஆட்சியிமைக்க உதவாது என்பதற்கு எந்த உறுதியும் கிடையாது. தேர்தலுக்கு முன்பே, வெளிப்படையாக காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தும், அதிமுக கூட்டணிக்கு காங்கிரசுவரவில்லை என்கிற நிலையில்தான் - கடைசி வேளையில் தான் காங்கிர சல்லாத ஒரு கூட்டணியை உருவாக்கினார் ஜெயலலிதா. திமுகவால் காங்கிரசு அணியில் நீடிக்க முடியாத பாமக, திமுகவுடன் உள்ள பகையால் காங்கிரசு அணியில் சேரமுடியாத மதிமுக, காங்கிரசுடன் ஏற்பட்ட தற்காலிக முரண்பாட்டினால் திமுக அணியில் சேரமுடியாத இடதுசாரிகள், வலிந்து அழைத்தும் காங்கிரசால் அவமதிக்கப்பட்ட அதிமுக ஆகியவை இணைந்து உருவாக்கிய கூட்டணியைத்தான் ஈழத்தமிழர்களைப் பாதுகாப்பதற்காக காங்கிரசு - திமுக எதிர்ப்பு அணியாக உருவாக்கியது என்று இங்கே சிலர் பரப்புரை செய்தார்கள்.


ஈழத்தமிழினம் அழித்தொழிக்கப்பட்டிருந்த காலத்தில்தான், கடைசி வரையில் பாமக., காங்கிரசு - திமுக அமைச்சரவையில் இருந்தது. ஈழத் தமிழருக்காக காங்கிரசு - திமுகவை எதிர்த்து அவ்வணியிலிருந்து அவர்கள் வெளியேறவில்லை. திமுகவே பாமகவை வெளியேற்றியதால் அதிமுக அணியில் சேரும்நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. 2006 - சட்டமன்றப் பொதுத்தேர்தலின்போது திமுகவிடமிருந்து இடங்கள் பெறுவதில் ஏற்பட்ட முரண்பாட்டினால்தான் மதிமுக அதிமுக அணிக்குப்போனது. அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் போட்டதில், காங்கிரசுடன் ஏற்பட்ட முரண்பாட்டினால்தான், இடது சாரிகள் காங்கிரசல்லாத அணியில் இடம்பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதனடிப் படையில்தான் அதிமுக அணிக்குத் தாவினார்கள். இப்படி உருவான ஒரு அணியை, தேர்தல் ஆதாயத்திற்காக, ‘ஈழத்தமிழர் பாதுகாப்பு அணியாக அறிவித்துக்கொண்டனர்.

ஈழத்தமிழினம் அழிவதைப் பற்றிக் கவலைப்படாத ஜெயலலிதா தலைமையில், ஈழத் தமிழரின் படுகொலையை மூலதனமாக்கி ஆதாயம் தேடுவதற்காக உருவான அணியே அதிமுக அணி என்பதை நேர்மையாய்ச் சிந்திப்பவர்களால் மறுக்கமுடியாது. ஒருநாள்கூட மறந்தும் ஈழத்தை ஆதரிக்காத ஜெயலலிதா ஈழத்தை மீட்டுத்தருவார் என்று அப்பட்டமான பொய்யைச் சொல்லி, எம் தமிழ்ச் சொந்தங்கள் கொட்டிய குருதிச் சேற்றில் ‘இரட்டை இலை’யைத் துளிர்க்க செய்திட துடித்தனர் சிலர். அக்கூட்டணியின் கட்சிகள் அதிமுக தலைமையைப் பற்றி நன்கு அறிந்திருந்தும் ‘அரசியல் ஆதாயத்திற்காகவே’ அதிமுக அணியை ஈழத்தமிழர் மீட்பு அணியாக உருவகப்படுத்தினர். இனம் அழிந்தாலும் தேர்தலில் தாம் வெற்றிபெறவேண்டும் என்பதும், திமுகவைத் தோற்கடிக்க வேண்டுமென்பதும்தான் அதிமுக, பாமக, மதிமுக ஆகியவற்றின் குறிக்கோள்களாக இருந்தன.

ஈழம் என்கிற சொல்லிலும் கருத்திலும் உடன்பாடே இல்லாத கட்சிகள் இடதுசாரிகள். இத்தகைய ஒரு கூட்டணியில் இடம் பெற்றிருந்தால்தான் விடுதலைச்சிறுத்தைகள் உண்மையான ஈழத்தமிழரின் ஆதரவு இயக்கமாகுமாம். முழுமனதுடன் உண்மையான அக்கறையுடன் உள்ளம் கொதித்துக் களமாடிவரும் விடுதலைச்சிறுத்தைகள், திமுக அணியில் நீடிப்பதாக எடுத்த முடிவால் துரோகமிழைத்துவிட்டதாம். இப்படி இன்னும் அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர் சிலர்.

திமுக அணியும் வேண்டாம்; அதிமுக அணியும் வேண்டாம். உண்மையான ஈழத்தமிழர் ஆதரவு அமைப்புகள் ஒன்று சேர்ந்து, புதிய அணி ஒன்றை உருவாக்குவோமென்று எத்தனை - எத்தனை பாடுபட்டேன். அவர்கள் உண்மையான ஈழவிடுதலை ஆதரவாளர்கள் என்று முழுமையாக நம்பி வெளிப்படையாகப் பேசினேன். ஆனால், அவர்கள் இராஜபக்சே எதிர்ப்பு என்பதைவிட கருணாநிதி எதிர்ப்புஎன்பதிலேயே குறியாக இருந்தார்கள். போரை நிறுத்தவேண்டுமென்பதைவிட, அந்த இனவெறிப் போரைப் பயன்படுத்தி கருணாநிதியை வீழ்த்தவேண்டும் என்பதிலேயே மிகுந்த அக்கறையாக இருந் தார்கள். ஈழத்தமிழினத்தைக் காப்பாற்றவேண்டு மென்பதைவிட தத்தமது கட்சியையும் பதவியையும் காப்பாற்ற வேண்டுமென்பதிலேயே விழிப்பாக இருந்தனர்.

ஆகவே, புதிய அணி கட்டவேண்டுமென்கிற எனது முயற்சியை அவர்கள் யாரும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களும் அதற்கு செவிமடுக்கவில்லை. மாறாக, அதிமுக அணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் வரவேண்டுமென்கிற கோரிக்கையினைத் தான் முன்வைத்தனர். தனி அணி என்கிற எனது பெருமுயற்சி பாழ்பட்டுவிட்ட நிலையில்தான், செய்வதறியா கையறு நிலையில், திமுக அணியிலேயே தொடர்வது என்ற நிலையை மேற்கொண்டோம்.

திமுக - காங்கிரசு அணிதான் ஈழத்தமிழரைப் பாதுகாக்கும் என்று யாம் அறிவிக்க வில்லை. தனி அணி கட்ட முடியவில்லை; தனித்து நிற்கவும் இயலவில்லை என்ற சூழலில் திமுகவுடன் தேர்தலை எதிர்கொள்ளவோம் என முடிவு செய்தோம். காங்கிரசுடன் அல்ல; திமுகவுடன் என்ற முடிவை எடுத்தோம்.

நமது விருப்பங்களுக்கும் நலன்களுக்கும் எதிரான சூழல்கள் உருவாகிறபோது, அதன் போக்கிலேயே நாம் எச்சரிக்கையாகப் பயணித்து, நம்மை ஒரு அரசியல் சக்தியாக வலிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென்கிற அந்தநிலையில்தான் விடுதலைச் சிறுத்தைகள் காங்கிரசு அங்கம் வகிக்கிற அணியிலேயே அங்கம் வகிக்கும் நிலை உருவானது. களத்திலே கொடூரமான இனப்படுகொலையைச் செய்த போர்க்குற்றவாளியான சரத் பொன்சேகாயுடனும் , இனவெறியர்கள் ஜேவிபியுடனும், நரித்தனமான சதிகளால் ஈழவிடுதலைப் போராட்டத்தை நசுக்கிட முழு காரணமாகவும் மூலக் காரணமாகவும் இருந்த ரணில் விக்கிரமசிங்கேவுடனும் கைகோர்த்துக் கொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்தது தவிர்க்க முடியாத நிலையில், மாற்று இல்லாத நிலையில் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு முடிவேயாகும். அப்படித்தான் விடுதலைச்சிறுத்தை களும், உண்மையான இன உணர்வுள்ளவர்கள் என நம்பி, தனி அணி கட்ட முயற்சியெடுத்து, அவர்கள் கைவிட்ட நிலையில்தான் இருக்கும் அணியோடு பயணிப்பதே தற்போதைய சவால் என்கிற முடிவை மேற்கொண்டோம்.


ஈழத்தமிழர் சிக்கலைப் பொருத்தவரையில், திமுகவின் பணிகளோடு அதிமுகவை ஒப்பிடவே முடியாது. எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக ஈழத்தையும் புலிகளையும் ஆதரித்தது. ஆனால், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, ‘இராஜபக்சே தலைமையிலான அதிமுகவாகவே செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில்தான், விடுதலைச்சிறுத்தைகள் 2006 முதல் தொடரும் திமுக அணியிலேயே நீடிப்பது என்று முடிவெடுத்தோம்!


ஈழத்தமிழர் சிக்கலில் உள்ள பன்முக அழுத்தங்களையும் தடைகளையும் முழுப் பரிமாண அளவில் ஆய்ந்து பார்க்காமல், வெளிவிவகாரத்துறையில் எந்தவொரு அதிகாரமுமில்லாத ஒரு மாநில அரசை, குறிப்பாக திமுக தலைவரை மட்டுமே குறிவைத்து பழி சுமத்தும் அதே காழ்ப்புணர்வை, வெறுப்பை நம்மீதும் சிலர் துப்புகின்றனர். இத்தகைய விமர்சனங்களை யாம் பொருட்படுத்தவில்லையென்றாலும், நம்மைச் சுற்றிச் சூழ்ந்து கொள்கிற, தவிர்க்கமுடியாத நெருக்கடிகளையும் அவற்றை நாம் எதிர்கொண்டாக வேண்டிய தேவையையும் அதனால் எழுகிற விமர்சனங்கள் அல்லது அவதூறுகள் பற்றியும் நாம் சில புரிதல்களைப் பெற்றாக வேண்டும்! அத்தகையப் புரிதல்கள் நமக்குப் புதிய உத்திகளை வகுக்கும் புதிய ஆற்றல்களை வழங்கலாம்!



நமது தமிழ்மண் பிப் 2010 தலையங்கத்தில் 
எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன்

-

2 கருத்துகள்:

மீனகம் ,சவுக்கு -போன்ற ப்ளாக் எழுதும் நாய்களுக்கு ,நீங்கள் பதில் எழுத தேவை இல்லை !!!.
தமிழ் தேசியத்தில் ,சாதி ஒழிப்பில் உங்கள் பயணம் தொடரட்டும் !!!.....
மீனகம் ,சவுக்கு -போன்ற நாய்களுக்கு எப்படி பதில் சொல்வது என்று -என்னை போன்ற உங்கள் தம்பிகளுக்கு தெரியும்

சேகர்
மருதிபட்டி -po
அரூர் -tk
தர்மபுரி

11 பிப்ரவரி, 2010 அன்று 10:19 PM comment-delete

வாழ்த்துக்கள் திருமா. நீ ஒருவன் இல்லை என்றால் தமிழகத்தில் ஈழமாவது அப்படின்னா என்ன ஆவது . மாணவர் எழுச்சியை நீங்கள் தடுதது விட்டீர்கலாம் இல்லையேல் இவர்கள் புடுங்கி இருப்பார்களாம். ஆனால் எப்படி எத்துனை பேரை வைத்து புடுங்கி இருப்பார்கள் என கூற ,மாட்றானுங்க .எப்பிடி எல்லாம் தமிழ் பேசுகிற சாதி வெறி பிடிதுள்ள பொரும்போக்கு நாய்கள் கூறுகின்றனர்.

12 பிப்ரவரி, 2010 அன்று 9:36 AM comment-delete

கருத்துரையிடுக