இளையராஜா: ஃபிலார்மோனிக்கிலிருந்து பண்ணைப்புரம் வரை !!

திருச்சி – பெல் (BHEL)   அக்கிரகாரத்தைச் சேர்ந்த குழுவொன்று பாலே நடன நிகழ்ச்சிக்கு சிம்பனி இசைத் துணுக்குகளைச் சேகரித்துத் தொகுக்க (திருட) ஒரு பாடல் பதிவுக் கூடத்திற்கு வந்தது. ஆங்கிலப் படங்களில் சிம்பனி இசை ஒலிக்கத் தொடங்கியவுடனே ஒரு பிராணி வாய் திறந்தது. ”ஆகா… என்ன இமாஜினேஷன்! (கற்பனை).என்னமோ இளையராஜா இளையராஜாங்கறாளே. அவனால இப்படி யோசிக்க முடியுமா?”
தங்களுக்குப் புதியதொரு இசை மேதை கிடைத்துவிட்டானென மகிழ்கிறது லண்டன் பிலார்மோனிக் குழு. ”உலகத்தில் சொல்ல வேண்டியதை எல்லாம் 3000 வருடங்களுக்கு முன்பே கங்கைக் கரையிலும் காவிரிக்கரையிலும் சொல்லி முடித்துவிட்டதாக மமதை கொண்டிருக்கும் அரிசி உணவை உட்கொள்ளும் பிராணிகளோ” (புதுமைப்பித்தன்) சங்கடத்தில் நெளிகின்றன.
இளையராஜாவின் சிம்பனி பற்றி எழுதவேண்டும்; ஆனால் எழுதக்கூடாது. இதைச் சனாதனிகள் செய்து விட்டார்கள் – எழுத வேண்டியதை எழுதாமல் இருட்டடிப்பு செய்ததன் மூலம். ராக் என்றால் என்ன? ராப் என்றால் என்ன? மைக்கேல் ஜாக்சன் கொண்டு வரும் இசைக் கருவிகளின் மொத்த எடை என்ன? பாபாசெகல் வெற்றியின் ரகசியம் என்ன? – என்று கூவத்தில் முக்குளித்து முத்தெடுக்கும் பார்ப்பனப் பத்திரிகைகள், சிம்பனி என்றால் என்ன, இளையராஜாவுடைய சாதனையில் பரிமாணம் என்ன என்ற கேள்விகளை மட்டும் எழுப்பிப் பரிசீலிக்கவில்லை. இந்த மவுனத்திற்குக் காரணம் அழுக்காறு, அச்சம்.
அவாள், ஆசார, நியமங்களை மீறிக் கடல் கடந்தார்கள்; ஆங்கிலக் கல்வி கற்றார்கள்; குடுமியை மறைத்து டர்பன் கட்டினார்கள்; கோட்டு, சூட்டு போட்டார்கள்; வெள்ளைக்காரியைக் கூத்தியாளாக வைத்துக் குடித்தனம் நடத்தினார்கள். எல்லாம் சரிதான், ஒரு சிம்பனி இசை அமைக்க முடியவில்லையே ஏன்? செம்மங்குடியிடமும் பாலமுரளியிடமும் ‘நீங்கள் ஏன் இதுவரை சிம்பனி அமைக்கவில்லை’ என்று பேட்டி எடுத்திருக்கலாமே. ‘சரிகமபதநி’க்குள் சகலமும் அடக்கம் என்கிறீர்களே சிம்பனி அதற்குள் அடங்குமா? அடங்காதா? ”சிவபெருமான் அருளிய இசையில் சிம்பனி உண்டா” என்று ஆய்வுக் கட்டுரை எழுதியிருக்கலாமே. இவை எதையும் மேற்படி பத்திரிகைகள் செய்யவில்லை. தங்கள் சங்கீத கலாநிதிகளுக்கும் சிம்பனிக்கும் காததூரம் என்பது அவர்களுக்குத் தெரியும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக