சிங்களப் படையின் அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்த கச்சத் தீவை மீட்பதும் ஈழ விடுதலையை அங்கீகரிப்பதுமே தீர்வு!

மீனவர் இளைஞர் செல்வனேந்தல் பாண்டியன்  
சிங்கள இனவெறி கடற்படையால் சுட்டுக்கொலை!

சிங்களப் படையின் அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்த 
கச்சத் தீவை மீட்பதும் 
ஈழ விடுதலையை அங்கீகரிப்பதுமே தீர்வு!

தொல்.திருமாவளவன் அறிக்கை!

நாகை மாவட்டம் ஜெகதாபட்டினம் செல்வனேந்தல் குப்பத்தைச் சேர்ந்த தமிழக மீனவ இளைஞர் பாண்டியன் சிங்கள இனவெறிக் கடற்படையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 1983லிருந்து இதுநாள் வரையில் தமிழக மீனவர்கள் சிங்களப் படையினராலும் இந்தியப் படையினராலும் அவ்வப்போது சுட்டுப் படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாக நீடித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது செல்வனேந்தல் பாண்டியனும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுவரை நூற்றுக்கணக்கான மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். நூற்றுக்கணக்கான மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்திய அரசு பாராமுகமாக இருந்து சிங்களர்களுக்குத் துணையாகவும், தமிழினத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது.

ஈழத் தமிழர்களை மட்டுமின்றி தமிழ்நாட்டுத் தமிழர்களையும் காப்பாற்ற வேண்டுமென்பதில் இந்திய அரசுக்குத் துளியளவும் அக்கறையில்லை என்பது வெளிப்படையான உண்மையேயாகும்.

இந்நிலையில் இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. கச்சத் தீவை மீட்காத வரையிலும், ஈழ விடுதலையை அங்கீகரிக்காத வரையிலும் இத்தகைய கொடுமைகள் தொடரவே செய்யும். எனவே தமிழக அரசு, இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கைச் சுட்டிக்காட்டுவதோடு சிங்களப் படையினரின் இத்தகைய அட்டூழியங்களையும் தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோருவதோடு, துப்பாக்கிச் சூட்டில் பலியான பாண்டியன் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடாக வழங்கிட வேண்டுமெனவும், அவர்களின் குடும்பத்தில் தகுதியான ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.


இவண்

 (தொல். திருமாவளவன்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக