தமிழீழத்தை சர்வதேசச் சமூகம் அங்கீகரிக்க தலித் மற்றும் சிறுபான்மை உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் ஓரணியில் திரள உறுதியேற்போம்! தொல். திருமாவளவன் புத்தாண்டு வாழ்த்து



காலத்தைக் கணக்கிட்டு வாழக் கற்றுக்கொண்ட மனிதன் தமது வாழ்க்கையில் கடந்த கால நடவடிக்கைகளின் நிறை குறைகளை மதிப்பீடு செய்யவும், அவற்றிலிருந்து எதிர்காலத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்திக்கொள்ளவும் முயற்சிக்கிறான். அவ்வகையில், ஒவ்வோர் ஆண்டிலும் தான் சந்தித்த சவால்களையும், தன்னுடைய சாதனைகளையும், பாதிப்புகளையும் சீர்தூக்கிப் பார்பப்தற்கான ஒரு வாய்ப்பாக ஒவ்வொருவரும் புத்தாண்டு நாளை வரவேற்கிறோம். மத வழி அடிப்படையிலும், மொழி வழி அடிப்படையிலும் மாதங்களை, ஆண்டுகளை தனித்தனியே வரையறை செய்வதும், அவற்றைக் கடைப்பிடிப்பதும் மக்களிடையே நடைமுறையில் உள்ளது. அந்த வரிசையில் ஆங்கிலப் புத்தாண்டும் இடம்பெறுகிறது.

 கடந்த 2010ஆம் ஆண்டு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அல்லது ஒவ்வொரு தமிழனுக்கும் எவ்வாறு அமைந்தது என்பதை மதிப்பீடு செய்யும் வாய்ப்பாக 2011ஆம் ஆண்டின் முதல் நாளை நாம் வரவேற்கக் கடமைப்பட்டுள்ளோம். குறிப்பாக, கிறித்தவ சமூகத்தைச் சேர்ந்த அனைத்துத் தரப்பு மக்களும் இப்புத்தாண்டு நாளை பெரும் மகிழ்வுடன் வரவேற்றுக் கொண்டாடும் நிலையில், அவர்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் புத்தாண்டுத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

 கடந்த ஆண்டு எவ்வாறு கடந்து போனது என்பதை எண்ணிப் பார்க்கும் அதே வேளையில், இந்தப் புத்தாண்டு எவ்வாறு அமைய வேண்டும் என்பது நமது தொலைநோக்குப் பார்வையிலும் திட்டமிடுதலிலும்தான் அடங்கியிருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகளைப் பொறுத்தவரை 2011ஆம் ஆண்டை "விடுதலைச் சிறுத்தைகள் ஆண்டு' எனப் பிரகடனப்படுத்தியிருக்கிறோம். கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை வென்றெடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம். அதைப் போல ஒவ்வொரு தமிழனும் மிகுந்த எதிர்பார்ப்புகளோடும் நம்பிக்கையோடும் 2011ஆம் ஆண்டை வரவேற்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். இந்த ஆண்டு உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதோடு, ஈழத் தமிழர்களின் இன்னல்களைத் துடைக்கும் வகையிலும், அவர்தம் வேட்கையைத் தணிக்கும் வகையிலும் இந்த ஆண்டு அமைந்திடும் என்பது நமது எதிர்பார்ப்பாக உள்ளது. அதனடிப்படையில் தமிழீழத்தை சர்வதேசச் சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்று இந்த ஆங்கிலப் புத்தாண்டு நாளில் தமிழ் மானமுள்ள ஒவ்வொருவரும் உறுதியேற்போம். இந்தக் கனவுகளை நனவாக்கும் வகையில் உலகத் தமிழினம் ஒன்றுபட வேண்டுமெனவும், தலித் மற்றும் சிறுபான்மை உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் ஓரணியில் திரள வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அழைப்பு விடுக்கிறோம். அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

இவண்

1 கருத்துகள்:

vaazhthukkal anna

31 டிசம்பர், 2010 அன்று 6:32 AM comment-delete

கருத்துரையிடுக