இலங்கையில் தமிழர்கள் மீது விஷவாயு குண்டுகளை வீசி இனப் படுகொலை செய்து வரும் அதிபர் ராஜபக்சேவை கண்டித்து வரும் 9ஆம் தேதி சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைத்தீவில் பாதுகாப்பு வளையம் அறிவிக்கப்பட்ட பகுதியிலும் இலங்கை ராணுவம் நச்சுப் புகைக் குண்டுகளை வீசி பொதுமக்களைக் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்து வருகிறது.
இரண்டாம் உலகப் போரின் போது கூட செய்வதற்கு அஞ்சிய கொடூரத்தை சிங்கள இனவெறி பிடித்த அந்நாட்டு அதிபர் ராஜபக்சே செய்து ஈவிரக்கமின்றி ஈழத் தமிழினத்தை அழித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட சர்வதேசச் சமூகம் அமைதி காத்து வேடிக்கை பார்ப்பது நெஞ்சைப் பதற வைக்கும் கொடுமையாக உள்ளது. அண்மையில் பாதுகாப்பு வளையம் பகுதியில் நச்சுப் புகைக் குண்டுகளை வீசியதில் 400க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும், புலிகள் சரணடையாவிட்டால் முல்லைத்தீவில் சிக்கித் தவிக்கும் ஒட்டுமொத்தத் தமிழர்களையும் நச்சுப் புகைக் குண்டுகளை வீசி அழித்தொழிக்கப் போவதாக ராஜபக்சே கொக்கரித்துள்ளார்.
இதன் பின்னணியில் இந்திய அரசின் கைகளும் உள்ளன என்று சர்வதேச அளவில் பேசப்படுகிறது. கொலைவெறிப்பிடித்த ராஜபக்சே அரசின் பயங்கரவாதப் போக்கிற்குத் துணை நின்றால் இந்திய அரசு நீங்காத வரலாற்றுப் பழியைச் சுமக்க நேரிடும்.
சிங்கள இனவெறியர் ராஜபக்சேவை கண்டித்து வரும் 9ஆம் தேதி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறும். இப்போராட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகளும், தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் கலந்து கொள்ளுமாறு தொல்.திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார். |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக