தி.மு.க. கூட்டணியில் குழப்பம் விளைவிக்க சதி: பொறுமையோடு அமைதிகாக்க வேண்டும் விடுதலைச்சிறுத்தைகளுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள் !

 புதுதில்லியில் அண்மையில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சிங்கள இனவெறியன் இராஜபக்சேவை இந்திய அரசு அழைத்துச் சிறப்பித்தது. இந்த நிகழ்வு கோடானுகோடி மானமுள்ள தமிழர்களின் நெஞ்சை நெருப்பாய்ச் சுட்டது. முள்ளிவாய்க்காலில் கடைசி ஓரிரு  நாட்களில் மட்டுமே சுமார் 50,000 தமிழர்களைப் படுகொலை செய்த படுபாவி இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டுமென சர்வதேச அளவில் மனிதநேய ஆர்வலர்கள் வலியுறுத்திக்கொண்டிருக்கிற இந்தச் சூழலில், இந்திய அரசு இராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்புக் கொடுத்ததும் விருந்தளித்ததும் ஈழத்தமிழர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்தத் தமிழர்களையும் அவமதிப்பதாகவே அமைந்தது. இந்நிலையில், விடுதலைச்சிறுத்தைகளின் வேதனைகளை வெளிப்படுத்தும் வகையில் அண்மையில் இதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் (ஜூனியர் விகடன்) எமது கண்டனத்தைப் பதிவுசெய்தேன். கூட்டணி அரசியலைத் தாண்டி மனிதநேய அடிப்படையில்தான் என் ஆழ்மனதில் பொங்கிய உணர்வுகளைக் கொட்டினேன். வேறெந்த அரசியல் உள்நோக்கமும் அதில் இல்லை. நாடாளுமன்றத்தில் எனது கன்னி உரையிலேகூட  இந்திய அரசு தமிழினத்திற்கு மாபெரும் துரோகம் இழைத்துவிட்டது என்பதையும் பதிவு செய்தேன். ஈழத் தமிழினத்திற்கு எதிராக எப்போதெல்லாம் சதிச்செயல்கள் அரங்கேற்றப்படுகின்றனவோ அப்போதெல்லாம் விடுதலைச்சிறுத்தைகள் கண்டனம் செய்யத் தவறியதில்லை. அதன்படியேதான் தற்போதும் கண்டித்திருக்கிறோம். அத்துடன், அதனையொட்டி தமிழகத்தில் உள்ள காங்கிரசின் நிலை குறித்தும் எமது கருத்துக்களை வெளியிட்டேன். நாகரிகத்தின் எல்லை மீறாமல் தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் மானுட கண்ணியத்தைப் போற்றும் வகையில், அந்த  இதழுக்கு என் நேர்காணலாய் சில கருத்துக்களை நான் கூறியிருந்தேன். ஆனால்,  கருத்துக்குக் கருத்தை முன்நிறுத்தாமல் வன்முறைகளைத் தூண்டும் வகையில், ஒரு சிலர் செயல்படத்தொடங்கியுள்ளனர்.

  எதிர்வரும்  சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் காய்களை நகர்த்துகிறவர்கள் திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் சதி வேலைகளில் இறங்கியுள்ளனர். சென்னை, அசோக் நகர் பகுதியில் நிறுவப்பட்டிருந்த ராஜீவ்காந்தியின் அரை உருவச்சிலையை அவமதித்ததாக விடுதலைச்சிறுத்தைகள் மீது பழிபோட்டு சாலைமறியல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமிழகம் தழுவிய அளவில் வன்முறையைத் தூண்டிவிட முயற்சித்து வருகின்றனர். கொள்கைரீதியான கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தலைவர்களை அவமதிப்பது போன்ற கீழ்த்தரமான சதிச் செயல்களை விடுதலைச்சிறுத்தைகள் ஒருபோதும் செய்ததில்லை. திட்டமிட்டே தமிழகத்தில் வன்முறையைத் தூண்டவும் திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தவும் இத்தகைய இழிவான செயல்களில் ஒரு சிலர் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது. எத்தகைய கருத்து மோதல்கள் இருந்தாலும் தனி மனித உறவுகளில் நாகரிகமான அணுகுமுறைகளையே கையாண்டு வருகிறோம். ராஜீவ் சிலை அவமதிப்புக்கும் விடுதலைச்சிறுத்தைகளுக்கும் துளியளவும் தொடர்பில்லை என்பதை உண்மையான காங்கிரசுக்காரர்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

  ராஜீவ் சிலையை  அவமதித்ததில் தமிழக முதல்வரையும் தொடர்புபடுத்தி அவருடைய தூண்டுதலில்தான் இது நிகழ்ந்திருக்கிறது என்று அவதூறு பரப்புவதிலிருந்து அத்தகைய நபர்களின் அரசியல் உள்நோக்கத்தையும் சதித் திட்டத்தையும் அப்பாவி காங்கிரசுத் தொண்டர்களும் தமிழகப் பொதுமக்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். இத்துடன், இராஜபக்சே அழைப்பு தொடர்பாக நான் அளித்த பேட்டியின் மூலம் தனிப்பட்டமுறையில் உண்மையான காங்கிரசுத் தொண்டர்களின் மனம் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  திமுக கூட்டணியை விரும்பாதவர்கள் விடுதலைச்சிறுத்தைகளை ஒரு சாக்காக வைத்து பரப்புகிற  அவதூறுகளுக்கும் வன்முறை செயல்களுக்கும் எதிர்வினை ஆற்றவேண்டும் என்கிற அடிப்படையில் என் உயிரின் உயிரான விடுதலைச்சிறுத்தைகள் போராட்ட நடவடிக்கைகளில் ஏதும் ஈடுபடவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். கட்சித் தலைமையின் வழிகாட்டுதலின்றி தனிப்பட்ட முறையில் விடுதலைச்சிறுத்தைகள் யாரும் உணர்ச்சிவயப்பட்டு தன்னிச்சையாகச் செயல்படவேண்டாம் எனவும் சகிப்புத்தன்மை யோடும் பொறுமையோடும் அமைதிகாக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.


 இவண்

தொல். திருமாவளவன்

3 கருத்துகள்:

தமிழகத்தில் 1967-ல் இருந்து இன்று வரை காங்கிரஸ் பின்னடைவை நோக்கித்தான் சென்றுகொண்டு இருக்கிறது. தனது அகில இந்திய அளவிலான சக்தியைப் பயன்படுத்தியே இப்போது தமிழக காங்கிரஸ் பேரம் பேசி வருகிறது. ''டெல்லி''யைக் கைகாட்டித்தான் தமிழகத்தில் அவர் கள் குப்பை கொட்டுகிறார்கள். தனித்து ஆட்சியை உருவாக்கக்கூடிய சக்தி காங்கிரஸக்குக் கிடையாது. இது தி.மு.க-வுக்கும் தெரியும்... அ.தி.மு.க-வுக்கும் தெரியும். ஆனால், ஒருவரை ஒருவர் வீழ்த்துவதற்கான துணையாக இரு பெரிய கட்சிகளும், காங்கிரஸை கையில் வைத்துக்கொள்ளப் பார்க் கிறார்கள். அதனால்தான், காங்கிரஸக்கு ஒவ்வொரு முறையும் பம்பர் பரிசு அடிக்கிறது. இரு கட்சிகளின் தோள்களிலும் ஏறி காங்கிரஸ்தான் பயணிக்கிறதே தவிர, காங்கிரஸால் எந்தக் கட்சியும் வளரவில்லை.

sundar
23 அக்டோபர், 2010 அன்று 10:16 AM comment-delete

இலங்கையில் சண்டை முடிந்து 18 மாதங்கள் ஆகியும் ராசபக்சே வடக்கு-கிழக்கில் முள்வேலிகளில் வாடும் மக்களுக்கு எந்தவித நிவாரணமும் கொடுக்கவில்லை. வடக்கு-கிழக்கு சிங்களமயமாக்கப்படுகின்றது. இன்னும் அரசியல் தீர்வு கொண்டுவரப்படவில்லை ஆனால் இரண்டுக்கு மேல் அதிபராகும் சட்டம் மட்டும் மூன்றில் 2 பங்கு ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இதையெல்லாம் தட்டிக் கேட்கும் திருமாவைக் குறை சொல்லும் கார்த்தி சிதம்பரம் இதையெல்லாம் ராசபக்சேயைக் கேடபாரா - இளைஞரணி என்ற முறையில்?

RajaChezhiyan
23 அக்டோபர், 2010 அன்று 10:21 AM comment-delete

எழுச்சி தமிழருக்கு, கார்த்திக் சிதம்பரம் போன்றோர்கள் விடும் அறிக்கைகளுக்கு நீங்கள் பதில் அறிக்கை விட்டு உங்களுடைய நேரத்தை வீணாக்க வேண்டாம். அவர் உங்களுக்கு நிகரானவர் இல்லை.

siva
23 அக்டோபர், 2010 அன்று 10:29 AM comment-delete

கருத்துரையிடுக