கூடங்குளம் போராட்டம் மின் உற்பத்திக்கு எதிரானதல்ல; அணுசக்திக்கு எதிரானது! விடுதலைச் சிறுத்தைகளும் பொதுமக்களும் 23ந்தேதி பேரணியில் திரளாகப் பங்கேற்று போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும்! - தொல். திருமாவளவன் அறிக்கை


கூடங்குளம் அணுமின் உலையைத் திறப்பதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் போராட்டக் குழுவினரையும் பொதுமக்களையும் கடுமையாக அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் தமிழகக் காவல்துறை இறங்கியுள்ளது.  போராட்டக் குழுவைச் சார்ந்த முன்னணிப் பொறுப்பாளர்கள் மட்டுமின்றி, பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், கூடங்குளம், இடிந்தகரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு பால், மண்ணெண்ணெய், மருந்து மற்றும் அன்றாடத் தேவைக்குரிய உணவுப் பொருட்கள் கிடைக்காத வகையில் காவல்துறை கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.  இதனால் அப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.  கிட்டத்தட்ட அப்பகுதியை தமிழகத்தோடு தொடர்பில்லாத ஒரு தீவைப்ப்போல தமிழக அரசு துண்டித்துள்ளது.  இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.  

காலவரம்பற்ற உண்ணாநிலை அறப்போராட்டத்தைத் தொடங்கியிருக்கும் உதயகுமார் மற்றும் பொதுமக்களை அதிரடியாகக் கைது செய்வதன் மூலம் அப்பகுதியில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையை உருவாக்குவதற்கும் காவல்துறை தயாராக இருப்பதை அறியமுடிகிறது.  இத்தகைய முயற்சியை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டோரை விடுவிக்க வேண்டும், பல்லாயிரக் கணக்கில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும், அப்பகுதியில் விதிக்கப்பட்டுள்ள 144 தடையாணையையும் விலக்கிக் கொள்ள வேண்டும். 

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி 23-3-2012 அன்று நெல்லையிலிருந்து கூடங்குளம் நோக்கி நடைபெறவிருக்கிற பொதுமக்கள் பேரணியில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகளும் பெருவாரியாகப் பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.  இப்போராட்டம் மின் உற்பத்திக்கு எதிரானதல்ல; அணுசக்திக்கு எதிரானது என்பதை உணர்ந்து அனைத்துத் தரப்பு மக்களும் இதில் பங்கேற்று போராட்டத்துக்கு வலுச் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

- இவண்
தொல்.திருமாவளவன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக