சிறுவனை இராணுவத்தினர் சுட்டுக்கொன்ற வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்! தொல்.திருமாவளவன் கோரிக்கை!


சென்னை தீவுத் திடல் அருகே இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியையயாட்டி அமைந்துள்ள குடியிருப்பைச் சார்ந்த தில்சன் என்கிற 12 வயதுச் சிறுவனை இராணுவத்தினர் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். இராணுவத்தினரின் இந்தக் கொடூரச் செயலை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அப்பகுதியில் சிறுவர்கள் விளையாடவும், பொதுமக்கள் நடமாடவும் முடியாத அளவுக்கு இராணுவத்தினர் வழக்கமாக கெடுபிடி செய்து வருகின்றனர். பல்லாவரம் பகுதியிலும் அவ்வாறே இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடமாடும் பொதுமக்களை அச்சுறுவத்துவதோடு விறகு பொறுக்கச் செல்லும் இளம்பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தும் கொடுமைகளும் நடந்தேறிக்கொண்டிருக்கிறது. இராணுவத்தினரின் இத்தகைய அத்துமீறிய செயல்கள் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் காவல்துறையினரால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகின்றன. இத்தகைய புகார்களைப் பதிவு செய்யவோ, விசாரிக்கவோ காவல்துறை முனைப்புக்காட்டுவதில்லை. தற்போது தீவுத் திடல் அருகே நிகழ்ந்துள்ள இந்தப் பயங்கர வன்முறைக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பில்லையயன்று இராணுவத்தரப்பில் கூறுவதாகத் தெரிகிறது. இக்கொடூரச் செயலில் இராணுவத்தினர் ஈடுபடவில்லையயன்றால் அச்சிறுவனைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது யார் என்னும் கேள்வி எழுகின்றது. எனவே அச்சிறுவனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் அதே வேளையில் அதன் பின்னணியில் உள்ள சதியினையும் குற்றவாளிகளையும் அடையாளம் காண்பதற்கு இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க ஆவன செய்ய வேண்டுமென தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

இராணுவ எல்லையையயாட்டி விளையாடிய சிறுவனை ஈவிரக்கமின்றி சுட்டுக்கொலை செய்துள்ள இந்திய இராணுவம், கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழக மீனவர்களைக் கடத்திச் செல்வதும், சித்திரவதை செய்து படுகொலை செய்வதும், துப்பாக்கிச் சூடு நடத்துவதும் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சிங்கள இராணுவத்தை எதிர்க்கவோ கண்டிக்கவோ இந்திய அரசு அல்லது இந்திய இராணுவம் தொடர்ந்து தயக்கம் காட்டுவது வேடிக்கையாக இருக்கிறது. தமிழக மீனவர்கள் 14 பேரை சிங்கள இராணுவம் கைது செய்திருப்பதாகத் தெரிகிறது. இந்திய அரசின் அல்லது இந்திய இராணுவத்தின் இத்தகைய இயலாமைப் போக்கை அல்லது சிங்கள ஆதரவுப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. ஓரிரு வாரங்களுக்கு முன்பு இதே போல் 25 பேரை கைது செய்த சிங்கள இராணுவம், தற்போது மீண்டும் 14 பேரை கைது செய்து இந்திய அரசின் இறையாண்மைக்கு சிங்கள அரசு சவால் விட்டிருக்கிறது. இந்நிலையில் இந்திய அரசு வழக்கம்போல சிங்கள அரசிடம் கெஞ்சப் போகிறதா அல்லது கடத்தப்பட்டவர்களை அதரடியாக மீட்கப் போகிறதா என்கிற கேள்வி எழுகிறது. கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக இந்திய அரசு மீட்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வலியுறுத்துகிறோம்.


இவண்

(தொல். திருமாவளவன்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக