ஜெர்மனி தமிழர் வாழ்வுரிமை மாநாடு - திருமா எழுச்சி உரை (பகுதி 2)

விடுதலைச் சிறுத்தைகள் உணர்வுப்பூர்வமாக அடுக்கடுக்கான போராட்டங்களை நடத்தியது. 80 வயது முதியவர் ஒருவர் என்னை கட்டிப்பிடித்து என்னிடத்திலே சொன்னார். தம்பி 1965க்குப் பிறகு தமிழகத்திலே எழுச்சி மிகுந்த ஒரு போராட்டம் நடைபெற்றது என்று சொன்னால் அது நீங்கள் நடத்திய இரயில் மறியல் போராட்டம்தான் பாராட்டுகிறேன் என்று சொன்னார். ஆக தமிழ்நாடு முழுக்க எல்லா இரயில் நிலையங்களுக்கும் போய் விடுதலைச் சிறுத்தைகள் ஆக்கிரமிப்புச் செய்து இரயில்களை மறித்தனர். நான் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் ஒன்றரை மணிநேரம் ஆயிரக்கணக்கான தோழர்களோடு ரயிலை மறித்து நின்றேன். அதற்குப் பிறகு தொழிலாளர் அணியினரின் போராட்டம், மகளிர் அணியினரின் போராட்டம், மாணவர்களின் சார்பிலே போராட்டம் அதன் தொடர்ச்சியாக தமிழீழத்தை அங்கீகரிப்போம் என்று கூறி தமிழீழ அங்கீகார மாநாடு. அந்த மாநாட்டுக்குத் தடை விதிக்கும்படி காங்கிரஸ் பேரியக்கத்தைச் சார்ந்தவர்கள் சட்டசபையிலே கூச்சல் போட்டார்கள். மறுபடியும் ஜெயலலிதா அம்மையார் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். தமிழீழ அங்கீகார மாநாட்டிற்குத் தடை விதிக்க வேண்டும் என்று சொன்னார்கள். காவல்துறை தடை விதித்தது. நான் முதல்வர் வரை போய் பேசினேன். இந்த மாநாடு தமிழீழத்தை அங்கீகரிக்கிற மாநாடு தானே. தமிழீழத்தில் உங்களுக்கும் உடன்பாடு உண்டுதானே. காவல்துறை தடை விதிப்பது ஏன் என்று கேட்டேன். உடனே அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, இந்த மாநாட்டிற்கு எதற்காகத் தடை விதிக்கிறீர்கள், அனுமதி தாருங்கள் என்று சொன்னார். அப்படி அனுமதிபெற்று அந்தமாநாட்டை நடத்தினோம். இலட்சக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் அந்த மாநாட்டில் பங்கேற்றார்கள். இதற்குப் பிறகு சனவரி 2ஆம் தேதி கிளிநொச்சியைக் கைப்பற்றிய செய்தியைக் கேட்டு திடுக்கிட்ட நான், அதிர்ச்சியடைந்த நான் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளானேன்.

ஜனவரி 4ஆம் தேதி திருச்சிராப்பள்ளியிலே வே. ஆனைமுத்து அவர்களின் தலைமையிலே நடைபெற்ற பெரியாரிய மார்க்சிய மாநாட்டிலே கலந்துகொண்டு நான் பேசியபோது வெளிப்படையாக, தமிழகத்துத் தலைவர்களே, தமிழ் உணர்வாளர்களே, தமிழ்த் தேசிய சிந்தனையாளர்களே, கட்சியை அரசியலைத் தூக்கி ஓரம் வைப்போம் வாருங்கள். நம் ஈழத்தின் தலைநகராக விளங்கிக் கொண்டிருக்கிற கிளிநொச்சியை சிங்கள இனவெறியர்கள் கைப்பற்றி விட்டதாகச் செய்திகள் வருகின்றன. இந்த நேரத்தில் இப்போதாவது நாம் ஒன்றுபட்டு நிற்போம். உங்களையெல்லாம் நான் நேரில் வந்து சந்திக்கப் போகிறேன். அரசியல் கட்சி மாச்சரியங்களைக் கடந்து நான் உங்களை நேரில் சந்திக்கப் போகிறேன். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம் வாருங்கள் என்று அந்த மாநாட்டில் அறைகூவல் விடுத்தேன். 5ஆம் தேதி நான் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாசு அவர்களைச் சந்தித்தேன். அவரும் நானும் சேர்ந்து பேசி ஒன்று சேர்ந்து ஏதேனும் செய்ய வேண்டும். இனி நாம் அமைதி காக்கக் கூடாது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் உயிருக்கு ஆபத்துச் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் நாம் ஒன்றுபட வேண்டிய தேவை இருக்கிறது என்பதை பா.ம.க. நிறுவனர் அவர்களோடு கலந்து பேசி இருவரும் சேர்ந்து பெரியார் திடலுக்குப் போனோம். அங்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களைச் சந்தித்துப் பேசினோம். நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து சனவரி 10ஆம் தேதி ஒரு ஆலோசனைக் கூட்டுவது என்றும் அதற்கு அனைவரையும் அழைப்பது என்றும் முடிவுசெய்தோம். பெரியார் திடல் என்பது பொதுவான இடம். ஆசிரியர் வீரமணி ஒருங்கிணைத்தால் இது வெற்றிகரமாக அமையும் என்று பா.ம.க.நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் சொன்னார். அதனடிப்படையிலே ஆசிரியர் வீரமணி அவர்கள் கைப்பட ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதம் எல்லோருக்கும் அனுப்பப்படுகிறது. அய்யா பழ. நெடுமாறன், அண்ணன் வைகோ, தோழர் தா. பாண்டியன், தோழர் வரதராசன் இப்படி எல்லோருக்கும் அனுப்பப்படுகிறது. தி.மு.க. தலைவருக்கும் அனுப்பப்படுகிறது. தொலைபேசி வாயிலாகப் பேசியபோது சரி என்று ஒப்புக்கொண்ட நிலையில் திடீரென்று 10ஆம் தேதி கூட்டம் ரத்து என்று அறிவிக்கப்படுகிறது.

யார் அறிவித்ததென்றால் மதிப்பிற்குரிய ஈழத் தமிழர்களுக்காகவே தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கக்கூடிய அய்யா பழ. நெடுமாறன் அவர்கள் அந்தக் கூட்டம் இல்லை என்று அறிவிக்கிறார். அதிர்ச்சியடைந்தோம். மருத்துவர் இராமதாசு அவர்களைப் போய்ப் பார்க்கிறேன். அய்யா இப்படி அறிவித்துவிட்டாரோ, ஈழத்தில் கொடுமைகள் நடந்துகொண்டிருக்கிற சூழலில் நாம் உடனடியாகக் கூடி பேசியாக வேண்டுமே, ஏன் ரத்து செய்தார் என்று கேட்டபோது, பெரியார் திடலில் நடைபெற்றால் வைகோ வரமாட்டார், தா. பாண்டியன் வரமாட்டார். ஏனென்றால் அவர்கள் அதிமுக கூட்டணியில் இருக்கிறார்கள் என்ற செய்தியைச் சொன்னபோது நான் அதிர்ச்சியடைந்தேன். கூட்டம் 12ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டது. இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் சொல்லுகிறார். இந்த நேரத்தில் ஆசிரியர் அவர்கள் வருத்தப்படக்கூடாது என்பதற்காக மருத்துவர் இராமதாசு அவர்களை அழைத்துக்கொண்டு இரண்டு பேரும் சேர்ந்து பெரியார் திடலுக்குப் போகிறோம். பெரியார் திடலில் ஆசிரியர் வீரமணி அவர்களைச் சந்தித்து வருத்தம் தெரிவிக்கிறோம்.

நமக்குப் பிரச்சனைதான் முக்கியம். எந்த இடம் என்பது முக்கியமல்ல. 12ஆம் தேதி நடக்கிற அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வோம். இந்தக் கூட்டம் ரத்தானதைப் பற்றிக் நீங்கள் கவலைப்படவேண்டாம் என்று அவரைச் சமாதானப்படுத்தி, அந்தக் கூட்டத்திற்கு நீங்கள் வரவேண்டும் என்று சொல்லுகிறோம். அதற்கு அவர், காங்கிரஸ் கட்சியோடு நட்புறவோடு இருப்பது தி.மு.க. முதலமைச்சர் அவர்கள் மத்திய அரசாங்கத்தோடு பேச வேண்டிய நிலையில் இருக்கிறார். அவரை பகைத்துக்கொண்டு ஒரு கூட்டம் போடுவது போல் அமையக்கூடாது. எனவே தகவலை அவருக்குச் சொல்லுவோம். கூட்டம் நடக்கட்டும் என்று ஒரு ஆலோசனையைச் சொன்னார். அதற்கு பா.ம.க. தலைவர் ஒத்துக்கொண்டார். அதன்படி பா.ம.க. தலைவர் கோ.க. மணி அவர்கள் தி.மு.க. தலைவரிடத்திலே தேதி வாங்கினார். 12ஆம் தேதி தி.மு.க. அமோக வெற்றி கலைஞர் அவர்களின் வீட்டில் ஏராளமான கூட்டம். அதற்கிடையில் நானும் பாமாக நிறுவனர் ராமதாஸ் அவர்களும், ஆசிரியர் கி. வீரமணி அவர்களும், கோக மணி அவர்களும் நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து அவர்களிடத்தில் சந்தித்து ஈழத்தமிழர் விவகாரம் குறித்து பேசினோம். ஆசிரியர் வீரமணியும், இராமதாசும், கோகாமணியும் நானும் கையொப்பமிட்ட முதல்வர்களிடத்தில் ஒரு மனுவை கொடுத்தோம். அந்த மனுவில் என்ன இருக்கிறது என்றால் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தப் பட்ச செயல் திட்டம் என்ன இருக்கிறது என்றால் ஈழத்தமிழர்கள் விவகாரம் பற்றிப் பேசப்பட்டிருக்கிறது. இதைச் சொல்லி நீங்கள் சோனியாகாந்தி அம்மையார் அவர்களிடத்தில் சொல்லி உடனடியாக போரை நிறுத்துவதற்குரிய ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று கூறிய போது முதல்வர் அவர்கள் எடுத்த முயற்சிகளையெல்லாம் சொன்னார். என்னென்ன செய்தோம் ஆனால், அவர்கள் செவிமடுக்கவில்லை. அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டினோம், போரை நிறுத்துங்கள் என்று தீர்மானம் போட்டோம். சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டோம், மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினோம் எதையுமே அரசு கண்டுகொள்ளவில்லை. இனி என்னதான் செய்வதென்று தெரியவில்லை. முதல்வர் அவர்கள் தலைமையில் மீண்டும் ஒரு அனைத்துக் கட்சி கூட்டம் கூடியது. முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலே அதிமுக, மதிமுக கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றியபோது வெளியேறிவிட்டார்கள்.

மனிதச் சங்கிலிப் போராட்டத்திலே அதிமுக கலந்துகொள்ளவில்லை, மதிமுக கலந்துகொள்ளவில்லை, கம்யூனிஸ்ட் கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் கலந்துகொண்டன. பா.ம.க.வுக்கும் திமுகவுக்கும் கடுமையான முரண்பாடு ஏற்பட்டு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அந்த நிலையிலும் பா.ம.க. மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டது. கொட்டும் மழையிலே மருத்துவர் இராமதாசு அவர்கள் நின்றார். நானும் நின்றார். ஏறத்தாழ 4 மணி நேரம் சென்னையிலிருந்து செங்கற்பட்டு வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. அப்படிப்பட்ட அந்த நேரத்தில் அதிமுக கலந்துகொள்ளவில்லை. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுகிறதுபோது அதிமுக கலந்துகொள்ளவில்லை. பிரதமரைச் சந்திப்பதற்காக புதுதில்லிக்குச் சென்ற அனைத்துக்கட்சிக் குழுவில் அதிமுக கலந்துகொள்ளவில்லை, மதிமுக கலந்துகொள்ளவில்லை. சி.பி.ஐ. சார்பாக தா. பாண்டியன் கலந்துகொண்டார். சி.பி.எம். கலந்துகொள்ளவில்லை. இவற்றையெல்லாம் எடுத்துச் சொல்கிறார். சொல்லிவிட்டு இனி என்ன செய்ய? நான் வேண்டுமானால் உண்ணாவிரதம் இருக்கட்டுமா என்று கேட்கிறார். எத்தனையோ முயற்சிகள் செய்தாகிவிட்டது. மத்திய அரசு கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. சொல்கிறோம் சொல்கிறோம் என்றுதான் சொல்லி மழுப்புகிறார்கள். என்ன செய்ய? நான் வேண்டுமானால் உண்ணாவிரதம் இருக்கட்டுமா என்று கேட்டபோது, உடனடியாக மறுதலித்து, உங்கள் உடல்நிலைக்கு நீங்கள் உண்ணாவிரதம் இருப்பது சரியில்லை என்று மருத்துவர் இராமதாசும் சொன்னார், ஆசிரியர் வீரமணியும் சொன்னார். வேண்டாம், நீங்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று சொன்னார்கள். நான் வெளியே வந்து அவர்களிடத்தில் சொன்னேன் அவரே உண்ணாவிரதத்திற்கு ஒத்துக்கொள்கிறபோது நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள். அவர் ஒரு மணி நேரம் உட்கார்ந்தால்கூட, இந்திய அரசின் கவனத்தை ஈர்த்திருக்கலாமே, ஏன் நீங்கள் இருவரும் மறுதலித்தீர்கள் என்று கேட்டேன். நாம் அனைவரும் சேர்ந்து வேறு போராட்டம் நடத்தலாம் என்று சொன்னார்கள். 12ஆம் தேதி முதல்வர் அவர்களைச் சந்தித்துவிட்டு வெளியே வரும்போது ஒரு செய்தி வருகிறது. அய்யா நெடுமாறன் அவர்கள் மறுபடியும் சொல்கிறார் 12ஆம் தேதி கூட்டம் ரத்து. நடந்ததை அப்படியே உங்களுக்குச் சொல்கிறேன். எந்தக் குற்ற உணர்ச்சியோடும் குற்றப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடும் நான் சொல்லவில்லை. இதையெல்லாம் நான் தமிழகத்திலும் பேசியிருக்கிறேன். இங்கே உங்களுக்கும் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை. 12ஆம் தேதி கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. எனக்கு மீண்டும் அதிர்ச்சி. தாங்க முடியவில்லை. மாலையே நான் போய் மருத்துவர் இராமதாசு அவர்களைச் சந்திக்கிறேன். என்ன இது? இனம் அழிந்துகொண்டிருக்கிறது. ஏன் கூட்டம் மறுபடியும் இரத்து என்று கேட்டேன். ஒன்றுமில்லை. நாம் மூன்று பேரும் முதல்வரைச் சந்தித்தது அய்யா பழ. நெடுமாறன் அவர்களுக்கு உடன்பாடில்லை. அதனால் கூட்டம் ரத்து. முதல்வரைச் சந்தித்தால், அதிமுகவும் சிபிஎம்மும் வராது. அந்தம்மா கோபித்துக்கொள்வார். இதுதான் காரணம். 12ஆம் தேதி கூட்டம் ரத்து செய்யப்பட்டவுடன் மருத்துவர் அவர்களைச் சந்தித்து நான் சொன்னேன், இனிமேல் அனைவரோடும் சேர்ந்து என்னால் பணியாற்ற முடியாது. நான் தனித்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். ஏற்கனவே ரயில் மறியல் போராட்டம் நடத்தினோம். மகளிர் விடுதலை முன்னணி சார்பில் உண்ணாவிரதம் நடத்தினோம். தொழிலாளர் விடுதலை முன்னணியின் சார்பில் ஒரு நாள் முழுக்க தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மாணவர் அணி சார்பில் பேரணியும் பொதுக்கூட்டமும் நடத்தினோம். தமிழீழ அங்கீகார மாநாடு நடத்தினோம்.

தொடரும்....



ஜெர்மனி தமிழர் வாழ்வுரிமை மாநாடு - திருமாவின் எழுச்சி உரை (பகுதி 1)


0 கருத்துகள்:

கருத்துரையிடுக