தொல்.திருமாவளவன் தைத் திருநாள் வாழ்த்து!



தமிழினத்தின் அரசியல் உரிமைகளை மீட்டெடுக்கவும் 
இறையாண்மையை வென்றெடுக்கவும்  
இத்தமிழ்ப் புத்தாண்டு நாளில் உறுதியேற்போம்!

தொல்.திருமாவளவன் தைத் திருநாள் வாழ்த்து!


ஒவ்வோர் ஆண்டும் உலகத் தமிழர்களால் உவகை பொங்கக் கொண்டாடப்படும் திருநாளே தை முதல் நாளாம் தமிழர் திருநாளாகும். உழைப்புக்கும் உழைப்போருக்கும் சிறப்புச் செய்யும் திருநாள் இந்தப் பொங்கல் திருவிழாவாகும். உழவுத் தொழிலே உலகை வழிநடத்தும் உன்னதமான உயர்ந்த தொழில் எனப் போற்றும் திருநாளே இந்நாள். ஆனால், இன்றைய சூழலில் தமிழினத்தின் மரபையும் மாண்பையும் பின்னுக்குத் தள்ளி மேலை நாடுகளின் கலாச்சாரம் தமிழர்களிடையே விரவிப் பரவி மேலாதிக்கம் செலுத்தி வருவதைக் காணமுடிகிறது. எனினும் கிராமப் புறங்களில் ஏழை எளிய உழைக்கும் விவசாயக் கூலிகள் வறுமைக் கொடுமைகளையும் தாண்டி இந்தப் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து வருகின்றனர்.

ஒருபுறம் ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்துள்ள அவலம், இன்னோரு புறம் தமிழ்நாட்டுத் தமிழர்களின் இயலாமை எனத் தமிழினம் தம்முடைய சமூக, அரசியல் ஆளுமையை இழந்து வாடுகிற நிலைமையைக் காண முடிகிறது. இந்நிலையில் ஈழ விடுதலையை வென்றெடுக்கவும், தமிழ்நாட்டுத் தமிழர்களின் அரசியல் உரிமைகளை மீட்டெடுக்கவும் ஒட்டுமொத்தத்தில் தமிழினத்தின் இறையாண்மையை வென்றெடுக்கவும் ஒவ்வொரு தமிழனும் இந்தத் தைத் திருநாளில் உறுதியேற்போம். 

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலப் புத்தாண்டே தமிழருக்கும் புத்தாண்டு எனக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையை மாற்றி தற்போது தை முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடும் நிலைமை உருவாகி வருவது ஆறுதலைத் தருகிறது. அதனைத் தொடர ஒவ்வொரு தமிழனும் உறுதியேற்போம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கேற்ப இந்த ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் ஆண்டாக மலரும் என்கிற நம்பிக்கையோடு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கட்டமைப்பை வலிமைப்படுத்துகிற வகையிலும், கட்சிக்கான அங்கீகாரத்தை வென்றெடுக்கிற வகையிலும், விடுதலைச் சிறுத்தைகள் அனைவரும் தீவிரமாகக் களப்பணியாற்றுவோம்.

ஈழ விடுதலை, தமிழக உரிமைகள் உள்ளிட்ட தமிழினத்திற்கான அனைத்து அரசியல் உரிமைகளையும் வென்றெடுக்கும் நாளே தமிழினம் உவகைப் பொங்கக் கொண்டாடும் பெருநாளாக அமையும். அந்த நம்பிக்கையோடு உலகத் தமிழர்கள் அனைவருக்கும் தைப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


இவண்

(தொல். திருமாவளவன்)


0 கருத்துகள்:

கருத்துரையிடுக