புதிய வரி விதிப்புகளை தமிழக அரசு முழுமையாகத் திரும்பப்பெற வேண்டும்!

2012-13ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை: புதிய வரி விதிப்புகளை  தமிழக அரசு முழுமையாகத் திரும்பப்பெற வேண்டும்!
- தொல்.திருமாவளவன் வேண்டுகோள்


2012-2013ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ. 1500 கோடி அளவுக்கு புதிய வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வு போன்றவற்றால் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் அடித்தட்டு மக்கள் மேலும் கடுமையாக பாதிக்கப்படும் வகையில் இந்த வரி விதிப்பு அமைந்துள்ளது.  கோதுமை, ஓட்ஸ், இன்சுலின் மருந்து போன்றவற்றுக்கு மதிப்புக்கூட்டு வரியை விலக்கிக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளையில், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பிற இன்றியமையாத பொருள்களின் வரிகளை உயர்த்தியிருப்பதன் மூலம் விலைவாசி மேலும் கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. 

19,000 கோடி ரூபாய் துண்டு விழும் நிலையில் பற்றாக்குறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ள தமிழக அரசு இலவசத் திட்டங்களுக்காக 2,000 கோடி ரூபாயை விரயம் செய்வது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அத்துடன் பெருமளவில் வருமானம் வரக்கூடிய கோயில்களில் 24 மணி நேரமும் அன்னதானத் திட்டம் அறிவித்திருப்பதும், ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களைவிட இத்தகைய இலவசத் திட்டங்களுக்கு தமிழக அரசு முன்னுரிமை அளிப்பதன் மூலம் மக்கள் வரிப்பணம் வீணாக்கப்படுவது மீண்டும் உறுதியாகிறது. இஸ்லாம், கிறித்தவம் போன்ற சிறுபான்மைச் சமூகத்தினரைப் புறக்கணிப்பதாகவும் இவ்வறிவிப்பு அமைந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட பல செயல்திட்டங்கள் நடைமுறைக்கே வரவில்லை.  இந்நிலையில் புதிய பல செயல்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இவை வெறும் அறிவிப்புகளாகவே நின்றுவிடுமா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.  இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய செயல்திட்டங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. தமிழகத்தில் தற்போது மின்வெட்டு பெரும் சிக்கலாக உள்ளது. ஏறத்தாழ 4000 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உடன்குடி மின்திட்டம் பற்றி இந்த நிதிநிலை அறிக்கையில் மீண்டும் குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர, மின் சிக்கலைச் சமாளிப்பதற்கான புதிய திட்டங்கள் ஏதுமில்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்களின் உணவுக் கட்டணத்தை முறையே ரூ.650, ரூ.750ஆக உயர்த்தியிருப்பதும், ஈழத் தமிழர் குடும்பங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க அறிவிப்பு செய்திருப்பதும் வரவேற்கத்தகுந்தது.

தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக ரூ. 1000 கோடியும், பேரிடர் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 850 கோடியும் அறிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.

கல்வி உரிமைச் சட்டத்திற்கான விதிகளை உருவாக்கி நடைமுறைப்படுத்த முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

மற்றபடி தாழ்த்தப்பட்ட- பழங்குடியின மக்கள், தொழிலாளர்கள், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் பாராட்டுதலுக்குரிய அறிவிப்புகள் ஏதும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.  ஏற்கனவே இந்திய அரசு சேவை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை விதித்துள்ள நிலையில், தமிழக அரசு 1500 கோடி ரூபாய் அளவிலான புதிய வரிவிதிப்பை ஏழை எளிய மக்கள் மீது சுமத்தியிருப்பது வேதனையளிக்கிறது.

எனவே தமிழக அரசு புதிய வரி விதிப்புகளை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்.  அடித்தட்டு மக்களை வரிச்சுமைகளிலிருந்து மீட்க முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.
- இவண்
தொல்.திருமாவளவன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக