ஈழம் வெல்ல 5ஆம் கட்ட போருக்காக அரசியல் உத்திகளை வகுப்போம்: திருமாவளவன்


ஈழப் போராட்டத்தை இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்ல மாநில சுயாட்சி அவசியம் தேவை எ‌ன்று கூ‌றிய விடுதலை சிறுத்தைகள் தலைவரு‌ம், பாராளும‌ன்ற உறு‌‌ப்‌பினருமான தொல்.திருமாவளவன், இலங்கையில் 4ஆம் கட்ட போர் முடிந்து 5ஆம் கட்ட போருக்காக அரசியல் உத்திகளை வகுப்போம் எ‌ன்று கூ‌றினா‌ர்.

சென்னை‌யி‌ல் உலகத் தமிழர் பேரவை சார்பில் மாநில சுயாட்சி சிந்தனையரங்கம் நிகழ்ச்சி‌யி‌ல் கல‌ந்து கொ‌ண்டு அவ‌ர் பேசுகை‌யி‌ல், வீரத் தமிழன் என்பதை பிரபாகரன் நிரூபித்து இருக்கிறார். ஆனாலும் களத்தை, நிலத்தை, பலத்தை, எதிர்காலத்தை இழந்து நிற்கிறோம். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து நாம் எதுவுமே செய்யமுடியாமல் ஊனமுற்றவர்கள் போல் இருக்கிறோம். முகாம்களில் இன்னும் தமிழர்கள் இன்னலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இனி நாம் என்ன செய்யப் போகிறோம்

அதிகாரமற்று கூனிக் குறுகி நிற்கும் இந்த நிலையை மாற்ற மாநில அரசுக்கு என்ன உரிமை உள்ளது? எனவேதான் மாநில சுயாட்சி என்ற கருத்து எழுகிறது. மாநில சுயாட்சி பற்றி சட்டசபையில் விரிவாக பேசப்பட உள்ளது. எதுவுமே செய்ய முடியாத அடிமைச் சமுதாயமாகவே இருக்கிறோமே என்பதால்தான் மாநில சுயாட்சி கோரிக்கையை முதலமைச்சர் கருணாநிதி மீண்டும் கொண்டு வந்துள்ளார்.

திரிகோணமலையில் சீனா ராணுவ தளம் அமைக்க அனுமதி வாங்கி இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும். தற்போது இந்தியாவை இலங்கை அரசு ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.


நமது வரிப் பணம், வட மாநில வளர்ச்சிக்குப் போகிறது. தமிழ்நாடு பின்தங்கியுள்ளது. தமிழக மேம்பாடு பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. காவிரி, முல்லைப் பெரியாறு, பவானி ஆற்று தடுப்பணை, ஈழத் தமிழர் விவகாரங்களில் தமிழனுக்கு முற்றிலும் எதிராக உள்ளது. ஈழத் தமிழர் விவகாரத்தில் கூட்டணி ஆட்சியில் இருக்கும் போதே நமது குரல் எடுபடாமல் போய்விட்டது.

1970ஆம் ஆண்டு திருச்சியில் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்த ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றான, 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி' என்ற கருத்தை 40 ஆண்டுகளுக்குப் பிறகு பேச வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. அதற்கான அவசியம் ஏற்பட்டு உள்ளது.

தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பு என்ற நட்பு வட்டத்துக்குள் இந்தியா இருப்பதால், ஈழத் தமிழர் விவகாரத்தில் இலங்கை அரசுக்கு வலியச் சென்று உதவி செய்து நட்பை மேம்படுத்திக் கொண்டுள்ளது. ஆனால் இந்தியாவை இலங்கை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.

இலங்கைக்கு இந்தியா மட்டுமல்ல சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகளும் உதவின. இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட பிறகு பயங்கரவாதத்தை உலகில் இருந்து வேரறுப்பதற்காக எடுக்கப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் பட்டியலில், மக்களால் நடத்தப்படும் விடுதலை புலிகள் இயக்கத்தையும் சேர்த்துவிட்டனர். இதனால் தமிழினம் அழியும் போது உலகம் வாய் மூடி நின்றது. ஏற்கனவே பிரச்சனைகளை உருவாக்கி வரும் சீனா, இலங்கையிலும் கால்பதித்துவிட்டால் இந்தியாவைச் சுற்றி நெருப்பு வளையம் உருவாகிவிடுமே என்ற நிலையில்தான் இலங்கை அரசுக்கு இந்தியா ஆதரவாகப் போய்விட்டது. எனவே நமது போராட்டம் நசுக்கப்பட்டுவிட்டது.

மாநில அரசுக்கு வெளி விவகாரத் துறையில் எந்த அதிகாரமும் கிடையாது. மசோதாவை நிறைவேற்றி மத்திய அரசுக்கு கொண்டு சேர்க்கும் பணிதான் மாநிலத்துக்கு உள்ளது. அதாவது அஞ்சல் துறை போல்தான் மாநில அரசுகள் செயல்படுகின்றன. ஈழப் போராட்டத்தை இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்ல மாநில சுயாட்சி அவசியம் தேவை. இலங்கையில் 4ஆம் கட்ட போர் முடிந்து 5ஆம் கட்ட போருக்காக அரசியல் உத்திகளை வகுப்போம்'' எ‌ன்று ‌திருமாவளவ‌ன் பேசினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக