அன்னை பார்வதி அம்மாளுக்கு அரசு செலவிலேயே சிகிச்சை!

அன்னை பார்வதி அம்மாளுக்கு
அரசு செலவிலேயே சிகிச்சை!
தமிழக முதல்வருக்கு தொல். திருமாவளவன் கோரிக்கை!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தாயார் அன்னை பார்வதி அம்மாள் அவர்களுக்குத் தமிழகத்தில் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு இந்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது ஆறுதலை அளிக்கிறது. இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட தமிழக அரசுக்கும் குறிப்பாக தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த ஏப்ரல் 16 அன்று மலேசியாவிலிருந்து தமிழகத்திற்கு வருகைதந்த அன்னை பார்வதியம்மாள் அவர்களை அவருடைய வயது முதிர்ந்த நிலையையும் உடல்நலிவையும் பொருட்படுத்தாமல் சென்னை விமான நிலையத்திலிருந்து மீண்டும் மலேசியாவிற்குத் திருப்பி அனுப்பிய செயல் மனிதநேயம் உள்ள எவராலும் சகித்துக்கொள்ள முடியாத ஒன்றாகவே அமைந்தது. மனிதாபிமானம் உள்ள ஒவ்வொருவரும் அந்தச் செயலைக் கண்டிக்கவும் நேர்ந்தது. இந்நிலையில் அவரது வருகை தொடர்பாக தமிழக அரசின் கவனத்திற்கு முன்கூட்டியே அறிவித்திருந்தால் அவரைத் திருப்பி அனுப்பும் நிலையைத் தடுத்திருக்கலாம் என்று தமிழக முதல்வர் அறிவிப்புச் செய்தார். அத்துடன் மீண்டும் பார்வதியம்மாள் தமிழகத்திற்கு வந்து சிகிச்சை பெற விரும்பி, அதற்கு முறைப்படி விண்ணப்பம் செய்தால் இந்திய அரசின் அனுமதியைப் பெறவும், உரிய பாதுகாப்புடன் சிகிச்சை பெறவும் ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் மாண்புமிகு முதல்வர் அறிவித்திருந்தார். அத்தகைய சூழலில் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, பேராசிரியர் சுபவீ, மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் நானும் முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து அன்னை பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்க ஆவன செய்ய வேண்டுமாறு கோரிக்கை விடுத்தோம். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று எமக்கு முதல்வர் வாக்குறுதி அளித்தார். அதன்படி இந்திய அரசுக்கு மடல் எழுதி இன்று அதிகாரப்பூர்வமான அனுமதியைப் பெற்றிருக்கிறார்.
அதேவேளையில் அவருக்கு சிகிச்சை அளிப்பது மற்றும் பார்வையாளர்களைச் சந்திப்பது தொடர்பாக சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது, அன்னை பார்வதி அம்மாள் அவர்களின் பாதுகாப்புக் கருதியும், அவருக்கு தனிமை மற்றும் ஓய்வு கிடைக்கிற வகையிலும் அந்த நிபந்தனைகள் அமைந்துள்ளதாகவே கருதுகிறோம். அந்த வகையில் அன்னை பார்வதி அம்மாளின் உடல் நலத்தை மட்டும் முதன்மையாகக் கொண்டு இத்தகைய நிபந்தனைகளை அரசியலாக்காமல் அவற்றை வரவேற்கக் கடமைப்பட்டுள்ளோம். எனினும், அன்னை பார்வதி அம்மாளுக்கு தமிழக அரசின் செலவிலேயே முழுமையான பாதுகாப்புடன் கூடிய சிறப்பான மருத்துவம் கிடைக்கும் வகையில் தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதிக்க வேண்டுமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
(தொல். திருமாவளவன்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக