கல்வித்துறைக்கான அதிகாரம்: பொதுப்பட்டியலிலிருந்து விலக்கி மாநில அரசுக்கான பட்டியலில் சேர்த்திடுக! தொல்.திருமாவளவன் வேண்டுகோள்


‘பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில்,  கடந்த ஆண்டு  நடைமுறைப்படுத்தப்பட்ட குறைந்த அளவிலான மதிப்பெண்தான் இந்த ஆண்டும் நடைமுறைப்படுத்தப்படும்’  என்று தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்திருப்பது வெகுவான பாராட்டுதலுக்குரியதாகும். சமூகநீதியைப்  பாதுகாத்திடும் வகையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் எடுத்துள்ள இந்த துணிச்சலான முடிவை விடுதலைச்சிறுத்தைகள் வரவேற்று நெஞ்சாரப் பாராட்டுகிறது. அகில இந்திய தொழில் நுட்பக் குழுமம் என்கிற இந்திய அரசின் நிறுவனம்,  பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையின் வரையறையாக பொதுப்பிரிவினருக்கு 50 விழுக்காடு மதிப்பெண்களும், ஒதுக்கீடு பெறும் வகுப்பினருக்கு 45  விழுக்காடு மதிப்பெண்களும் பெற்றிருத்தல் வேண்டுமென அறிவிப்பு செய்துள்ளது. பொதுப்பட்டியலில் இடம் பெற்றிருக்கிற அதிகாரங்கள் யாவும் மைய அரசுக்கான அதிகாரங்கள் என்கிற ஆதிக்க மனோநிலையில் இத்தகைய முடிவுகளை எடுத்து,  மாநில அரசுகளின் மீது திணிப்பதை இந்திய அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. கல்வித்துறை அதிகாரத்தை இதற்கு முன்பு இருந்ததைப்போல மாநில அரசுக்கான அதிகாரப்பட்டியலுக்கு மாற்றினாலொழிய, இவ்வாறான ஆதிக்கப் போக்கைத் தடுத்திட இயலாது.

இந்நிலையில்,  இந்திய அரசின் இத்தகைய ஆதிக்கப் போக்கை முறியடிக்கும்  வகையில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலும், குறிப்பாக, சமூக நீதியைப் பாதுகாத்திடும் வகையிலும், தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் கடந்த காலங்களில் நடைமுறையிலிருந்த மதிப்பெண் வரையறைகளையே தமிழக அரசு பின்பற்றும் என அறிவித்திருக்கிறார்.  இதன்மூலம் சமூக நீதியைப் பாதுகாத்திருக்கிறார் என்பதுடன் இந்திய அரசின் ஆதிக்கத்தை எதிர்த்து மாநில உரிமையினை நிலைநாட்டியிருக்கிறார். மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்களின் சமூகநீதிக்கான பொறுப்பு மிகுந்த அணுகுமுறையினை விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் வெகுவாகப் பாராட்டுகிறோம்.

அத்துடன், கல்வித்துறைக்கான அதிகாரங்களை பொதுப்பட்டியலிலிருந்து விலக்கி மாநில அரசுக்கான அதிகாரப் பட்டியலில் இணைத்திட வேண்டுமென இந்திய அரசை விடுதலைச்சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.

இவண்



(தொல்.திருமாவளவன்)

1 கருத்துகள்:

எல்லாருக்கும் தாயாய் இருக்கும் தாய்ச்சிறுத்தைக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்

8 மே, 2011 அன்று 6:11 AM comment-delete

கருத்துரையிடுக