உலகப் பந்தில் தமிழர்களுக்கென தனி நாடு உருவாக கருஞ்சிறுத்தைகளும், விடுதலை சிறுத்தைகளும் ஒன்றிணைந்து போராடும்! தமிழர் இறையாண்மை மாநாட்டில் தமிழர் தலைவர் பிரகடனம்!

உலகப் பந்தில் தமிழர்களுக்கென தனி நாடு உருவாக
கருஞ்சிறுத்தைகளும், விடுதலை சிறுத்தைகளும் ஒன்றிணைந்து போராடும்!

தமிழர் இறையாண்மை மாநாட்டில் தமிழர் தலைவர் பிரகடனம்!

சென்னை, டிச. 27- உலகில் தமிழர்களுக்கென ஒரு நாடு உருவாக, ஈழம் மலர விடுதலைச் சிறுத்தை களும், கருஞ்சிறுத்தைகளும் போராடும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைப் பதாகையை எரிமலையாகத் தங்கள் தோள்களில் சுமந்து எழுந்துவிட்டார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு மாநாடு சென்னையையடுத்த மறைமலை நகரில் நேற்று நடைபெற்றது.

பல லட்சம் மக்கள் - பரந்த கடல் என இன எழுச்சி அலைகளை மலை உயரத்திற்கு எழுப்பிய ஓர் உணர்ச்சிக் காவியத்தை நேற்று மாலை எழுதி யது.
தமிழர் இறையாண்மை மாநாடு - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்ட மாநாடு அது.

அணி அணியாக - அலை அலையாக மக்கள் திரள்

நேற்று பிற்பகல் முதற்கொண்டே மறைமலை நகரை நோக்கி தமிழ்நாட்டின் பல திசைகளிலி ருந்தும் வாகனங்கள் மூலமாக விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் தோழர்கள் திரண்டுகொண்டே இருந்தனர். அந்த ஊர் இந்த மக்கள் கடலைத் தாங்குமா என்கிற அளவுக்குப் பொதுமக்களே திகைத்தனர். ஏற்பாடு செய்து அழைத்து வரப்பட்ட கூட்டம் அல்ல இது! எழுச்சி அக்னிக் கடலாக அல்லவா குழுமியிருந்தனர்!

இந்த நிகழ்ச்சியிலே பங்குகொள்ள தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கார்மூலமாகப் புறப்பட்டு, தாம் பரத்தைக் கடந்து மறைமலை நகரை அடை வதற்குள் பெரும்பாடு!

அவ்வளவு வாகனங்கள் - மக்கள் திரள்! மாநாட்டு மேடைக்கு மக்கள் சமுத்திரத்தில் நீந்திதான் அவர் செல்ல வேண்டியிருந்தது. கழகத் தோழர்களும், விடுதலைச் சிறுத்தைத் தோழர்களும் இருமருங்கும் சங்கிலியாகக் கைகளை இணைத்து மேடைக்குக் கொண்டு செல்வதற்குள் போதும் போதும் என்று ஆயிற்று!
அய்.நா. சபைக் கட்டடம்

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், கட்-அவுட்டுகள் மின்னொளியில் பிரகாசித்தன. திறந்த வெளி மேடையாக அமைக்கப்பட்டிருந்தது. மேடையின் பின்புறத்தில் (Backdrop) அய்.நா. சபைக் கட்டடமும், அதில் பல நாடுகளின் கொடி பறக்கும் காட்சியும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

உலகம் முழுவதும் பத்து கோடிக்கும் மேல் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தமிழனுக் கென்று உலகில் ஒரு நாடு இல்லையே, தாயகம் இல் லையே என்ற ஏக்கம் உலகத் தமிழர்கள் மத்தியில் கனன்று கொண்டிருக்கும் உணர்வுதானே! அதன் வடிகாலைத்தான் அந்த மாநாட்டின் அப்பழுக்கற்ற உணர்ச்சியின் பிரவாகத்தில் காண முடிந்தது.

தமிழர் தலைவருக்கு வரவேற்பு

மாநாட்டு மேடைக்கு தமிழர் தலைவர் சென்று கொண்டிருந்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்கள் அன்பு வரவேற்பு முழக்கத்தைக் கொடுத்தார். மக்கள் கடல் பலத்த கரவொலி எழுப்பித் தமிழர் தலைவரை வரவேற்றது.

தமிழர் தலைவருடன் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா. வில்வ நாதன், தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் முத் தையன் (சால்வை அணிவித்து வரவேற்றார்) செயலாளர் அனகை ஆறுமுகம், தாம்பரம் மாவட்ட மாணவரணித் தலைவர் இர. சிவசாமி, தென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செய லாளர் பொறியாளர் கரிகாலன், ஆவடி மாவட்டக் கழக செயலாளர் பா. தெட்சிணாமூர்த்தி, தாம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர் பரந்தாமன், பேராசிரியர் நாத்திகன், கோ.வீ. இராகவன் முதலிய ஏராளமான தோழர்கள் உடன் சென்றிருந்தனர்.

செங்கை மாவட்ட தி.க. தலைவர் அ.கோ. கோபால்சாமி, செயலாளர் துரை. முத்து, சுந்தரம், மண்டலத் தலைவர் எல்லப்பன் முதலியோர் காட்டாங்கொளத்தூரில் வரவேற்றனர். மாவட்டத் தலைவர் சால்வை அணிவித்துத் தமிழர் தலைவரை வரவேற்றார்.

ஏராளமான தோழர்கள் புடைசூழத் தமிழர் தலைவர் தமிழர் இறையாண்மை மாநாட்டுக்குச் சென்றார்.

மாநாட்டு மேடைக்கு வந்த தமிழர் தலைவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பொன்னாடை போர்த்தியும், பூங் கொத்து கொடுத்தும் வரவேற்றார். மாநாட்டு மலரை யும், தமிழ் செம்மொழி நூலினையும் நினைவுப் பரிசாக அளித்தார். தொல். திருமாவளவனுக்குத் தமிழர் தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்தினார்.

தீர்மானங்கள்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. 30 அரிய தீர்மானங் களை முன்மொழிந்தார். ஒவ்வொரு தீர்மானமும் வலம்புரி முத்தாக ஜொலித்தன. 30 தீர்மானங்களையும் முன்மொழிய அவர் எடுத்துக்கொண்ட நேரம் 30 நிமிடங்களாகும்.

முதல் தீர்மானம் இரங்கல் தீர்மானமாகும்.

அதனையடுத்து கட்சித் தலைவரால் முன்மொழி யப்பட்ட ஒவ்வொரு தீர்மானத்தையும் மக்கள் கடல் ஆர்ப்பரித்து வரவேற்றது.

30 தீர்மானங்களும் முன்மொழியப்பட்ட நிலையில், கோடையிடியென மக்கள் மாக்கடல் பலத்த கரவொலி அலைகளை எழுப்பி தீர்மானங்களை நிறைவேற்றிக் கொடுத்தது.

தமிழர் தலைவர் உரை

கொடியை ஏற்றி முடிந்தவுடன், உணர்ச்சிப் பிரவாகத்திற்கிடையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் உரை கருஞ்சிறுத்தையின் கர்ச்சனையாக அமைந்திருந்தது.

தமிழர்களின் எழுச்சி வரலாற்றில் திருப்புமுனை மாநாடு இது. தமிழர்களின் உணர்வைப் பதிவு செய்யும் மாநாடு (பலத்த கரவொலி!). தமிழர்களின் உணர்வினை உலகம் உணர்ந்து கொள்ளச் செய்யும் அச்சாணி மாநாடு.

இங்கு நிறைவேற்றப்பட்ட 30 தீர்மானங்கள் ஒவ்வொன்றும் உலகத் தேசிய இனங்களால் ஆராயப்படக் கூடியவை.

நானும் வழிமொழிகிறேன்!

பல கோடி தமிழர்கள் சார்பாகவும், தந்தை பெரியாரின் தொண்டன், அண்ணல் அம்பேத்கரின் மாணவன் என்ற முறையிலும் இந்தத் தீர்மானங் களை நானும் ஒருமுறை வழிமொழிகிறேன்.

தமிழினம் தளர்ந்து போய்விட்டது என்று நம் எதிரிகள் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் அது தப்புக் கணக்கு; சோதனைகளை வெல்லுவோம் தோள் தூக்கிப் புறப்பட்டோம் என்று காட்டுகிற மாநாடு இது! புலிகளை அடக்கிவிட்டோம் என்று மனப்பால் குடித்தவர்களுக்கு இதோ கருஞ்சிறுத்தைகளும், விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து புறப்பட்டு விட்டன என்று காட்டக்கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க எழுச்சி மாநாடு இது!

மிகப்பெரிய போர்ப் படையை நடத்தும் தளபதியாக எனது அருமைச் சகோதரர் தொல். திருமாவளவன் இந்த எழுச்சி மாநாட்டைக் கூட்டியுள்ளார்.

வெள்ளம்போல் தமிழர் கூட்டம் இது. உடலால் பலராய்க் காண்பினும், உள்ளத்தால் ஒருவராய்க் கூடியிருக்கிறோம்.

பேச்சல்ல - திட்டங்களும் செயல்களுமே முக்கியம்!

நிறைய பேச வேண்டிய அவசியம் இல்லை. இந்த முப்பது தீர்மானங்களையும் எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்று திட்டம் தீட்டுவதுதான் மிக முக்கியம்.

இத்தீர்மானங்கள் நாடெங்கும் விவாதிக்கப்படும் - விவாதிக்கவும்படட்டும். இன்று இல்லாவிட்டாலும், நாளை அரசு சட்டங்களாக வெளிவர வாய்ப்புள்ள தீர்மானங்கள் இவை.

இதே செங்கற்பட்டு மாவட்டத்தில் செங்கற் பட்டில் 1929 இல் தந்தை பெரியார் அவர்களால் கூட்டப்பெற்ற முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் நிறைவேற்றிய தீர்மானங்கள் பிற்காலத்தில் சட்டமானதுண்டு. தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியாவில் மட்டுமல்ல; அந்தத் தீர்மானங்களில் பல வெளிநாடு களிலும் கூட சட்டமாகியுள்ளன. அதேபோல்தான் இத்தீர்மானங்களும் செயல்படுத்தப்பட வேண்டி யவை - நாட்டின் சட்டங்களாக ஆகவேண்டியவை.

நான் கலந்துகொள்வதேன்?

இந்த மாநாட்டில் நான் பங்கேற்க வேண்டும் என்று சகோதரர் தொல்.திருமாவளவன் தொலைப்பேசியில் கேட்டார் - உடனே ஒப்புக் கொண்டேன்.

கருஞ்சிறுத்தைகளாகிய எங்களுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் அதிக வேறுபாடு கிடையாது. ஒரே ஒரு கோடுதான் இடையில் வித்தியாசம்.

நாங்கள் சட்டசபைக்கோ, நாடாளுமன்றத்துக்கோ போகக் கூடியவர்கள் அல்லர் - தேர்தலில் நிற்கக் கூடியவர்களும் அல்லர்.

ஆனால், நாங்கள் சட்டமன்றம், நாடாளுமன்றம் செல்லாவிட்டாலும், யார் அந்த இடத்துக்குச் செல்ல வேண்டுமோ, அவர்களை அனுப்பி வைக்கக் கூடியவர்கள் நாங்கள். தி.க.வும் - தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதுபோலவேதான் விடுதலைச் சிறுத்தைகளும் எங்களுக்கு.

தமிழர்களுக்கு ஒரு தாயகம் வேண்டும்; ஈழத்தில் தனிக்கொடி பறக்கவேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்திடும் வண்ணம் இந்தக் கொடியை நானும், சகோதரர் திருமாவளவனும் இணைந்து ஏற்றியிருக்கிறோம். இந்தக் கொடி தாழாது - வீழாது. இது ஒரு தொடக்கம்!

மதுரையில் நடத்திய ஈழ விடுதலை மாநாடு

மதுரையிலே தமிழ் ஈழ விடுதலை மாநாட்டினைத் திராவிடர் கழகம் நடத்தியது (1983 டிசம்பர் 18) அந்த மாநாட்டிலே ஈழத்துத் தோழன் குமரி நாடன் ஈழ விடுதலைக் கொடியை ஏற்றினான். அதற்கடுத்து அதே உணர்வோடு இங்கு இந்தக் கொடியை ஏற்றியிருக்கிறோம். இது ஒரு அடையாளம்தான் என்றாலும், நாளையோ, நாளை மறுநாளோ கட்டாயம் நடக்கப் போவதுதான்! (பலத்த கரவொலி!).

உலகிலேயே தலைசிறந்த நிருவாகி என்று பெயர் எடுத்தவர் சிங்கப்பூர் அதிபராகயிருந்த லீக்வான்யூ - அவர் ஒன்றும் நம் இனத்துக்காரர் அல்ல; பொதுவான மனிதர்; அவர் எழுதி வெளிவந்துள்ள நூலில் மிகத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். தமிழர்களை அழித்துவிடலாம் என்று ராஜபக்சே நினைக்கலாம் - ஆனாலும், அதில் அவர் வெற்றி பெற முடியாது. ஈழத்திலே ஒரு நாள் தமிழர்கள் தங்கள் நாட்டை அடைந்தே தீருவார்கள் என்று எழுதியுள்ளாரே!

அய்.நா. ஏற்றுக்கொண்ட ஒன்றுதான்!

உலக மக்களின் இனவழி தேசிய உணர்வை, இன வாரியான தேசியத்தை அய்.நா. ஏற்றுக் கொண்டி ருக்கிறது. மக்களின் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் தேவை என்பதும் உலகம் ஒப்புக்கொண்ட ஒன்றுதான். ஈழத் தமிழர்கள் அதில் விதிவிலக்கல்ல.

அந்த அடிப்படை உரிமை உணர்வோடுதான் இந்த மாநாடு இங்கே நடத்தப்படுகிறது. தீர்மானங் களும் வடிக்கப்பட்டுள்ளன.

மேக்னகார்ட்டா!

இவை உலகத் தமிழினத்தின் பேரறிக்கை ஆயபயேஉயசவய (பலத்த கைதட்டல்!). எங்கள் தமிழர் எடுத்த வியூகத்தில் தோற்று இருக்கலாம்; சில களங்கள் தோல்வியிலும் முடிந்திருக்கலாம். அதற்காகப் போரில் தோற்று விட்டோம் - இனி எழ மாட்டோம் என்று அதற்கு அர்த்தமல்ல! எங்கள் தமிழர் மீண்டும் எழுவார்கள் - உரிமைகளை மீட்பார்கள் என்பதற்கான அடை யாளமே இம்மாநாடு.

நானும், திருமாவளவனும் சேர்ந்து பேசுவோம்!

இந்தத் தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டதோடு முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. இது மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவேண்டும். நானும், சகோதரர் திருமாவளவனும் தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இந்தத் தீர்மானங்களை விளக்கிப் பேசுவோம்! (பலத்த கரவொலி! ஆரவாரம்!!)

ஒரு நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருக்கவில்லையா? அதனால் என்ன தனி நாடு கிடைக்காமலா போயிற்று? சிறைக்குச் செல்ல வேண்டுமானாலும், உயிரைக் கொடுக்கவேண்டு மானாலும் அதற்காகத் தயாராக இருக்கக் கூடியவர்கள்தான் நாங்கள்.

அதற்காக ஆத்திரப்பட்டு எங்கள் உயிரைக் கொடுத்துவிடுவோம் என்று பொருளல்ல. வெற்றி கிட்டுவதற்காக - ஒருக்கால் அந்த வெற்றியைக் காண முடியாத நேரத்தில், நீங்கள் எல்லாம் அந்த வெற்றியை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டால், அதற்காக எங்கள் உயிரையும் கொடுக்கத் தயார்.

விகற்பத்தை விதைக்காதீர்கள்!

திராவிடர் கழகமோ, விடுதலைச் சிறுத்தைகளோ, ஈழத் தமிழர் பிரச்சினையைக் கைகழுவி விட்டதாக சிலர் பிரச்சாரங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இது தேவையற்ற ஒன்று. தயவு செய்து சகோதரர்கள் மத்தியில் விகற்பத்தை ஏற்படுத்த முயலாதீர்கள் - அது தேவையில்லாத ஒன்று. அவரவர்களும் அவரவர்கள் உசிதப்படி அவரவர்களின் எல்லையில் நின்று பணிகளைச் செய்யட்டும். வீண் விமர்சனங்களால் எந்தப் பயனும் இல்லை; தமிழர்களின் ஒற்றுமை உணர்வைக் குலைக்கத்தான் அது பயன்படும்.

தமிழர்களுக்காக ஒரு நாடு!

விடுதலைச் சிறுத்தைகளும், கருஞ்சிறுத்தைகளும் ஒன்றுபட்டு ஒரே களத்தில் நிற்கிறோம் - அவ்வாறு நிற்போம் என்று ஒரு மாநாடு கூட்டி அறிவித்தி ருக்கின்ற விடுதலைச் சிறுத்தைகளுக்கு நன்றி!

பூமிப் பந்தில் தமிழர்களுக்கு ஒரு நாடு உருவாக ஒன்றுபட்டு உழைப்போம்; உறுதி கொள்வோம்!
வாழ்க பெரியார்!
வாழ்க அம்பேத்கர்!
வருக தமிழ் ஈழம்!

என்று தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உணர்ச்சிப் பிழம்பாக உரையாற்றினார்.

தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்களும் உரையாற்றினர்.

-தொகுப்பு: மின்சாரம்

1 கருத்துகள்:

all these are absolutely wonderful, spirited and emotive but these activities are not directly going to enable the harijans of Tamil Nadu to get out of oppression and discrimination until they bring a huge transformation to consider leaving the caste based Hindu fold and become Muslims, this are not my views but the views of Father Periyar, Even Christianity is a failure, I have seen in Periyavarsillai church my Christian Dalit brothers being segregated and sitting separately, It was Islam who liberated the Dalits of Tamil Nadu. Brother Thirumal knows this much more than anybody else in TN.

1 ஜனவரி, 2011 அன்று 8:40 AM comment-delete

கருத்துரையிடுக