விருதுகள் வழங்கும் விழா
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒவ்வோர் ஆண்டும் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் நாளில் சமூகம், இனம், மொழி ஆகிய தளங்களில் பாடாற்றும் சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறது. இந்த ஆண்டு சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றதையயாட்டி விருதுகள் விழா தள்ளி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதனையயாட்டி இன்று (04-05-2011) கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்
செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது 2011ஆம் ஆண்டுக்கான விருதுகள் விழா மே மாதம் இறுதியில் நடைபெறும் என்றும் விருது பெறுவோர் பட்டியலையும் அறிவித்தார்.
"அம்பேத்கர் சுடர்' விருது : பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களுக்கும், "பெரியார் ஒளி' விருது திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களுக்கும், "காமராசர் கதிர்' விருது மூத்த எழுத்தாளர் சோலை அவர்களுக்கும், "அயோத்திதாசர் ஆதவன்' விருது பவுத்தப் பெரியார் சுந்தரராசன் (மறைவு) அவர்களுக்கும், "காயிதேமில்லத் பிறை' விருது பேராசிரியர் காதர்மைதீன் அவர்களுக்கும், "செம்மொழி ஞாயிறு' விருது கவிஞர் தணிகைச்செல்வன் அவர்களுக்கும் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசும்போது, பாகிஸ்தான் நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ஒசாமா பின்லேடனைக் கொலை செய்த அமெரிக்காவின் அரசப் பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் இன்னொரு நாட்டின் இறையாண்மையில் தலையிடும் அமெரிக்காவின் இத்தகைய போக்கை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறினார். ராமேசுவரத்தில் தொடர்ந்து தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். இதனால் இலங்கையுடன் உள்ள உறவுகளை இந்திய அரசு துண்டிக்க வேண்டும்.
தி.மு.க. கூட்டணி இந்த தேர்தலில் அமோக வெற்றி பெறும்.
செய்தியாளர் சந்திப்பின்போது பொதுச்செயலாளர் ரவிக்குமார், மாநில செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு, தலைவரின் தனிச்செயலாளர்கள் பாவலன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன் மற்றும் இரா.செல்வம் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் உடன்இருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக