இந்திய அரசு டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்! : தொல்.திருமாவளவன் அறிவிப்பு!
இந்திய அரசு டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்!
தமிழக அரசு விற்பனை வரியைத் திரும்பப் பெற வேண்டும்!
சூலை 2இல் விடுதலைச் சிறுத்தைகள்
மாபெரும் ஆர்ப்பாட்டம்!
தொல்.திருமாவளவன் அறிவிப்பு!
ஏழை எளிய மக்களின் வாழ்நிலை வெகுவாகப் பாதிக்கப்படும் வகையில் மீண்டும் இந்திய அரசு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை கடுமையாகக் உயர்த்தியுள்ளது. இதனால் அடித்தட்டு மக்களும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்களும் மளிகைச் சாமான்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை வாங்குவதற்கும் இயலாத நிலைமைக்குத் தள்ளப்படும் அவலம் உருவாகியிருக்கிறது. வழக்கம்போல அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்திருப்பதனால் இந்த விலைவாசி உயர்வு தவிர்க்க இயலாததாக அமைந்துள்ளது என இந்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் விலைவாசி உயர்வைக் குறைப்பதற்கு வாய்ப்பில்லை என்றும், மாநில அரசுகள் விற்பனை வரியைக் குறைத்துக்கொள்ளலாம் என்றும் இந்திய அரசு கருத்துக் கூறியுள்ளது. இந்நிலையில் வெகுமக்களிடையே கடுமையான எதிர்ப்பும் போராட்டங்களும் வெடித்துள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 10 முறைகளுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இத்தகைய காரணங்களும் விளக்கங்களும் சொல்லப்படுகின்றன. விலைகளைத் தீர்மானிப்பதில் இந்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் உள்ள பொறுப்புகளைத் தட்டிக்கழித்துவிட்டு உலகச் சந்தைகளின் விலையை மட்டுமே சுட்டிக்காட்டுவது வேதனைக்குரியதாகும். எனவே உலகச் சந்தை பொருளாதார நிலைமைகளை மீண்டும் மீண்டும் காரணங்களாகக் காட்டாமல் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். மாறாக மாநில அரசுகள் இந்திய அரசையும், இந்திய அரசு உலகச் சந்தைப் போக்குகளையும் சுட்டிக்காட்டி ஒவ்வொரு முறையும் தத்தம் கடமைகளிலிருந்து நழுவுகிற முயற்சியை மேற்கொள்கின்றன. எனவே இந்திய அரசு ஏழை, எளிய மற்றும் நடுத்தர வகுப்பினரைப் பாதிக்கும் இந்த விலைவாசி உயர்வை முற்று முதலாகத் திரும்பப் பெற வேண்டும். அதற்கேற்ற வகையில் பொருளாதாரச் சரிவுகளைச் சரிசெய்யும் அடிப்படையில் வாழ்வின் இன்றியாமையாத பொருட்களின் விலைகளை இந்திய அரசும், தமிழக அரசும் கட்டுக்குள் வைத்திருக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதுவரையில் தமிழக அரசு கடந்த காலங்களில் கடைப்பிடித்ததைப் போல விற்பனை வரியை திரும்பப் பெற வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வரும் 272011 அன்று காலை 11 மணியளவில் தலைநகர் சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வார்ப்பாட்டத்திற்கு அனைவரும் திரளாகப் பங்கெடுத்து கண்டனத்தைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
(தொல். திருமாவளவன்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக