அனைத்துலக நாடுகள் தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும்! தொல்.திருமாவளவன் அறிக்கை!

இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இனப்படுகொலை குற்றவாளிகளான இராஜபக்சே கும்பலுக்கு அஞ்சிநடுங்கி வாழும் நிலையில் தமிழர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நல்வாழ்த்துக்களை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாபெரும் வெற்றியை வழங்கியுள்ளனர். சிங்களப் படையினரின் அச்சுறுத்தலையும் மீறி சிங்களவர்களின் தாறுமாறான முறைகேடுகளையும் தாண்டி ஒவ்வொரு தமிழரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்களித்திருப்பது தமிழினத்தின் நெஞ்சுரத்தையும் கொள்கை உறுதியையும் மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. வடக்கு கிழக்கு பகுதிகள் முழுவதையும் மெல்ல மெல்ல சிங்களமயப்படுத்தி கொடுங்கோன்மை செழுத்தி வரும் இராஜபக்சே கும்பலுக்கு அறவழியில் அரசியல்ரீதியாக சமட்டி அடிகொடுத்து பாடம் புகட்டியிருக்கிற ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறது.

சிங்கள இனவெறியர்களுக்கு மட்டுமின்றி சிங்களவர்களை நக்கி பிழைக்கும் தமிழ்க் குழுக்களுக்கும் இத்தீர்ப்பின் மூலம் படிப்பினையை வழங்கியுள்ளனர். அத்துடன் அய்.நா பேரவை மற்றும் அனைத்துலக சமூகத்தின் வழிகளை திறக்கும்படியும் தமிழீழமே தமிழினத்தின் ஒரே வேட்கை என்பதை அவர்களுக்கு உணர்த்தும்படியும் இத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. இராஜபக்சே கும்பலை ஆதரிக்க கூடிய இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கியுபா போன்ற நாடுகளுக்கும் இதன் மூலம் ஈழத்தமிழர்களின் உணர்வுகள் எத்தகையது என்கிற உண்மையை இது உணர்த்தியுள்ளது. இந்நிலையில் அய்.நா பேரவையும் அனைத்துலக நாடுகளும் ஒருங்கிணைந்து தமிழீழ விடுதலை தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக இந்திய பேரரசு தமிழினத்திற்கு எதிரான போக்கை கைவிட்டு தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து தமிழீழ விடுதலையை அங்கீகரித்து அனைத்துலக நாடுகளின் ஆதரவை திரட்டி தமிழீழத்தை வென்றெடுப்பதற்கு முன்வரவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் இச்சூழலில் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

இவண்,
தொல்.திருமாவளவன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக