டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் – சினிமா வடிவில் ஒரு நிஜ ஹீரோவின் வரலாறு!


வரலாற்று நாயகன், பேரறிஞர், துணிச்சலான தலைவன்…. இந்த வார்த்தைகளுக்கு வெளியில் அர்த்தம் தேட வேண்டியதில்லை. இந்த தேசத்திலேயே ஒருவர் வாழ்ந்து, வழிகாட்டி, இன்றும் ஒளிவிளக்காகத் திகழ்கிறார்… அவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்.

தலித் இன மக்களுக்கு மட்டுமல்ல.. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விருளைப் போக்க உதித்த சூரியன்.

பெரும்பாலும் தலைவர்கள் மக்களை உணர்ச்சி வசப்பட வைப்பார்கள். கூச்சலிட வைப்பார்கள்… ஆட்டுமந்தைக் கூட்டமாகவே எப்போதும் அவர்கள் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால் சுயசிந்தனை பெற வேண்டும் என்று மட்டும் விரும்பவே மாட்டார்கள்.

ஆனால் அம்பேத்கர் என்ற சூரியன் மட்டும் பகுத்தறிவு ஒளியை தன் இனத்தின் அடிமை மக்களுக்கு தாராளமாய்த் தந்தது. கல்வியும், அரசியல் – அதிகார கைக்கொள்ளலுமே, தலித் இன மக்களின் சமூக அடிமத்தளையைக் கட்டறுக்கும் என்பதை ஓயாது ஒலித்துக் கொண்டே இருந்த மாபெரும் சிந்தனாவாதி டாக்டர் அம்பேத்கர்.

மிகச் சிறந்த பொருளியல் அறிஞர், அரசியல் தத்துவ மேதை, சமூக சீர்த்திருத்தவாதி, பகுத்தறிவு சிந்தனையாளன், கேட்கும் எவரையும் அடித்து வீழ்த்தும் அபாரமான பேச்சாளர், வரலாற்று ஆசான், மிகச்சிறந்த எழுத்தாளர், ஆங்கிலேயர்களும் வியக்கும் ஆங்கில அறிவுக்குச் சொந்தக்காரர்… இத்தனை அறிவையும் பெருமைகளையும் தன் இன மக்களும் பெற வேண்டும் என்பதற்காக தன் குடும்பம், உடல் நலன் அனைத்தையும் மறந்து கடைசி மூச்சு வரை உழைத்தார்.

தன் இறுதிமூச்சு வரை சமூக அடிமைத்தன விலங்கை உடைக்க அவர் களமாடிய போராட்டங்களும், சந்தித்த அவமானங்களும் கொஞ்சமல்ல. நான் ஒரு இந்துவாகப் பிறந்தேன்… ஆனால் இந்த கீழ்மைத் தனம் நிரம்பிய ஒரு மத அடையாளத்தோடு நிச்சயம் இறக்க மாட்டேன் என்று சபதமிட்டு, புத்த மதத்துக்கு மாறி இந்து சனாதனத்துக்கு சாட்டையடி கொடுத்தவர் அம்பேத்கர்.

லண்டன் வட்ட மேஜை மாநாட்டின்போது, ஹரிஜனர்களின் காவலன் நான் என்று காந்தி போன்றவர்கள் போலி கோஷமிட்டபோது, அவர்களின் முகத் திரையை அங்கேயே கிழித்துப் போட்டவர் அம்பேத்கர் ஒருவர்தான். அந்த மனிதரின் துணிச்சல் அன்றைக்கு காந்தியை மட்டுமல்ல, அகிலத்தையே ஆட வைத்தது என்றால் மிகையல்ல!

இப்படியொரு அசாதாரண தலைவனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வருகிறது தமிழில்.

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் எனும் பெயரில் 2002-ல் வெளியான இந்தப் படம், அசாதாரண கால தாமதத்துக்குப் பிறகே தமிழுக்கு வருகிறது.

மம்முட்டி மிகச் சிறப்பாக நடித்த இந்தப் படம் சர்வதேச அளவில் பாராட்டுக்களையும் விருதுகளையும் குவித்தது.

காந்தியைப் பற்றி வெளிப்படையான விமர்சனங்களைக் கொண்ட ஒரே படம் என்றால் அது அநேகமாக பாபாசாகேப் அம்பேத்கராகத்தான் இருக்கும்.

அம்பேத்கரின் புகழ்பெற்ற குற்றச்சாட்டான, “காந்தியை துறவி என்றோ, மகாத்மா என்றோ அழைக்காதீர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. சீஸனுக்கு சீஸன் அவர் குணம் மாறும். ஆதரவும் மாறும். ஆனால் இந்து மதத்தில் ஒரு அடிமைகளாக தலித்துகள் காலம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மாறாது”, என்பதை இந்தப் படத்தில் அப்படியே அனுமதித்துள்ளது பெரிய விஷயம்.

பூனா உண்ணாவிரதத்தில் தன்னை நெருக்குதலுக்குள்ளாக்கி உடன்பட வைத்தபோது காந்தியின் முகத்துக்கு நேரே அம்பேத்கர் இப்படிச் சொல்கிறார்: “காந்திஜி, உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான். ஆனால் அதை அடிக்கடி கையிலெடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும். நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த தேசத்துக்கு நீங்கள் தேவைப்படலாம்!”

இந்த நிகழ்வும் வசனங்களும் கூட அம்பேத்கர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

அம்பேத்கராக இந்தப் படத்தில் வாழ்ந்துள்ளவர் மம்முட்டி. அம்பேத்கரின் முதல் மனைவியாக ‘சலாம் பாம்பே’ புகழ் சோனா குல்கர்னி நடித்துள்ளார். மம்முட்டிக்கு சிறந்த நடிப்புக்காக தேசிய விருது அளிக்கப்பட்டது இந்தப் படத்துக்காக.

ஒரு மகத்தான மக்கள் தலைவரைப் பற்றிய படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் என்று அமெரிக்கப் பத்திரிகைகள் புகழாரம் சூட்டின. பிரிட்டிஷ் திரைப்பட விழாவில் அனைத்து இயக்குநர்களும் ஒருமித்த குரலில் பாராட்டிய ஒரே படம் அம்பேத்கர்தான்.

தமிழில் வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 3) வெளியாகும் இந்தப் படத்தை மிகச் சிறப்பாக வரவேற்க தலித் இயக்கங்களும், முற்போக்கு சிந்தனை அமைப்புகளும் தயாராகி வருகின்றன.

தலித் மக்கள் என்றல்லாமல், பெண்களுக்கு முழுமையான சுதந்திரத்துக்காக சட்ட வரைவையே முன்வைத்தவர் அம்பேத்கர் மட்டுமே. எனவே அவரது இந்த வாழ்க்கை வரலாற்றை பெண்கள் திரளாகப் பார்க்க வேண்டும். இனவேறுபாடுகளுக்கு அப்பால், மக்கள் பார்க்க வேண்டிய படம் அம்பேத்கர்.


-பிரபா

INOX, SATHYAM,  ESCAPE, ABIRAMI  : சனி & ஞாயிறு காலைக் காட்சி

AGS                   10 a.m,
RAKKI              11.30 a.m & 10 p.m
MAAYAJAL      11.30 a.m
ALBERT             11.15 a.m
UDAYAM          11.30 a.m
PVR                      9.00 p.m                

ஆகிய திரையரங்குகளில் இத்திரைப்படம் ஒளிபரப்பப்படுகிறது. ஆடுகளாய் இருந்த நம்மை சிறுத்தைகளாய் மாற்றிய புரட்சியாளரின் வரலாற்றுப் படத்தை  பாருங்கள்.
-
‘பாபாசாகேப் அம்பேத்கர் திரைபடத்தை’ ஒரு வெற்றி படமாக்கவேண்டியது அல்லது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது நம் கடமை.

அதன் துவக்கமாக, இன்று வெளியாகிற ‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்’ திரைப்படத்தை குடும்பம் குடும்பமாக சென்று பார்க்கவும், அடுத்தவர்களுக்கு பரிந்துரைக்கவும் வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


4 கருத்துகள்:

The movie which I am waiting for. So happy to see that the dialogues about Mr MK Gandhi wasnt censored. I would love to see the movie and will come up with my review - Prabha

3 டிசம்பர், 2010 அன்று 10:58 AM comment-delete

இன்று தலித் ஒருவன் கல்வி பெற முடிகிறதென்றால்,தன்மானத்தொடு வாழ முடிகிறதென்றால்,
அது அவர் ஒருவரால் தான்.
காந்தியின் முகத்திரையை கிளித்தெறிந்த மாவீரனின் துணிச்சலுக்கு தலைவணங்குவோம்.

munees
4 டிசம்பர், 2010 அன்று 5:10 AM comment-delete

role model for leaders

Anonymous
9 டிசம்பர், 2010 அன்று 3:30 AM comment-delete

manithaneya panbalar , ghandhi ku yuir pitchai koduthu uyarntha mahaathma

9 டிசம்பர், 2010 அன்று 8:13 AM comment-delete

கருத்துரையிடுக