தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கவில்லை திருமாவளவன் குற்றச்சாட்டு


இலங்கை தமிழர் பிரச்சினை:
தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கவில்லை
திருமாவளவன் குற்றச்சாட்டு

நடைபெறுகின்ற நாடாளுமன்ற கூட்ட தொடரில் பங்கேற்பதற்காக சிதம்பரம் தொகுதி எம்.பி.யும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் டெல்லி சென்றுள்ளார் நேற்று பதவி ஏற்று கொண்ட அவர் இரவு டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

"முதன் முறையாக மக்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ள நான், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பேன்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யுமாறு அந்த நாட்டு அரசை வற்புறுத்துமாறு தமிழக அரசியல் கட்சிகள் பல வழிகளில் கோரியபோதும், அதற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.


இந்த பிரச்சினையில் தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கவில்லை.

இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு போதுமான வசிப்பிடம், சுகாதார வசதிகள் செய்து தரப்படவில்லை. இலங்கையில் இன்று போர் முடிந்துள்ள சூழ்நிலையில், விருப்பமில்லாத அகதிகளை தாயகம் திரும்புமாறு மத்திய அரசு நிர்ப்பந்திக்கக் கூடாது.

அடுத்த வாரம் இந்தியா வரும் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவுக்கு மத்திய அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கக் கூடாது. அப்படி செய்வது இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரை இந்தியா அங்கீகரிப்பது போல் ஆகும்." என்று தெரிவித்தார்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக