மின் கட்டண உயர்வு : வாக்களித்த மக்களுக்குத் தண்டனை ஏப்ரல் - 5ல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு திடீரென உயர்த்தியுள்ள மின்கட்டண உயர்வால் தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சியினால் நிலைகுலைந்து போயுள்ளனர். மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மக்களின் கருத்துகளைக் கேட்ட பின்னரே இந்த கட்டண உயர்வை அறிவித்திருப்பதாக தமிழக அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க முயற்சிப்பதும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் தமிழக அரசுக்கும் தொடர்பில்லாததைப் போலக் கூறி, பொதுமக்களை ஏமாளிகளாக்க நினைப்பதும் வேடிக்கையாகவுள்ளது. 


    பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இதரபெரும் தொழில் நிறுவனங்களுக்கும் மலிவு விலையில் மின்சாரம் வழங்குகிறது. அதுவும் கூடுதல் விலைக்கு மின்சாரத்தை வாங்கி அந்நிறுவனங்களுக்கு மிகக்குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்கும் தமிழக அரசு, ஏழை-எளிய மக்களின் தலையில் இடிவிழுந்ததைப் போன்ற அறிவிப்பைச் செய்துள்ளது. ஏற்கனவே, பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றால் தாங்க முடியாத அளவில் அல்லல்படும் அடித்தட்டு மக்களின் அடிவயிறு பற்றி எரியும் வகையில் மேலும் மின்கட்டணத்தை உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியதாகும். 



    மிக்சி, க்ரைண்டர் போன்றவற்றை இலவசமாக வழங்கும் தமிழக அரசு, அவற்றைப் பயன்படுத்த இயலாத வகையில் மின்கட்டணத்தை உயர்த்தியிருப்பது வாக்களித்த மக்களைத் தண்டிப்பதாகவே அமைந்துள்ளது. இனி சாதாரண மக்கள் கடந்த காலங்களில் பயன்படுத்தியதைப் போல மண்ணெண்ணெய் விளக்குகளையே வீடுகளில் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படலாம்.  தமிழகம் மெல்ல மெல்ல இருண்ட தமிழகமாக மாறி வருகிறது. இந்நிலையிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற, கட்டண உயர்வு சுமைகளிலிருந்து மக்களை மீட்க, தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை முழுமையாகத் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்.  இக்கோரிக்கையை வலியுறுத்தி எதிர்வரும் 05.04.2012 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இவண்
தொல். திருமாவளவன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக