ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தீக்குளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி மரணம்


இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்துச் சென்னையில் நேற்று தீக்குளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி சிறீதரன் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரின் உடலத்துக்கு அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் இன்று வியாழக்கிழமை வணக்கம் செலுத்தினர். அவரின் உடலம் நாளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஓட்டேரி மயானத்தில் எரியூட்டப்படவுள்ளது.

சென்னை ஓட்டேரி கே.எம். தோட்டம் 9 ஆவது தெருவில் வாழ்ந்து வந்தவர் சதாசிவம் மகன் சிறீதர் (வயது 33). இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

99 ஆவது வட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்த சிறீதர், நேற்று புதன்கிழமை தொடங்கிய அக்கட்சியின் நடைபயணத்தில் கலந்து கொண்டார்.

பின்னர் பிற்பகலில் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி விட்டு புறப்பட்டார். வீட்டுக்கு வந்த சிறீதருக்கு சாப்பாடு வாங்குவதற்காக அவரின் மனைவி லக்ஸ்மி வெளியில் சென்றிருந்தார். சாப்பாட்டுடன் திரும்பி வந்த அவர், வீட்டிற்குள் சிறீதர் தீக்குளித்து உடல் எரிவதைக் கண்டு கதறினார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்னர் சிறீதரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிசிக்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக சிறீதர் தீக்குளித்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர். மருத்துவமனையில் இருந்து அவரின் உடலத்தை பெற்ற அவர்கள், கே.எம். தோட்டத்தில் உள்ள சிறீதரின் வீட்டில் வணக்கத்துக்காக வைத்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சிறீதரின் வீட்டிற்கு சென்று அவரின் உடலத்துக்கு மலர் வளையம் வைத்து வணக்கம் செலுத்தினார்.

பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கக் கோரி சிறீதர் தீக்குளித்துள்ளார். ஆனால் குடும்பச் சண்டை காரணமாக அவர் தீக்குளித்தார் என்று காவல்துறையினர் பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர் என்று குறை கூறினார்.

எங்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற நடை பயணத்தில் கலந்து கொண்ட சிறீதர், முகம் வாடிய நிலையில் சோகமாகவே காணப்பட்டார்.

வீட்டிற்குத் திடீரென்று வந்த அவர் மனைவியை வெளியில் அனுப்பி விட்டு தீக்குளித்தார். ஏற்கெனவே கடலூரில் எங்கள் கட்சியைச் சேர்ந்த தமிழ்வேந்தன் தீக்குளித்து இறந்தார். இனிமேல் இதுபோன்று எவரும் செய்யக் கூடாது என கட்சியினருக்கு வலியுறுத்தியுள்ளேன் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

தீக்குளித்து இறந்த சிறீதரின் உடலம் எரியூட்டல் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர்களான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், தா.பாண்டியன், பழ.நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் சிறீதரின் உடலத்துக்கு இறுதி வணக்கம் செலுத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ஈழத் தமிழர்கள் மீது பற்றுக்கொண்ட சிறீதர் தனது குழந்தைகளுக்கு ஈழச்செல்வன், தமிழ்ச்செல்வன் என்று பெயர் வைத்துள்ளதாகத் திருமாவளவன் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டப்பேரவை உறுப்பினர் சேகர்பாபு ஆகியோரும் சிறீதரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து வணக்கம் செலுத்தினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக