பத்திரிகை செய்தி லோக்பால் சட்டம் பொதுமக்கள் பிரதிநிதிகள் முன்மொழிந்துள்ள கோரிக்கைகளை முழுமையாக ஆதரிக்கிறேன்! புதுதில்லியில் தொல்.திருமாவளவன் பேச்சு!
03.07.2011 அன்று புதுதில்லியில் மாண்புமிகு பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் லோக்பால் தொடர்பான கலந்துரையாடலின்போது விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் ஆற்றிய உரை பின்வருமாறு:-
மாண்புமிகு பிரதமர் அவர்களே, அனைத்துக் கட்சித் தலைவர்களே வணக்கம். இக்கூட்டத்தில் கலந்துகொள்கிற வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்காக என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நமது தேசத்தில் ஊழலைத் தடுப்பதற்கு அல்லது முற்றிலுமாக ஒழிப்பதற்கு தேர்தல் முறையில் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டியது ஒரு கட்டாயமான தேவையாகவுள்ளது. நமது தேர்தல் முறையில் அத்தகைய மாற்றங்களையோ திருத்தங்களையோ நாம் செய்யாத வரையில், மிக வலுவான லோக்பால் சட்டத்தைப் பெற்றிருந்தாலும் நம்மால் எதையும் சாதிக்க முடியாது. ஊழலுக்கும் வறுமைக்கும் நமது தேர்தல் முறையே மூல காரணமாக அமைந்துள்ளது. ஊழலும் வறுமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக விளங்குகின்றன. ஊழலைத் தடுப்பதன் மூலம் மட்டுமே நம்மால் வறுமையை ஒழிக்க முடியும். எனவே ஊழலை ஒழிப்பதற்கான வலிமை வாய்ந்த லோக்பால் சட்டம் தற்போதைய நிலையில் மிகமிக இன்றியமையாததாக உள்ளது. ஆகவே நான் இது தொடர்பான என்னுடைய கருத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்.
அதாவது திரு. அன்னா அசாரே போன்ற தனிநபர் நடவடிக்கைகளைப் பற்றிக் கவலைப்படாமல், குறிப்பாக இப்பிரச்சனையின் கதாநாயகன் யார் என்ற கேள்விக்கு இடந்தராமல் நாம் செயலாற்ற வேண்டியுள்ளது. ஊழலைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே நாம் அனைவரும் இங்கே கூடியிருக்கிறோம் என்பதில் ஐயமில்லை. எனவே பொதுமக்களின் கருத்துக்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமென இங்கே கூடியுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். திரு. அன்னா அசாரே அவர்களின் நிலைப்பாடுகளையும், அவரது முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஆதரவாக இருக்கிறார்கள் என்பது வெளிப்படையானதாகும். எனவே லோக்பால் சட்டத்தின் வரைவுக்குழுவில் இடம்பெற்றுள்ள பொதுமக்களின் பிரதிநிதிகள் முன்மொழிந்துள்ள கோரிக்கைகள் அனைத்தையும் நான் ஆதரிக்கிறேன்.
குறிப்பாக, மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் ஒற்றைச் சட்டமே வேண்டும் என்கிற கோரிக்கையினை ஆதரிக்கிறேன். அதைப்போல, பிரதமர் அவர்களையும் லோக்பால் சட்டத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையையும் ஆதரிக்கிறேன். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதிகளும் லோக்பால் சட்டத்தின் மேற்பார்வைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென்கிற கோரிக்கையினையும் வரவேற்கிறேன். மேலும் மக்கள் பிரதிநிதிகள் முன்மொழிந்துள்ள பிற கோரிக்கைகளையும் ஆதரிக்கிறேன். இந்தக் கோரிக்கைகளையயல்லாம் நிறைவேற்றாமல் நாம் எதையும் சாதித்துவிட இயலாது.
இறுதியாக, இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதித்து மிகவும் வலிமை வாய்ந்த லோக்பால் சட்டத்தை நிறைவேற்றுவோம் எனத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஒட்டுமொத்தத்தில் நமது தேசத்தில் தேர்தல் முறைகளில் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பதை மிகவும் அழுத்தமாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஊழலைத் தடுப்பதற்கும் வறுமையை ஒழிப்பதற்கும் இதுவே மிகமிக இன்றியமையாததாகும். தேர்தல் முறையில் உருவாக்கப்படும் மாற்றங்களால் மட்டுமே பயனுள்ள வலுவான லோக்பால் சட்டத்தையும் நம்மால் உருவாக்க முடியும்.
நன்றி. வணக்கம்..
இவண்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக