ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்படாமல் முறியடிக்கப்பட்டால் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் முற்றும் பாழாகிவிடும் தொல்.திருமாவளவன் எச்சரிக்கை!


சென்னை, சைதாப்பேட்டை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் முன், சிங்கள அரசுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி 19-3-2012 இன்று காலை உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றது.  இப்போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.  

அப்போது, ஜெனிவா தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டிய தேவையை விளக்கியதோடு, "முள்ளி வாய்க்கால் போரின்போது, இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டபோதிலும் அப்போரினைத் தடுத்து நிறுத்த முயற்சிக்காத அமெரிக்க அரசு, தற்போது இத்தீர்மானத்தை முன்மொழிந்திருப்பது தமிழினத்துக்கு ஆதரவாகத்தான் என்று ஏற்றுக்கொள்ள இயலவில்லை.  சீன ஏகாதிபத்தியத்தின் எடுபிடியாகச் செயல்படும் சிங்கள அரசை அச்சுறுத்துவதற்காகவே இத்தீர்மானத்தை முன்மொழிந்திருக்கிறதோ என்கிற ஐயமும் நமக்கு ஏற்பட்டிருக்கிறது.  எனினும் இத்தீர்மானத்தை வரவேற்கக் கடமைப்பட்டுள்ளோம்.

சிங்கள அரசு போர்க்குற்றம் செய்திருப்பதை அத்தீர்மானத்தில் குறிப்பிடவில்லை.  ஆனால், சர்வதேச சட்டத்தை மீறியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதன் மூலம் சிங்கள அரசின் மீது சர்வதேசச் சமூகத்தின் தலையீட்டை உறுதிப்படுத்த முடியும் என்று நம்புகிறோம். அதனால்தான் இத்தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.  இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் தற்போது ஈழத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சிங்கள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், திட்டமிட்ட கலாச்சாரச் சீரழிவு நடவடிக்கைகளைத் தடுக்கவும் ஏதுவான சூழல் அமையும் என்று நம்புகிறோம்.  நிறைவேற்றப்படாமல் முறியடிக்கப்பட்டால் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் முற்றும் பாழாகிவிடும்.  ஆகவே தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து இந்திய அரசு இத்தீர்மானத்தை நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும்.  ஆதரிக்கத் தவறினால் விடுதலைச் சிறுத்தைகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆதரவு நிலையிலிருந்து வெளியேறும். என்று குறிப்பிட்டார்.
இப்போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் வன்னிஅரசு, சைதை பாலாஜி, வழக்கறிஞர்கள் சாரநாத், காசி, பழனிமுத்து, சைதை ஜேக்கப், எழில்இமயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக