இந்தியா போரை நிறுத்தச் சொல்லாதது மன்னிக்க முடியாத குற்றம்.- திருமா ஆவேசம்



ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தின் சார்பில் மதுரை மேலமாசி வீதி சந்திப்பில் நடந்த பொதுக்கூட்டம் இரவில்தான் நடந்தது என்றாலும் வார்த்தைகள் உஷ்ணமாகவே வெளிப் பட்டன. பேராசிரியர் சுப.வீரபாண்டியன், ""நான் மதிக்கக்கூடிய வைகோ ஈழத் தமிழருக்கு எதிரான ராஜபக்சேவை முதல் எதிரியாகக் கருதாமல், கலைஞரை முதல் எதிரியாக சித்திரிக்கப் பார்க்கிறார். அவர் வழிநடத்தும் இயக்கம் போயஸ் தோட் டத்து இயக்கமாக நடைபெறுவதால் நாங்கள் தனியாக இயக்கம் நடத்த வேண்டியதாகிவிட்டது. நாங்கள் ஒரு காலமும் போயஸ் தோட்டத்தில் கால் மிதிக்க விரும்பாதவர்கள். தேர்தல் வரை தனி ஈழம் பற்றிப் பேசிய ஜெயலலிதா இப்போது எங்கே? கொடநாட்டிலா தனி ஈழம் காண்கிறார்?'' என்றார்.

சுப.வீ.யைத் தொடர்ந்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேச வந்தபோது கூட்டம் ஆர்ப்பரித்தது. ""உலகில் 500 கோடி மக்கள் வாழ்கிறோம். அவர்களில் பிரபாகரனைப்போல ஒரு போராட்டத் தலைவனை உங்களால் கூற முடியுமா? அதனால்தான் அவரை மாவீரன் என்று அழைக்கிறோம்.

இலங்கையில் 6 மாதத்தில் 1 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்போது போர் நிறுத்தம் வேண்டும் என குரல் ஒலித்தும், இந்தியா போரை நிறுத்தச் சொல்லாதது மன்னிக்க முடியாத குற்றம். நாடாளுமன்றத்தில் எனக்கு வழங்கப்பட்ட நேரத்தில், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்திய அரசு துரோகம் செய்துவிட்டது என்று சொன்னேன். அந்த நேரத்தில், நாடாளுமன்றத்தில் பிரதமர் இல்லை. சோனியாகாந்தி இல்லை. 543 எம்.பி.க்களில் வெறும் 35 எம்.பிக்கள் மட்டுமே இருந்தனர்'' என்று கோபத்தையும் வேதனையையும் வெளிப்படுத்திய திருமா, தன்னுடைய கூட்டணி நிலைப்பாடு பற்றி பேசத் தொடங்கினார்.

""என்னிடம் சிலர், இன்னமும் இந்தக் கூட்டணியில் இருக்கிறீர் களா என்று கேட்கிறார்கள். கலைஞ ருடனான கூட்டணியில் நான் தொடர்ந்து இருக்கத்தான் செய்வேன். ஈழத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பேன்.குடித்துவிட்டு வந்து தன் தாயை துன்புறுத்தும்தகப்பனை குடும்பத்திலிருந்தே செறுப்பால் அடித்து திருத்தும் மகனை போல், கூட்டணியிலுருந்தே ஈழ மக்களுக்காக போராடுவேன் என்றார்.

இதற்காக கூட்டணியில் என்னை வைத்துக் கொள்ள விருப்பம் இருந்தால் வைத்துக் கொள்ளட்டும். இல்லையென்றால் முடிவை அவர்களே எடுக்கட்டும். இதற்கு நானோ விடுதலை சிறுத்தைகளோ பயப்படப் போவதில்லை. இலங்கை யில் நான்காம் கட்டப் போர்தான் முடிந்துள்ளது. இன்னமும் போருக்குப் புலிகள் தயாராக இருக்கிறார்கள். ஐந்தாவது போரில் பிரபாகரன் தோன்றுவார். போராடுவார். அவர்தான் போரை வழிநடத்துவார். அவர் வெற்றி அடைவார்'' என்று திருமா உரத்த குரலில் சொன்னபோது கூட்டம் ஆர்ப்பரித்தது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேச வந்தபோதும் அந்த ஆர்ப்பரிப்பு தொடர்ந்தபடியே இருந்தது. கி.வீரமணி தனது உரையில், ""எனக்கு முன்னால் திருமா நிறைய பேசிவிட்டார். நாங்கள் ஆரம்பித்த இயக்கம் யாருக்கும் எதிரி அல்ல. வைகோவும் இங்கு வரலாம். எங்களுக்கு ஒரே எதிரி ராஜபக்சேதான். தமிழர்களை மதம், சாதி என பிரித்து வைத்து பார்க்கவேண்டாம். நாம் தமிழுணர்வுடன் தமிழர்களுக்காக குரல் எழுப்ப வேண்டும்'' என் றார் அழுத்தம் கொடுத்து.

மதுரை பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் வெளிப்படையாகப் பேசியவை, காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியலைகளை உண்டாக்கி யிருக்கிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அங்கம் வகிக்கும் நிலையில், இலங்கை பிரச்சனையில் இந்திய அரசு துரோகம் செய்துவிட்டது என நாடாளு மன்றத்தில் திருமா பேசியதுடன் அதை மக்கள் மன்றத்திலும் வெளிப்படுத்தியிருப்பதால் இது சர்ச்சையாக்கப்படும் என டெல்லி அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.

கூட்டணி அரசியல் எல்லைகளைக் கடந்து, ஈழத்தமிழர் பிரச்சனையை இந்திய நாடாளுமன்றத்தில் அழுத்தமாகப் பதிவு செய்வதற்கான வாய்ப்பாகத்தான் எம்.பி. பதவி கிடைத்திருக்கிறது என நினைக்கிறார் திருமா. அவரிடமிருந்து தொடர்ச்சியாக வெளிப்படவிருக்கும் குரல்கள் காங்கிரசுக்கு நெருக்கடியை உண்டாக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது



0 கருத்துகள்:

கருத்துரையிடுக