ஜெனிவா தீர்மானத்தின் அடிப்படையில் குற்றவிசாரணையை விரைவுபடுத்திட சர்வதேசச் சமூகத்தின் துணையோடு இந்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! - தொல். திருமாவளவன் அறிக்கை


ஐ.நா. அவையின் மனித உரிமை அவை மாநாட்டில், சிங்கள அரசுக்கெதிரான தீர்மானம் 24 நாடுகளின் ஆதரவோடு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  காயம்பட்ட தமிழ்ச் சமூகத்திற்கு ஆறுதல் அளிப்பதாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.  இது ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்திற்குக் கிடைத்துள்ள முதற்கட்ட வெற்றி என்கிற அளவில் ஆறுதலடைகிறோம்.  வழக்கம்போல தமிழினத்திற்கு எதிரான நிலைப்பாட்டை இந்திய அரசு மேற்கொள்ளும் என்று அஞ்சியிருந்த நிலையில் அதற்கு மாறாக, இந்தியாவும் சிங்கள அரசுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்திருப்பது வியப்புக்குரியதேயாகும். எனினும் இந்திய அரசின் இந்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்றுப் பாராட்டுகிறது. 

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.  குறிப்பாக, 'சிங்கள அரசின் ஒப்புதலையும் ஒத்துழைப்பையும் பெற்று குற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும்' என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.  இத்திருத்தம் இந்திய அரசின் முன்முயற்சியால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு இந்திய அரசு இத்தகைய திருத்தத்தைச் செய்திருக்குமேயானால், இந்திய அரசின் மீதான தமிழர்களின் நம்பிக்கையை மேலும் வலுவிழக்கச் செய்யும்.

போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இத்தீர்மானம் வழிவகுக்குமா என்பது கேள்விக்குறியேயாகும்.  எனினும் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஈழ மக்களின் பிரச்சனையில் சர்வதேச நாடுகளின் தலையீடு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.  இதுவே தமிழினத்தின் முயற்சிகளுக்குக் கிடைத்த ஒரு வெற்றியாகும்.  தமிழக மக்களின் போராட்டங்களாலும், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளாலும், தமிழக அரசியல் கட்சிகளின் ஒருமித்த குரலாலும், உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் தொடர் நடவடிக்கைகளாலும் இவ்வெற்றியை பெற்றோம் என்று நாம் நம்பினாலும், இது அமெரிக்க வல்லரசுக்குக் கிடைத்த வெற்றியே என்பதையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.  அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று இந்திய அரசு இத்தகைய ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொண்டிருக்கலாம் என்று கருதினாலும் அது மிகையாகாது.

எப்படியாயினும், சிங்கள இனவெறி ஆட்சிக்கு எதிராக சர்வதேசச் சட்டங்களை மீறியதாகக் குற்ற விசாரணையை மேற்கொள்வதற்கும், படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கும் இத்தீர்மானம் வழிவகுக்கிறது என்கிற அளவில் விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது.  

மேலும், இத்தீர்மானத்தின் அடிப்படையில் குற்ற விசாரணையை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை காலந்தாழ்த்தாமல் விரைவுபடுத்திட சர்வதேசச் சமூகத்தின் துணையோடு இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  

தமிழர்களின் தாயகத்தில் நிகழ்ந்துவரும் திட்டமிட்ட கலாச்சாரச் சீரழிவு நடவடிக்கைகளைத் தடுக்கவும், தமிழ்மண்ணை ஆக்கிரமிப்புச் செய்யும் நடவடிக்கைகளைத் தடுக்கவும், தமிழர் பகுதிகளிலிருந்து சிங்களப் படையினரை அப்புறப்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் தமிழ்ச் சமூகம் ஒருங்கிணைந்து, தொடர்ந்து செயல்பட வேண்டியது தற்போதைய முதன்மையான சவாலாக அமைந்துள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் இச்சூழலில் சுட்டிக்காட்டுகிறது.

- இவண்
தொல்.திருமாவளவன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக