கரும்புலி முத்துகுமாருக்கு நினைவு மண்டபம்
‘விடுதலை நெருப்புக் களம்’ – தமிழக கரும்புலி நாளில் கரும்புலி முத்துகுமாருக்கு நினைவு மண்டபம்
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி15,16,17,18 ஆகிய தேதிகளில் ஈழ விடுதலை போராட்டத்தின் ஒரு கட்டமாக விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தொடர்ந்து நான்கு நாட்களாக சென்னையை அடுத்த மறைமலை நகரில் உண்ணாவிரதம் இருந்தார். தமிழகத்தையே உசுப்பிய இந்த போராட்டத்தில் சென்னை கொளத்தூரில் வாழ்ந்த முத்துக்குமார் என்ற இளைஞனும் கலந்துக்கொண்டார். தொல்.திருமாவளவன் அவர்களின் பேச்சை அந்த நான்கு நாட்களும் மிகஆர்வமாக கேட்டவர் முத்துகுமார்.
ஜனவரி 29 ஆம் தேதி காலையில் சென்னையில் மத்திய அரசு அலுவலகங்கள் இயங்கி வரும் சாஸ்த்திரி பவனிற்கு சென்ற முத்துகுமார் தான் கையில் தட்டச்சு செய்து வைத்திருந்த 14 அம்ச கோரிக்கைகள் அடங்கிய துண்டறிக்கைகளை அங்கிருந்த பொதுமக்களுக்கு கொடுத்தார். பின்னர் தான் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணையை தன் உடம்பில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதை கண்டவர்கள் செய்வதறியாமல் திகைத்தனர்.
காவல்துறையினர் வந்து உயிருக்கு போராடிய முத்துக்குமாரை அவசரஊர்தியில் ஏற்றி சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முத்துகுமார் மருத்துவர்களிடம் “என் சாவை அண்ணன் பிரபாகரனிடமும் , அண்ணன் திருமாவளவனிடமும் தெரிவியுங்கள்”என சாகும் முன் கடைசியாக சொன்னார். முத்துகுமரனின் சாவு தமிழகத்தையே உசுப்பியது.
தொல்.திருமாவளவன் அவர்கள் ‘கரும்புலி முத்துகுமார் பாசறை’ யை தொடங்கி சங்கத்தமிழன் அவர்களை அப்பாசறைக்கு முதன்மை செயலாளராக நியமித்தார். முத்துகுமாரின் நினைவு நாளை ‘தமிழக கரும்புலிகள் நாள்’என அறிவித்து ஈழவிடுதலைக்காக உயிர்நீத்த அனைவருக்கும் அந்நாளில் விடுதலை ச் சிறுத்தைகளால் வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு விடுதலைச் சிறுத்தைகளின் கரும்புலி முத்துகுமார் பாசறையின் சார்பில் முத்துகுமாருக்கு அவருடைய சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் தெற்கு ஆத்தூர் அருகே உள்ள கொலுவைநல்லூரில் இடம் வாங்கி அங்கே முத்துகுமாரின் வெண்கல சிலை நிறுவப்பட்டது.
தமிழக கரும்புலிகள் நாளான இன்று அந்த இடத்தில் கரும்புலி முத்துகுமார் பாசறையின் சார்பில் ‘விடுதலை நெருப்புக் களம்’ என்னும் நினைவு மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. கரும்புலி முத்துக்குமார் பாசறையின் முதன்மை செயலாளர் சங்கத்தமிழன் அடிக்கல்லை நாட்டினார். ‘விடுதலை நெருப்புக் களம்’ விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகளின் முதன்மை பொறுப்பாளர்கள் ஆற்றல்அரசு,வன்னிஅரசு, தகடூர் தமிழ்ச்செல்வன், தமிழினியன், முரசுதமிழப்பன், முத்துகுமாரின் சித்தப்பா சிறுத்தை உதயகுமார், பாட்டி லிங்கபுஷ்பம் ஆகியோருடன் ஏராளமான விடுதலைச் சிறுத்தைகளும் கலந்துக்கொண்டனர். தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் இன்று மாநாட்டில் கலந்துக்கொள்ள மலேசியா சென்றுள்ளதால் தலைவரின் அறிவுறுத்தலின் முன்னணி பொறுப்பாளர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தனர்.
1 கருத்துகள்:
முத்துக்குமாரின் ஊரில் நிறுவிய ,அவரின் உருவச்சிலை போதுமானது.கச்சத்தீவை மீட்டு, அதனை அவருக்கு அர்ப்பணிப்பு செய்வதே ! நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.செயலில் இறங்குக ! போராட்டம்,கூட்டங்கள் போதுமானதே .
கருத்துரையிடுக