இராஜீவ் சிலை அவமதிப்பு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்! தொல். திருமாவளவன் கோரிக்கை

டந்த 23-10-2010 அன்று சென்னை அசோக் நகரில் இராஜீவ் காந்தியின் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குடிபோதையில் அத்தகைய செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். ஆனால் அத்தகைய செயலில் விடுதலைச் சிறுத்தைகள் ஈடுபட்டதாகவும், குறிப்பாக திருமாவளவன்தான் தூண்டிவிட்டார் என்றும் காங்கிரஸ் தரப்பில் ஒரு சிலர் தொடர்ந்து அப்பட்டமான அபாண்டப் பழியைச் சுமத்தி வருகின்றனர். அத்துடன் திருமாவளவனைக் கைது செய்தே தீரவேண்டும் என்று வற்புறுத்துவதோடு ஆங்காங்கே வன்முறைகளைத் தூண்டும் வகையில் தாறுமாறாகப் பேசியும் செயல்பட்டும் வருகின்றனர். திருமாவளவன் ஒழிக என்ற முழக்கங்களோடு நடுத்தெருவில் உருவ பொம்மைகளைக் கொளுத்துகின்றனர்.

உண்மை நிலையை அறிந்த உண்மையான காங்கிரஸ்காரர்கள் அத்தகைய வன்முறைகளைத் தூண்டும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதும், அரசியல் ஆதாயம் தேட விரும்பும் ஒரு சிலரே இவ்வாறு சட்டம்Šஒழுங்கைச் சீரழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் பொதுமக்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.

விடுதலைச் சிறுத்தைகளைப் பொறுத்தவரையில் எத்தகைய கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் இதுபோன்ற இழிவான செயல்களில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை; ஈடுபடவும் மாட்டோம். தம்முடைய அரசியல் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக விடுதலைச் சிறுத்தைகளைப் பகடைக் காயாகப் பயன்படுத்த முயற்சிப்பதும், அபாண்டப் பழி சுமத்த முனைவதும் வேடிக்கையாக உள்ளது. விடுதலைச் சிறுத்தைகளை வீம்புக்கு வம்பிழுத்து வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்துவதற்கும், தாங்கள் விரித்து வைத்திருக்கும் சதி வலையில் சிக்க வைக்கவும் சிலர் தீவிரமாய் முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் சகிப்புத் தன்மையோடும், பொறுமையோடும் அமைதிகாக்க வேண்டும் என வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். கட்சியைக் கட்டமைக்கும் களப்பணிகளில், உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் ஒவ்வொருவரும் தீவிர கவனம் செலுத்த வேண்டுகிறேன். நம் மீது எத்தகைய அவதூறுகளைப் பரப்பினாலும் அவற்றை அமைதியாகவும் அறவழியிலும் எதிர்கொள்ள வேண்டுமே தவிர எள்முனையளவும் உணர்ச்சிவயப்பட்டுவிடக்கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

காவல்துறை இரண்டு இளைஞர்களைக் கைது செய்துள்ள நிலையிலும் அவர்களுக்கு அதில் தொடர்பில்லை என்று சிலர் வாதிட்டு வருகிற நிலையில், அது தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.பி.சி.ஐ.டி.) மாற்ற வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். உண்மைக் குற்றவாளிகள் யார் என்பதை உலகுக்கு அடையாளம் காட்டுவதோடு இத்தகைய இழிவான செயல்கள் இனி நடவாமல் தடுக்க வேண்டுமாறும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இவண்

(தொல். திருமாவளவன்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக