நெய்வேலி தொழிலாளர்கள் பிரச்னை: இந்திய அரசை தமிழக அரசு வற்புறுத்த வேண்டும்!
நெய்வேலி தொழிலாளர்கள் பிரச்னை:
இந்திய அரசை தமிழக அரசு
வற்புறுத்த வேண்டும்!
தொல்.திருமாவளவன் கோரிக்கை
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர்ந்து போராடி வருகின்றனர். பணிநிரந்தரம், சம்பள உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில ஆண்டுகளாகவே இப்போராட்டத்தை நடத்திவருகின்றனர். அவர்களில் சுமார் 5000 பேரை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையிலும் நிர்வாகம் அத்தீர்ப்பை ஒருபொருட்டாகவே மதிக்கவில்லை. அத்தீர்ப்பினை நடைமுறைப்படுத்துவதற்காக எந்த முனைப்பையும் நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என்பதே மிகுந்த வேதனைக்குரியதாகும். தொழிற்சங்கங்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்காக நிர்வாகத்துடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பயனளிக்கவில்லை.
அத்துடன் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மட்டுமின்றி ‘ஹவுஸ்காப்’, ‘இன்கோ சேர்வ் சொசைட்டி’ மற்றும் ‘சுகாதாரத் தொழிலாளர்கள்’ உள்ளிட்ட அனைத்துத் தரப்பு உழைக்கும் பிரிவினரின் நலன்களில் நிர்வாகம் அக்கறை செலுத்தாமல் அவர்கள் தொடர்பாக ஏற்கெனவே உள்ள ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தாமல் காலம் கடத்தியும் புறக்கணித்தும் வருகிறது. நிறுவனத்தின் இத்தகைய மெத்தனப் போக்கினால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும்; அதனால் தமிழக அரசுக்கே நெருக்கடி உருவாகும்.
எனவே, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு இந்திய அரசை வற்புறுத்தி ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிட ஆவன செய்யுமாறு விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
(தொல். திருமாவளவன்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக