கூடங்குளம் அணுஉலை: தமிழக அரசு தமது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்! - தொல்.திருமாவளவன் அறிக்கை

கூடங்குளம் அணுமின் உலை தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான்.  போராட்டக் குழுவினர்க்கு ஆதரவாக இருப்பதைப் போன்ற ஒரு தோற்றம் தமிழக அரசினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பது தற்போது உறுதியாகிவிட்டது.  இதில் அதிர்ச்சியடைவதற்கோ வியப்படைவதற்கோ ஒன்றுமில்லை.  


அணுஉலையினால் அப்பகுதிவாழ் மக்களின் உயிருக்கும் வாழ்வாதாரங்களுக்கும் பெரும் தீங்கு ஏற்படும் என்பது அணுஉலையை எதிர்த்துப் போராடுவோரின் அச்சமாகும்.  ஆனால், அணுஉலைக்கு எதிரான அப்போராட்டமானது பொதுமக்களிடையே எழுந்துள்ள அச்சத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது அல்ல.  அணுஉலை பாதுகாப்பானதாக இருந்தால், அதனை ஏற்கலாம் என்கிற அடிப்படையிலும் மின் உற்பத்திக்கு இன்றியமையாத தேவை என்கிற அடிப்படையிலும் இப்பிரச்சனையைப் பலரும் பார்க்கின்றனர். ஆனால் இந்திய அரசின் அணுசக்திக் கொள்கை மற்றும் ஏகாதிபத்திய நாடுகளுடன் கொண்டுள்ள அணுசக்தி தொடர்பான ஒப்பந்தங்கள், அதனால் மானுடத்திற்கு எதிராக உருவாகும் எதிர்விளைவுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் அணுஉலைக்கு எதிரான போராட்டங்கள் தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்று வருகின்றன.  அணுசக்திக்கு எதிரான கருத்துள்ளவர்கள் சர்வதேச அளவில் இத்தகைய அடிப்படையிலேயே போராடி வருகின்றனர்.  தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய இத்தகைய அணுகுமுறையை தமிழக அரசும் பொருட்படுத்தவில்லை என்பது தற்போது எடுத்துள்ள முடிவிலிருந்து தெளிவாகின்றது.  



இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு நேராது என்றும் அணுக்கதிர்வீச்சினால் தீங்குகள் ஏற்படாது என்றும் சோதிடம் கூறுவதைப் போல தமிழக அரசு தம்முடைய முடிவை ஞாயப்படுத்துவது வேடிக்கையாக உள்ளது.  கல்பாக்கம் அணுஉலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் எத்தகைய பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றனர் என்று மருத்துவர் மற்றும் சுகாதார வல்லுநர்கள் ஆதாரங்களோடு எடுத்துக்காட்டியுள்ளனர்.  எனினும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தமிழக அரசு மக்களுக்கு எதிரான ஒரு முடிவை மேற்கொண்டுள்ளது. கூடங்குளத்தில் திறக்கப்படவுள்ள இந்த அணுஉலைகளை கேரள மாநிலத்துப் பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், ஆட்சியாளர்களும் அங்கே தொடங்க விடாமல் விரட்டியடித்தது ஏன் என்பதை தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும், ஆட்சியாளர்களும் தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும்.  இந்த அணுஉலைகளால் பாதிப்பு இல்லையென்றால், பெருமளவில் பயன் விளையும் என்றால் கேரள மக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் அத்திட்டத்தை ஏன் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று தமிழக அரசு மற்றும் இந்திய அரசுகள் உரிய விளக்கங்களை மக்களுக்குத் தரவேண்டும்.  தமிழர்களை ஏமாளிகளாகக் கருதும் போக்கையே இது உறுதிப்படுத்துகிறது.  



அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் முன்னணிப் பொறுப்பாளர்களை கைது செய்திருப்பது அப்பகுதி மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையே ஆகும்.  இதனால் அங்கு பரவிவரும் பதற்றமும் அச்சமும் சட்டம்-ஒழுங்குச் சீர்குலைவுக்கு வழிவகுக்கும்.  
ஆகவே தமிழக அரசு, இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் உதயகுமார் உள்ளிட்ட போராட்டக் குழுவினர் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் எனறும் அப்பகுதியில் போடப்பட்டுள்ள 144 தடையாணையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு தமது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக