ஜெனிவா தீர்மானம்: எதிர்பார்த்தபடி வலுவாக இல்லையென்றாலும் இந்திய அரசு ஆதரிக்க வேண்டும்! - தொல்,திருமாவளவன் அறிக்கை
ஜெனிவா ஐ.நா. மன்றத்தில் நடைபெற்றுவரும் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக அமெரிக்க வல்லரசு 8-3-2012 அன்று வரைவுத் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்துள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரின்போது சிங்கள அரசு மனித உரிமை மீறல்களைச் செய்து போர்க் குற்றம் இழைத்துள்ளதாகவும் அதனை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டுமெனவும் அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் தழுவிய அளவில் மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தீர்மானம் பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக அமைந்துள்ளது என உலகத் தமிழர்களிடையே விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிங்கள அரசாங்கமே நியமித்துக்கொண்ட நல்லிணக்கக் குழு அளித்த அறிக்கையில் உள்ளதுபோலவே இந்தத் தீர்மானம் அமைந்துள்ளதாகவும் கருத்து எழுந்துள்ளது. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் அமைந்துள்ள 13வது சட்டத் திருத்தத்தில் கூறப்படும் மாகாணங்களுக்குரிய அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக இந்தத் தீர்மானத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 13வது சட்டத் திருத்தத்தை விடவும் வலுக் குறைந்ததாக இது புலப்படுவதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. சிங்கள அரசைக் கண்டித்தாக வேண்டும் என்கிற வகையில் முன்மொழியப்பட்டதாக இத்தீர்மானம் அமையவில்லை.
எனினும் சர்வதேச அளவில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தை விவாதிக்கும் சூழலை இது உருவாக்கியுள்ளது என்கிற அளவில் ஆறுதலைத் தருகிறது. அந்த வகையில் இத்தீர்மானத்தை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறோம். இதனை இந்திய அரசும் ஆதரித்து வழிமொழிய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். சர்வதேசச் சட்டங்களை, போர் மரபுகளை அவமதித்தும், மனித உரிமைகளை மீறியும் செயல்பட்டிருக்கிற சிங்கள அரசை மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பின்கீழ் விசாரிக்க வேண்டும் என்றும் இத்தீர்மானம் குறிப்பிடுவதை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது.
மிகவும் நீர்த்துப்போன வகையில் வரைவு செய்யப்பட்டுள்ள இத்தீர்மானத்தைகூட இந்திய அரசு ஆதரிக்காமல், வழக்கம்போல சிங்கள இனவெறியர்களுக்குத் துணைபோகுமேயானால் அது கடும் கண்டனத்துக்குரியதாக அமையும்.
தமிழக முதல்வர் உள்ளிட்ட தமிழகத் தலைவர்கள் மற்றும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்திய அரசு இத்தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமெனவும், அதற்கான அறிவிப்பை உடனடியாகச் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.
கடந்த இரண்டாண்டுகளில் வடக்கு மாகாணத்தில் விவரிக்க முடியாத அளவுக்கு திட்டமிட்ட கலாச்சாரச் சீரழிவு நடவடிக்கைகளை சிங்கள அரசு செய்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவிகள் ஈவிரக்கமற்ற முறையில் பாழாக்கப்படும் நிலை அதிகரித்து வருகிறது. தமிழர்களின் தாயகம் சிங்கள இனவெறியர்களாலும் சிங்களப் படையினராலும் மிகப் பெரும் அளவில் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான சூழலில் இராஜபக்சே தலைமையிலான சிங்கள இனவெறிக் கும்பல் மீது இனஅழிப்புப் போர்க் குற்ற விசாரணையை மேற்கொள்வதன் மூலம் தொடர்ந்து திணிக்கப்படும் சிங்கள அரச பயங்கரவாதத்தை ஓரளவேனும் கட்டுப்படுத்த இயலும்.
எனவே, சிங்கள அரசுக்கு எதிரான இத்தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஏற்ற வகையில், இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் முன்வர வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது. சிங்கள அரசு தப்பித்துக்கொள்ளாத வகையில், இத்தீர்மானத்தை மேலும் வலுவாக்க உரிய திருத்தங்களைச் செய்து நிறைவேற்றுவதற்கு உலக நாடுகள் முன்வரவேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.
இவண்
திருமாவளவன்
3 கருத்துகள்:
yes our great leader thiruma told 100
%true the indian goverment should be done the matter earlyer to save the tamil pepole
INDIAN MUST BE HELP TO TAMIL PEOPLE
yes our great leader thiruma told 100
%true, the indian goverment should have tried to save the tamil pepole earlier.
கருத்துரையிடுக