குழந்தையின் உணவு





ஸ்திவாரம் நன்றாக அமைந்தால்தான் கட்டிடம் உறுதியாக அமையும் என்பது முன்னோர்கள் வாக்கு. இந்த முதுமொழிச் சொல் கட்டடத்திற்கு மட்டுமல்ல. மனிதனுக்கும்தான். பிறந்த குழந்தைக்கு ஆரம்பத்தில் கொடுக்கப்படும் உணவே எதிர்காலத்தில் அக்குழந்தை நோயில்லா மனிதனாகவும் அறிவில் சிறந்த வல்லுநராகவும் வளர முடியும். பிறந்தது முதல் குழந்தைக்கு எத்தகைய உணவுகளை கொடுக்க வேண்டும், எப்படிக் கொடுக்க வேண்டும் என்பது பற்றி விரிவாக தெரிந்துகொள்வது ஒவ்வொரு தாய்மார்களின் முக்கிய கடமையாகும்.

குழந்தை பிறந்த முதல் 3 மாதம் வரை

பொதுவாக குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்களுக்கு தாய்ப்பாலைத் தவிர வேறு எந்தவகையான உணவும் கொடுக்கத் தேவை இல்லை. ஏனெனில் முதல் மூன்று மாதங்களுக்கு தாய்ப்பாலே குழந்தைக்குப் போதுமானது.

குழந்தைக்கு முதல் உணவும் முக்கிய உணவும் தாய்ப்பால் தான். அதுவும் குழந்தை பிறந்த முதல் 3 நாட்கள் சுரக்கும் சீம்பால் என்று சொல்லப்படும் மஞ்சள் நிற திரவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது குழந்தைக்கு நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துகிறது. குழந்தைக்கு வேண்டும் போதெல்லாம் வேண்டிய அளவுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியமாகும். எக்காரணம் கொண்டும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்க்கக் கூடாது.

ஏதேனும் காரணங்களால் தாய்ப்பால் பற்றாக்குறை இருந்தால் பசும் பாலில் சம அளவு தண்ணீர் விட்டு சிறிது சர்க்கரை கலந்து கொடுக்க வேண்டும். தாய்ப்பாலில் இருப்பதை விட கொழுப்பும் புரதமும் பசும்பாலில் அதிகம். ஆனால் சர்க்கரையின் அளவு குறைவு. இதனால் சர்க்கரை சிறிது சேர்க்க வேண்டும்.

மூன்று முதல் நான்கு மாதம் வரை

குழந்தைக்கு தாய்ப்பால் தொடர்ந்து கொடுத்து வர வேண்டும். தாய்ப்பாலை நிறுத்தினால் குழந்தையின் ஆரோக்கியம் கெடுவதுடன், தாய்க்கு புற்றுநோய் வருவதற்கும் காரணமாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்று மாதம் முடிந்தவுடன் குழந்தைகளுக்கு காய்கறிகள் சூப், சிறிது உப்பு அல்லது சர்க்கரை கலந்து கொடுக்கலாம்.

மேலும் பழச்சாறுகளை வெந்நீரில் கலந்து கொடுக்கலாம். முதலில் 2 அல்லது 3 தேக்கரண்டி அளவில் கொடுக்க ஆரம்பித்து பின் படிப்படியாக 50 மி.லி., 100 மி.லி. அளவு கொடுக்கலாம். இக்காலங்களில் 1 சொட்டு மீன் எண்ணெய் கொடுக்கலாம்.

4 முதல் 6 மாதம் வரை

நான்காம் மாதத்திலிருந்து குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க வேண்டும். இந்த மாதத்தில்தான் குழந்தையின் ஜீரண மண்டலம் எளிதில் செரிக்கும் கூழ் போன்ற உணவுகளை ஜீரணிக்கத் தயாராக இருக்கும். இதனால் நான்காவது மாதம் முதலே உணவு கொடுக்க ஆரம்பிக்கலாம்.

கடைகளில் டின்களில் அடைத்து விற்கப்படும் மாவு உணவுகளை விட எளிதாக நம் வீட்டிலேயே அத்தகைய உணவுகளை தயாரித்துக் கொடுக்கலாம்.

அரிசி மாவு - 2 தேக்கரண்டி

பசுவின் பால் - 100 மி.லி

சர்க்கரை - 1 ஸ்பூன்

நெய் அல்லது தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்

அரிசி மாவு தயாரிக்க புழுங்கல் அரிசியே சிறந்தது. புழுங்கல் அரிசியை நன்கு சுத்தமாக கழுவி, சிறிது நேரம் ஊறவைத்து, பின் நன்கு வடிகட்டி, நல்ல வெள்ளைத் துணியில் காயவைத்து நன்கு மைய அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

2 தேக்கரண்டி அரிசி மாவை அரை டம்ளர் நீரில் போட்டு அதில் 100 மி.லி. பாலையும் கலந்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அரிசி மாவு நன்கு வெந்தவுடன் 1 ஸ்பூன் சர்க்கரையும், நெய் அல்லது தேங்காய் எண்ணெயை சேர்த்து சிறிது கொதிக்க வைத்து ஆறவைத்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இதில குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன.

அரிசி மாவில் - கார்போஹைட்ரேட்

பாலில் - கால்சியம் , புரதம்

நெய் - கொழுப்பு

சர்க்கரை - குளுக்கோஸ்

என குழந்தைக்கு வேண்டிய சமச்சீர் உணவாக இது உள்ளது.

தாய்ப்பாலையும், மேற்கண்ட உணவையும் தினமும் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை மாறி மாறி கொடுத்து வந்தால் குழந்தை வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.

இந்த மாவு, டின்களில் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் மாவு உணவுகளை விடச் சிறந்தது.

6 முதல் 9 மாதம் வரை

ராகி, கோதுமை, சோயா, பொட்டுக்கடலை, முந்திரி, பாதாம் இவைகளை சேர்த்து அரைத்து மாவுக் கஞ்சியாக கொடுக்கலாம்.

முதலில் கொடுத்த தாய்ப்பால், மாவுக் கஞ்சியுடன் இந்த சத்துமாவுக் கஞ்சியையும் சேர்த்துக்கொடுத்தால் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும் உடல் உறுப்புகள் நன்கு பலப்படும். எலும்புகள் பலப்படுவதுதால் குழந்தை நன்கு வளரும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

9 மாதம் முதல் 12 மாதம் வரை

மேலே குறிப்பிட்ட வகைகளுடன் சற்று திடமான உணவுகளை கொடுக்க வேண்டும். இந்தக் காலங்களில் தான் குழந்தைகளுக்கு பல் முளைக்கும். இக்காலத்தில் எளிதில் சாப்பிட ஏதுவான உணவுகள், பழத்துண்டுகள், நறுக்கி கொடுக்கலாம்.

1 வயது முதல் 2 வயது வரை கொடுக்க வேண்டிய மருந்துகள் பற்றி வரும் இதழில் விரிவாகக் காண்போம்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக