உதயன் நாளிதழின் தலைமைச் செய்தியாளர் குகநாதன் மீது சிங்கள வெறியர்கள் கொடூரத் தாக்குதல் தொல்.திருமாவளவன் கண்டனம்!
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழின் தலைமைச் செய்தியாளர் குகநாதன் கடந்த ஜூலை 29ஆம் தேதி சிங்களக் காடையர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டிருக்கிறார். படுகாயமுற்று உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவர் விரைவில் உடல்நலம் பெற்று தமது பணியைத் தொடர வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் மனமார வாழ்த்துகிறது.
விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டோம் என்றும், தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளில் மட்டுமே தற்போது கவனம் செலுத்துகிறோம் என்றும் கூறி வருகிற சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் இன்னும் எத்தகைய இனவெறி ஆட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்பதற்கு உதயன் ஆசிரியர் மீதான தாக்குதலே சாட்சியமாக விளங்குகிறது. அரச பயங்கரவாதத்தை அம்பலப்படுத்திய காரணத்தினால் சிங்கள இனத்தைச் சார்ந்த ஊடகவியலாளர்களையும் ஈவிரக்கமின்றி படுகொலை செய்த இராஜபக்சே கும்பல் தமிழ் ஊடகவியலாளர்கள் மீது மட்டும் கருணை காட்டுவார்கள் என்றா நாம் எதிர்பார்க்க முடியும்? ஏற்கனவே இதுபோன்று பல தமிழ் ஊடகவியலாளர்கள் கடுமையாகத் தாக்குப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் உள்ளனர். இதே உதயன் நாளிதழைச் சார்ந்த வித்யாதரன் என்பவரும் கடத்தப்பட்டு வதை செய்யப்பட்டார். உலகெங்கிலும் இருந்து கடும் கண்டனம் எழுந்த நிலையில் விடுவிக்கப்பட்டார். தற்போது குகநாதன் அவர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டிருக்கும் செயலானது தமிழீழ மண்ணில் நடைபெற்றுவரும் சிங்கள இனவெறியர்களின் அட்டூழியங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவராமல் தடுக்கும் முயற்சியும், பிற தமிழ் ஊடகவியலாளர்களுக்கு விடப்பட்டிருக்கிற அச்சுறுத்தலுமேயாகும்.
சிங்களக் காடையர்களின் இந்தப் போக்கை அமெரிக்க ஐக்கிய அரசும் கண்டித்துள்ளது. வழக்கம்போல இந்தியா தமிழினத்திற்கு எதிராக அமைதி காத்து வருகிறது. ஈழத்தில் நடைபெற்றுவரும் கொடுமைகள் தொடர்பாக விவாதிப்பதற்கும் இந்திய நாடாளுமன்றத்தில் வாய்ப்பளிக்காமல் இந்திய ஆட்சியாளர்கள் நழுவி வருகின்றனர். இந்நிலையில் திரு. குகநாதன் அவர்களைத் தாக்கியுள்ள சிங்களக் காடையர்களையும் சிங்கள இனவெறி ஆட்சியாளர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிப்பதோடு இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கையும் வன்மையாகக் கண்டிக்கிறது.
இவண்
(தொல். திருமாவளவன்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக