பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு விலை உயர்வை முற்றிலுமாக திரும்பப் பெற வேண்டும்!

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு
விலை உயர்வை முற்றிலுமாக திரும்பப் பெற வேண்டும்!
தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!


மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியதைப் போல இந்திய அரசு மீண்டும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை திடீரென உயர்த்தியுள்ளது. அத்துடன் ஏழை எளிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய இன்றியமையாத பொருள்களான மண்ணெண்ணெய் விலையையும், எரிவாயு விலையையும் உயர்த்தி உள்ளது. இதனால் வழக்கம்போல் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த அடித்தட்டு மக்களே வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள்.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயரும்போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என இந்திய அரசு அவ்வப்போது விளக்கம் தருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அடித்தட்டு மக்களின் பொருளாதார வலிமையை கருத்தில் கொண்டு, குறிப்பாக, அவர்களின் வாங்கும் சக்தியை கணக்கில் கொண்டு, அதன் அடிப்படையில் விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் மக்களுக்கான ஓர் அரசின் கடமையாக இருக்க வேண்டும். மாறாக, ஏழை எளிய மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படும் வகையில் இவ்வாறு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு ஆகியவற்றின் விலையை தாறுமாறாக உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியதாகும். எனவே, இந்திய அரசு இந்த விலை உயர்வை முற்றிலுமாக திரும்பப் பெற வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறோம்.

இவண்
                                              
(தொல். திருமாவளவன்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக