நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவாக மாபெரும் கையயழுத்து இயக்கம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உயர்நிலைக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் கடந்த 14.06.2011 மற்றும் 15.06.2011 ஆகிய இரு நாட்களில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் எதிர்காலச் செயல் திட்டங்கள், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல், ஈழத் தமிழர்ச் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் கலந்தாய்வு செய்யப்பட்டன. நிறைவாக கட்சியின் நிர்வாகம் மற்றும் கட்டமைப்பு தொடர்பாகவும் தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்
தீர்மானங்கள்
1. 21.06.2011 அன்று நடைபெறுவதாக இருந்த கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தை 02.07.2011 அன்று நடத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
2. மக்கள் தொகை அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு அனைத்துத் துறைகளிலும் நிதிஒதுக்கீடு செய்வதற்கான சிறப்புக் கூறுகள் துணைத் திட்டம் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழு கேட்டுக்கொள்கிறது.
3. கடந்த கால தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பஞ்சமி நிலமீட்பு ஆணையத்தைக் கைவிடாமல் அதனைச் செயல்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை இக்குழு கேட்டுக்கொள்கிறது.
4. ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த பிள்ளைகளும் வசதி படைத்த குடும்பங்களைச் சார்ந்த பிள்ளைகளும் சமநிலையிலான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கல்விக் கூடங்களில் சமநிலையிலான பாடத் திட்டத்தைக் கொண்ட கல்வியினைப் பெறுவதற்கு ஏற்ற வகையில் முதல்வகுப்பிலிருந்து 10ஆம் வகுப்பு வரையில் சமச்சீர்க் கல்வித் திட்டத்தை தமிழக அரசு பெருந்தன்மையோடு நடைமுறைப்படுத்த முன்வர வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.
5. தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் பூவிருந்தவல்லி சிறப்பு முகாம்களில் பொய் வழக்குகளின்கீழ்ச் சிறைப்பட்டுள்ள ஈழத் தமிழ் இளைஞர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்வதுடன் அவர்கள் மீதான அனைத்துப் பொய் வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டுமென தமிழக அரசை இக்குழு வற்புறுத்துகிறது.
6. நாடு கடந்த தமிழீழ அரசு உலகம் தழுவிய அளவில் மேற்கொண்டு வருகிற பெரும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்கிற வகையில் விடுதலைச் சிறுத்தைகள் தமிழகம் தழுவிய அளவில் சுமார் 10 இலட்சம் பேரிடம் கையயழுத்துப் பெறும் மாபெரும் இயக்கத்தை மேற்கொள்வதென இக்குழு தீர்மானிக்கிறது.
7. அண்மையில் ஐ.நா. பேரவையின் மனித உரிமைகளுக்கான விசாரணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் மக்கள் விடுதலைக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளும் போர்க் குற்றங்களை இழைத்துள்ளதாக சிங்கள இனவெறியர்களுக்கு இணையாகக் குற்றம் சாட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் தற்காப்பு நடவடிக்கைகளே ஆகும். மாபெரும் இனப்படுகொலை செய்திருக்கிற சிங்கள இனவெறியர்களையும் தற்காப்புப் போர் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளையும் சமப்படுத்தியிருப்பதை நடுநிலையான அணுகுமுறையயனக் கருத முடியாது.
ஆகவே விடுதலைப் புலிகளும் போர்க்குற்றம் இழைத்துள்ளதாக ஐ.நா. பேரவை வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற்று இராஜபக்சே உள்ளிட்ட சிங்கள இனவெறி ஆட்சியாளர்களை போர்க்குற்றவாளிகள் என்பதுடன் "இனப்படுகொலைக் குற்றவாளிகளாக' அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி கடும் தண்டனை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா. பேரவையை இக்குழு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
8. நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது கட்சியின் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டு கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டவர்களின் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கட்சித் தலைவருக்கு இந்த உயர்நிலைக்குழு வேண்டுகோள் விடுப்பதுடன் அத்தகைய நடவடிக்கை எடுப்பதற்கான முழு அதிகாரத்தையும் தலைவருக்கு அளிக்கிறது.
அத்துடன் போட்டியிட்ட பத்து தொகுதிகளிலும் வெற்றிவாய்ப்பை இழந்ததற்கான உண்மை நிலைகளைக் கண்டறிவதற்கு கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் ம.செ. சிந்தனைச்செல்வன், து. ரவிக்குமார், பெ. ஆற்றலரசு, வெ. கனியமுதன், புதுவை பாவாணன் ஆகியோர் அடங்கிய ஆய்வுக்குழு ஒவ்வொரு தொகுதிக்கும் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும் எனவும் அக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் உரிய ஒழுங்கு நடவடிக்கைகளை கட்சியின் தலைமை மேற்கொள்ள வேண்டுமெனவும் இக்குழு தீர்மானிக்கிறது.
இப்படிக்கு
வன்னிஅரசு
மாநிலச் செய்தித் தொடர்பாளர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக