`தமிழ் ஈழத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்` என்று தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

திண்டுக்கலில் நேற்று தமிழர் இறையாண்மை மாநாடு விளக்கப்பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

இலங்கையில் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் உண்ண உணவு, உடுக்க உடை இன்றி அல்லல்பட்டு வருகின்றனர். முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழர்கள் அனாதைகளாக திரிகின்றனர். இந்திய அரசு வழங்கிய நிதி, தமிழ் மக்களுக்கு முறையாக செல்லவில்லை. இலங்கை தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை கட்டிக்கொடுக்க இந்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

செஞ்சிலுவை சங்கம் போன்ற தொண்டு நிறுவனங்கள் மூலம், தமிழர்களுக்கு மறுவாழ்வு பணி மேற்கொள்ள வேண்டும். தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள், சிங்கள மயமாக்கப்பட்டு வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ் ஈழத்தை இந்திய அரசு அங்கீகரிக்கவேண்டும்.

அடுத்தடுத்து மத்திய மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா, இலங்கை சென்று வருவதால் எந்த முன்னேற்றமும் நிகழவில்லை.இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். உலகம் முழுவதும் வாழும் 10 கோடி தமிழர்களை அங்கீகரிக்கும் வகையில், தமிழ் ஈழத்தைஉருவாக்கவேண்டும். என அவர் கேட்டுக்கொண்டார்.

மாவட்டச் செயலாளர் வில்லவன்கோதை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்  மாநிலத் துணைச் செயலாளர் கனியமுதன், மாநிலப் பொருளாளர் யூசுப் உள்ளிட்ட மாநில -  மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக