நெய்வேலி நிலக்கரித் தொழிலாளர்கள் போராட்டம்: இந்திய அரசு உடனடி தீர்வுகாணவேண்டும்!


நெய்வேலி நிலக்கரித் தொழிலாளர்கள் போராட்டம்:
இந்திய அரசு உடனடி தீர்வுகாணவேண்டும்!
தொல். திருமாவளவன் வற்புறுத்தல்

நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக தீவிர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் இழுபறி நிலையிலேயே தொடர்வதனால் இப்போராட்டம் மென்மேலும் வலுப்பெற்று வருகிறது. இதனால், மின்உற்பத்தியில் வெகுவாகப் பாதிப்பு நேரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் ஏராளமான சுரங்கத் தொழிற்சாலைகள் பெருமளவில் நலிவடைந்து, செயலிழந்து மூடப்பட்டுவிட்டன. ஆனால், தொடர்ந்து வெற்றிகரமாகவும் மிகப்பெருமளவில் இலாபகரமாகவும் இயங்கி வருகிற தொழிற்சாலையான இந்த நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றிவரும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதில் நிர்வாகமும் இந்திய அரசும் மெத்தனம் காட்டிவருகின்றன.


இந்நிலையில், இந்த வேலை நிறுத்தத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை எல்லாம் சுட்டிக்காட்டி, விரைவாக இப்பிரச்சனைக்குத் தீர்வுகாண வேண்டும் எனத் தமிழக அரசு இந்திய அரசை வற்புறுத்தியுள்ளது. ஆனாலும், இச்சிக்கலுக்குத் தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டாமல் தமிழக அரசின் வேண்டுகோளைப் பொருட்படுத்தாமல் இந்திய அரசு அலட்சியப்படுத்தி வருகிறது. இந்தப் போக்கை விடுதலைச்சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. தொழிலாளர்களின் ஞாயமான, சனநாயகப் பூர்வமான, சட்டப்பூர்வமான கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் இந்திய அரசு உடனடித் தீர்வுகாணவேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
(தொல்.திருமாவளவன்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக