மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா உள்ஒதுக்கீடு உடனே வேண்டும்!” - தொல்.திருமாவளவன் கோரிக்கை

மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா
ஒதுக்கீடு இப்போதே வேண்டும்!
உள்ஒதுக்கீடு உடனே வேண்டும்!”

தொல்.திருமாவளவன் கோரிக்கை

சட்டமன்ற, நாடாளுமன்ற அவைகளில் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா கடந்த மார்ச் 8 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. 1996ஆம் ஆண்டிலிருந்து மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் இம்மசோதாவை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றிபெற இயலாத நிலையில் தேக்கமடைந்திருந்தது. தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்குரிய உள்ஒதுக்கீட்டு சட்டப்படி உறுதிசெய்யப்பட வேண்டும் என்னும் ஞாயமான கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதன் காரணமாக இம்மசோதா நிறைவேற்றப்பட முடியாத நிலையிலிருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதில் அன்றைய பாராதிய சனதா அரசானாலும் சரி, இன்றைய காங்கிரஸ் அரசானாலும் சரி, தயக்கம் காட்டுவது ஏன் என்று விளங்கவில்லை.





மக்கள்தொகை அடிப்படையில் பெண்களுக்கு 50 விழுக்காடு வழங்க வேண்டும் என்பதுதான் சனநாயகப்பூர்வமானதாகும். ஆனால், 33 விழுக்காடு இடஒதுக்கீடு மட்டுமே அளிப்பது என்ற முடிவு மகளிருக்கான சனநாயகத்தை உறுதிப்படுத்துவதாக அமையாது. அத்துடன் அவ்வாறு அளிக்கப்படும் இடஒதுக்கீட்டில் தலித், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள்ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தவில்லை யென்பதும் சனநாயக விரோதப் போக்கேயாகும். 13 ஆண்டுகளாக இம்மசோதாவுக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும் ஆட்சியாளர்கள் அன்றும் இன்றும் உள்ஒதுக்கீட்டை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

இவ்வாறான நிலையில், சனநாயகத்தை முழுமைப்படுத்தாத அரைகுறை நிலையில், இம்மசோதா மார்ச் 9 அன்று மாநிலங்களவையில் பெரும்பான்மை ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது. இது முழுமையான மனநிறைவை அளிக்கவில்லையென்றாலும் காலங்காலமாய் வஞ்சிக்கப்பட்டு வந்த பெண்கள் இடஒதுக்கீடு எனும் சமூகநீதி, சட்டப்படி உரிமையாகப் பரிணாமம் பெற்றுள்ளது என்னும் அளவில் சற்று ஆறுதல் அளிக்கிறது. ‘எனக்கில்லை என்றால் வேறு யாருக்குமே கூடாது’ என்கிற அணுகுமுறை இல்லாமல், முதலில் ‘பொதுவான உரிமை’யை மீட்டு பின்னர் ‘குறிப்பான உரிமை’யை வென்றெடுப்போம் என்னும் வகையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டதை வரவேற்கக் கடமைப்பட்டுள்ளோம். இடஒதுக்கீட்டையே ஏற்றுக்கொள்ளாத ஆதிக்கச் சக்திகளிடமிருந்து இடஒதுக்கீடு என்னும் அந்த உரிமையை வென்றெடுப்பது முதற்கட்ட வெற்றியேயாகும். அத்தகைய உரிமையை நிலைநாட்டிய பிறகு உள்ஒதுக்கீடு என்னும் உரிமைக்காகத் தொடர்ந்துபோராடுவதுதான் இப்போதைக்கு நாம் கையாள வேண்டிய அணுகுமுறையாக உள்ளது. ஆகவே, “இட ஒதுக்கீடு இப்போதே வேண்டும்! உள்ஒதுக்கீடு உடனே வேண்டும்!” என்னும் கோரிக்கை முழக்கமே நமது அணுகுமுறையாக அமைய வேண்டும்.

இந்நிலையில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டு உரிமை என்னும் சமூகநீதியை வென்றெடுப்பதற்கு ஏதுவான வகையில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றிய காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சியினருக்கும் எமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மகளிருக்கான இடஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உள்ளாட்சி மன்ற, சட்டமன்ற, நாடாளுமன்ற அமைப்புகள் ஆகிய அனைத்திலும் 50 விழுக்காடு எனும் அளவில் வென்றெடுப்பதையும், தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சசார்ந்த பெண்களுக்கான உள்ஒதுக்கீட்டை வென்றெடுப்பதையும் நமது அடுத்த சவாலாக ஏற்றுச் செயல்படுவோமென உறுதியேற்போம்.

இவண்
தொல்.திருமாவளவன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக