கடலூர் மாவட்ட வெள்ளப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

சிதம்பரம், மார்ச் 6:  கடலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப் பெருக்கில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.

காட்டுமன்னார்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் அவர் பேசியது:தமிழகத்தில் ஆண்டுதோறும் மழைக் காலங்களில் வெள்ளச்சேதம் ஏற்படும் பகுதியாக இப்பகுதி உள்ளது. கடலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் தாழ்வான பகுதியாக உள்ளதால் வெள்ளம் பெருக்கெடுக்கிறது. மேலும் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பெய்யும் மழைநீர் காட்டாறுகள் மூலம் வீராணம் ஏரிக்கு வந்து ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடையில் நீர் திறந்து விடப்படுவதால் ஆண்டு தோறும் இப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.எனவே இதற்கு நிரந்தரத் தீர்வு காண ரூ.20 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ள கருவாட்டுஓடை திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்.

அதேபோன்று பரவனாற்று வெள்ளத்தை தடுக்க அறுவாமூக்கு திட்டத்தை செயல்படுத்த துணை முதல்வர் ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட வேண்டும். பரங்கிப்பேட்டையில் மீண்டும் துறைமுகம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுவாமி சகஜானந்தா பெயரில் மகளிர் கல்லூரி ஒன்றும், கடலூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி ஒன்றும் தொடங்க வேண்டும்.தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எதிரான எதிர்கட்சியும் கிடையாது. எதிர்கட்சித் தலைவரும் கிடையாது. ஏனென்றால் திமுக அரசின் அடுக்கடுக்கான சாதனைகளால், குறைகள் சொல்லமுடியாத அளவில் முதல்வர் கருணாநிதி பணியாற்றி வருகிறார் என்றார் திருமாவளவன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக