ஜெர்மனி தமிழர் வாழ்வுரிமை மாநாடு - திருமா எழுச்சி உரை (பகுதி 3)

னிமேல் ஒரே வழிதான். நான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். நீங்கள் ஒத்துழைப்பதாக இருந்தால் நீங்கள் வரவேண்டாம். உங்கள் கட்சித் தலைவர் கோ.க. மணி அவர்கள் என்னோடு உட்காரட்டும் என்று நான் சொன்னேன். சற்று யோசித்து விட்டுச் சொன்னார். சரி மணியும் நீங்களும் உட்காருங்கள். என்னைக்கு உட்கார்வது என்று கேட்டார். அதற்கு, ஈழம் இன்றைக்கு இரத்தச் சகதியில் கிடக்கிறது. எனவே நமக்கு இந்தப் பொங்கல் வேண்டாம். 14ஆம் தேதியே உட்காருவோம் என்று சொன்னேன். நான் சொன்னது 12ஆம் தேதி. பொங்கலன்று வேண்டாம் என்று மருத்துவர் சொன்னார். இரண்டே போர்தான் உட்காரப் போகிறோம். யாரும் தேவையில்லை. எனவே 14ஆம் தேதியே பொங்கலன்றே உட்கார்கிறோம் என்று நான் சொன்னேன். அதற்கு மீண்டும் அவர் சொன்னார் பொங்கலன்று வேண்டாம். பொங்கல் முடிந்து பார்ப்போம் என்று சொன்னார். பின்னர் பேச்சுவார்த்தை நடந்து 15ஆம் தேதி கடைசி நாள். எனவே 16ஆம் தேதி உட்கார்வது என்று முடிவானது. நானும் என்னோடு சேர்ந்து கோ.க. மணியும் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பது என்று முடிவெடுத்துவிட்டு வீட்டிற்குத் திரும்புகிறேன். மாலை 7 மணியளவிலே தொலைபேசியில் என்னோடு தொடர்புகொள்கிறார் மருத்துவர். தம்பி, அந்தப் போராட்டம் வேண்டாம். அதெல்லாம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஒரே ஒரு மணி நேரம் முதல்வர் உண்ணாவிரதம் இருந்தால் இந்திய அரசின் கவனத்தை ஈர்க்க முடியும். நீங்கள் ஒன்று செய்யுங்கள். நேரடியாக முதல்வரைச் சந்தித்து முறையிடுங்கள். இல்லையென்றால், முதல்வருக்கு நெருக்கமாயிருக்கிற திட்டக் குழுத் தலைவர் நாகநாதன் அவர்களைச் சந்தித்து முறையிடுங்கள். முதல்வர் இருக்கட்டும். நாம் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று சொல்கிறார். உடனே நானும் தோழர் இரவிக்குமார் அவர்களும் நாகநாதன் அவர்களைச் சந்தித்து இரண்டரை மணி நேரம் அவருடன் பேசி எப்படியாவது கலைஞரை இதற்கு ஒப்புக்கொள்ள வையுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துவிட்டு வந்துவிட்டேன். அடுத்த நாள் 13ஆம் தேதி நான் நாகநாதனைத் தொடர்புகொண்டால், முதல்வரை இன்னும் சந்திக்கவில்லை, சொல்லவில்லை என்று சொன்னார். அப்போதுதான் நானே ஒரு முடிவுக்கு வந்தேன். இனி யாரோடும் நம்மால் இணைந்து வேலை செய்ய முடியாது. திட்டமிட்டபடி உண்ணாநிலை அறப்போரைத் தொடங்குவோம் என்று என்னுடன் இருந்த தம்பிகளை அழைத்து நான் ஆணையிடுகிறேன். உடனே 14ந்தேதி உண்ணாவிரதம் அனுமதி தாருங்கள் என்ற காவல்துறைக்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதுகிறோம். அதற்கு அவர்கள் முதன்முறையாக 14ந்தேதி தமிழ் வருடப்பிறப்பு அறிவித்திருக்கிறார்கள். எனவே நீங்கள் 15ந்தேதிக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். சரி என்று நாங்கள் ஒத்துக்கொண்டு 15ந்தேதிக்கு அனுமதி கேட்டுக் கடிதம் எழுதுகிறோம். அனுமதிக் கடிதத்தில் அவர்கள் என்ன எழுதுகிறார்களென்றால், நீங்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக எங்களுக்குத் தகவல்கள் வருகின்றன. எனவே காலையில் 8 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணிக்கு முடித்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அப்புறப்படுத்தப்படுவீர்கள் என்று எங்களுக்கு அனுமதி தருகிறார். காவல்துறை இப்படிச் செய்வார்கள் என்று தெரிந்து நான் வேறு ஒரு தனியார் இடத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன். நான் போகாத பள்ளிக்கூடம் இல்லை, நான் போகாத கிறித்தவ நிறுவனங்கள் இல்லை. ஒரு பெரிய மைதானம் கிடைத்தால் அந்த மைதானத்திலே போய் உட்கார்ந்து கொள்ளலாம். யாரும் நம்மை அசைக்க முடியாது. தனியார் இடத்தில் வந்து யாரும் நம்மை அப்புறப்படுத்த முடியாது என்ற நம்பிக்கையில் யார் யாரையோ சென்று பார்க்கிறேன். ஒருவரும் இடம் தரவில்லை. தனியாக வண்டியை ஓட்டிக்கொண்டே தாம்பரம் வரையிலே போனேன். காட்டாங்கொளத்தூர் அருகே நம் கட்சிக்காரருக்கு ஒரு இடம் இருப்பதாகச் சொன்னார்கள். அங்கே போய்ப் பார்த்தால் அங்கே ஒரு பரந்தவெளியில் ஒரு இடம் இருந்தது. இரவு இரண்டரை மணி. தம்பிகளிடத்தில் நான் சொன்னேன். இந்த இடத்திற்கு நான் காலை 6 மணிக்கு வருவேன். ஒரு பந்தலைப் போடுங்கள். காவல்துறை கேட்டால் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. திருமாவளவன் கலந்துகொள்கிறார் என்று சொல்லுங்கள். வேறு எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டு நான்கு மணிக்கு வீட்டுக்கு வந்து, ஏழு மணிக்கெல்லாம் பந்தலுக்குச் சென்று அமர்ந்தேன். சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அப்படித்தான் நான் தொடங்கினேன். உடனடியாக ஆசிரியர் வீரமணி வந்தார். கலைஞர் சார்பாக ஆர்க்காடு வீராசாமி அவர்கள் வந்தார்கள். என்னிடத்திலே வந்து, நீங்கள் கூட்டணியிலே இருந்துகொண்டே இத்தகைய போராட்டங்களை நடத்துவது சரியா? உடனடியாக போராட்டத்தைக் கைவிட்டு விட்டு தலைவரை வந்து பாருங்கள் என்று சொன்னார். அவரிடத்திலே நான் சொன்னேன். முடிவெடுத்து விட்டேன். எத்தனை நாளானாலும் என் போராட்டத்தை முடிக்க மாட்டேன். கைது செய்தால் கைது செய்துகொள்ளுங்கள் என்று அவரிடத்திலே நான் சொல்லி அனுப்பிவிட்டேன்.

அடுத்த நாள் பா.ம.க. நிறுவனர் இராமதாசு அவர்கள் வருகிறார்கள். அவரிடமும் நான் அப்படிச் சொல்லி அனுப்பிவிட்டேன். ஏராளமான தலைவர்கள் வந்து வாழ்த்திவிட்டுச் சென்றார்கள். நான்கு நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடக்கிறது. தமிழ்நாடு முழுவதிலும் விடுதலைச் சிறுத்தைகள் கைது செய்யப்படுகிறார்கள். ஊடகங்களில் இயக்குநர் சீமான் கைது, கொளத்தூர் மணி கைது என்றுதான் செய்தி வருகிறது. ஆனால் நான்கு நாள் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் 316 பேர் கைதானார்கள். பேருந்துகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. 10 பேருந்துகள் கொளுத்தப்பட்டன. திருமாவளவன் சாகும்வரை உண்ணாவிரதத்தால் இளைஞர்கள் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்கிற செய்தி ஏடுகளில் வருகின்றன. காவல்துறையும் அமைச்சர்களும் கடுமையாக என்மீது கோபித்துக் கொண்டார்கள். எந்த நேரத்திலும் என்னை கைது செய்ய முடியும். கைது செய்தால் இன்னும் அதிகமாக வன்முறை வெடிக்கும் என்ற இக்கட்டான நிலையில் என்னை சமாதானப்படுத்த முயற்சித்தார்கள். நான் ஒப்புக்கொள்ளவில்லை.

கடைசியில் நான் யாருக்காக ஒப்புக்கொண்டேனென்றால், நான்காவது நாள் மருத்துவர் அவர்கள் மேடைக்கு வருகிறார். என் உடன் இருந்த தோழர்கள் எல்லாத் தலைவர்களையும் அழைத்து நாங்கள் சொன்னால் கேட்க மறுக்கிறார், நீங்கள் வந்து சொல்லுங்கள் என்று மருத்துவரிடத்திலும் பேசி அவரை வரவழைத்தார்கள். வன்முறை பெருகுகிறது. எல்லா இடங்களிலும் தோழர்கள் கைதாகிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருக்கிறபோது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தோழர்கள் 26 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் தி.மு.க. அரசு கைது செய்கிறது. இன்றைக்கும் 6 பேர் உள்ளே இருக்கிறார்கள். நீதிமன்றத்திலே வாதாடி அந்த வழக்கை உடைத்து 20 பேரை வெளியே கொண்டுவந்துள்ளோம். கூட்டணிக் கட்சி என்பதற்காக எந்தச் சலுகையும் எனக்குக் காட்டப்படவில்லை. என்னைக் கைது செய்ய வேண்டும் என்பதற்கான எல்லா முஸ்தீபுகளும் நடந்து கொண்டிருந்தன. அந்த நேரத்திலே என்னுடைய தோழர்கள் பா.ம.க. நிறுவனரைத் தொடர்புகொண்டு அழைத்து, அவரும் மேடைக்கு வந்து எனக்கு ஒரு உத்தரவாதம் தந்தார். தம்பி, நீங்கள் மட்டும் தனியாக போராட்டம் நடத்துவதனால் எந்தத் தாக்கமும் ஏற்படாது. சேர்ந்து நடத்துவோம். பத்து நாள் தொடர் போராட்டம் நடத்துவோம். பால் வண்டியைத் தவிர, மருத்துவ வண்டியைத் தவிர, ஆம்புலன்ஸ் வண்டியைத் தவிர வேறு எந்த வண்டியும் இங்கே ஓடாது என்கிற நிலையை உருவாக்குவோம். போராட்டத்தைக் கைவிடுங்கள் என்று மேடையிலே சொன்னார். பா.ம.க.வும், மதிமுகவும், சி.பி.ஐயும், நெடுமாறன் அவர்கள் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கங்களும் இன்னும் பல்வேறு தமிழ் இயக்கங்களெல்லாம் வரும் என்கிற நம்பிக்கையிலே அந்த நேரத்தில் நான் உண்ணாவிரதத்தை 18ந்தேதி இரவு 8 மணிக்கு நான் நிறைவு செய்தேன். அப்படி நிறைவு செய்கிற போது ஒன்றரை மணி நேரம் நான் பேசினேன். அந்தப் பேச்சில்நான் சொன்னேன். தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுகிற காங்கிரஸ் பேரியக்கத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் நாம் கெள்ளி எறிய வேண்டும் என்று சொன்னேன். எந்த நம்பிக்கையிலே...? இந்தக் கட்சிகளெல்லாம், ஈழத் தமிழர் ஆதரவு இயக்கங்களெல்லாம் நம்மோடு சேர்ந்து களமாடும் என்ற நம்பிக்கையிலே நான் பேசினேன். குற்றம் சாட்டுகிறேன் என்று யாரும் எண்ணிவிடக் கூடாது. அடுத்த நாள் பா.ம.க. நடத்திய ஆர்ப்பாட்டம் சென்ட்ரல் அருகே நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மருத்துவர் இராமதாசு அவர்கள், என்னை வைத்துக் கொண்டு திருமாவளவன், காங்கிரசைக் கண்டித்துப் பேசிய கண்டனத்துக்குரியது, அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று பேசி அன்றைய மாலை ஏடுகளில் வந்துள்ளது. கடைசிவரை அவர்கள் காங்கிரஸ் அமைச்சரவையிலே இருந்து வெளியே வரவில்லை. கடைசி வரையில் மதிமுக உறுப்பினர்கள் பதவியை இராஜினாமா செய்யவில்லை. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா செய்ய முன்வந்தபோது, பா.ம.க. முன்வரவில்லை, மதிமுக முன்வரவில்லை, அதிமுக முன்வரவில்லை, கம்யூனிஸ்ட்கள் முன்வரவில்லை. தமிழர்கள் அழிந்து கொண்டிருக்க நிலையில் இங்கே இரண்டு உறுப்பினர்கள் இருந்து என்ன செய்யப் போகிறோம் என்று மதிமுக இராஜினாமா செய்திருந்தால் தி.மு.க.வுக்கு நெருக்கடி வந்திருக்கிறோம். ஐந்து உறுப்பினர்களை வைத்து என்ன சாதிக்கப் போகிறோம் என்று பா.ம.க. இராஜினாமா செய்திருந்தால் தி.மு.க.வுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும். அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்கள் இராஜினாமா செய்திருந்தால் தி.மு.க.வுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும். கடைசி வரை யாரும் அதற்குத் தயாராக இல்லை.

விடுதலைச் சிறுத்தைகளின் சாகும் வரை உண்ணாநிலை அறப்போர் 4ஆம் நாளில் முடிந்தது. 26 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறைப்படுத்தப்பட்டார்கள். ஓராண்டு காலத்திற்கு யாரும் வெளியில் வரமுடியாது. யாரும் பொங்கல் கொண்டாடவில்லை.316 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலே கிடக்கிறார்கள்.

இந்த நேரத்தில் உண்ணாவிரதத்தை முடித்து விட்டு அடுத்தக் கட்டப் போராட்டமாக என்ன செய்வது என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோது, இவர்களையெல்லாம் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, அவர்கள் ஒரு ஆலோசனைக் கூட்டம் போடுகிறார்கள். பொங்குதமிழ் அறக்கட்டளையிலே மருத்துவர் இராமதாசு அவர்களை தா. பாண்டியன் அவர்கள் சந்திக்கிறார் என்று தகவல் கிடைக்கிறது. நானே மருத்துவர் அவர்களைத் தொடர்பு கொண்டு என்ன ஆலோசனைக் கூட்டம்? எங்களுக்கு ஏன் அழைப்பு இல்லை என்று நான் கேட்கிறேன். நீங்களும் வாருங்கள் பரவாயில்லை என்று என்னை அழைத்தார்.நானாக வலிந்து போகிறேன்.

மதிமுகவும் விடுதலைச் சிறுத்தைகளும் 2006ல் அதிமுக அணியில் சேர்ந்தது. அன்றைக்கு தி.மு.க. கூட்டணியில் சேர்வதற்குப் பேரம் பேசி 2 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் மதிமுக அதிமுக கூட்டணிக்கு வந்தது. எங்களை சேர்த்துக் கொள்ள முடியாது என்று தி.மு.க. சொல்லிவிட்ட காரணத்தினால் அதிமுக எங்களை வலிய அழைத்து சேர்த்துக் கொண்டது. 2006லே அதிமுகவோடு சேர்வதற்கு நாதியே இல்லை. கம்யூனிஸ்ட் இரண்டும் தி.மு.க. அணியில் இருந்தன. பா.ம.க. தி.மு.க. அணியில். மதிமுகவும் தி.மு.க. அணியில்பேசிக் கொண்டிருந்தது. காங்கிரஸ் தி.மு.க. அணியில் இருக்கிறது. யாருமே இல்லாத நிலையில் அதிமுக அணியில் எங்களை வலிய அழைத்துச் சேர்த்துக் கொண்டார் ஜெயலலிதா அம்மையார்.

பிறகு உள்ளாட்சித் தேர்தலில் எங்களை ஓரங்கட்டினார். ஒதுக்கினார். மிகப் பெரிய கொடுமைகளைச் செய்தார். இழிவு செய்தார். அவமதித்தார். அதனால் நாங்கள் வெளியேறினோம். அதன் பிறகு தி.மு.க. அணியில் இணைந்தோம்.

தி.மு.க. அணியில் இணைந்த பிறகு மதிமுக அங்கே இருக்கிறது நாங்கள் இங்கே இருக்கிறோம். பா.ம.க. கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டது. கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டதனால் பா.ம.க. அதிமுகவுக்குப் போகிறது. மதிமுக ஏற்கனவே 2 சட்டமன்ற இடங்கள் கிடைக்காத காரணத்தினால் அது அதிமுகவுக்குப் போகிறது. கம்யூனிஸ்ட்கள் ஏன் அணி மாறினார்கள். அணுசக்தி ஒப்புந்தத்திலே மன்மோகன் கையெழுத்துப் போட்டதனால் அதனை எதிர்த்து தேசிய அளவிலே முரண்பாடு ஏற்பட்டு அதனால் ஆட்சிக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்று, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து, அதிலே வெற்றி பெறமுடியாமல் தோல்வி கண்டு வேறு வழியில்லாமல் மாநிலக் கட்சிகளுடன் சேர்ந்தார்கள். அப்படித்தான் மாயாவதியைப் போய்ப் பார்த்தார்கள். விஜயகாந்தைப் பார்த்தார்கள். விஜயகாந்த் ஒத்துக்கொள்ளாத காரணத்தால் அம்மா அவர்களைப் போய்ப் பார்த்தார்கள். சி.பி.எம்.மும் சி.பி.ஐயும் ஈழத் தமிழர்களுக்காக அதிமுக அணிக்குப் போகவில்லை. அதிலும் ஓர் உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். தோழர்களே ஒரு குற்றச்சாட்டாக நான் இதைச் சொல்லவில்லை. சி.பி.ஐ.யும் சிஎம்மும் இந்தக் காலகட்டம் வரையில் ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் இருக்க வேண்டும் என்ற கருத்துடையவர்கள். சிங்கள ஆட்சியின் கீழ், ஒற்றை ஆட்சியின் கீழ் தமிழர்களுக்கு உரிமை வழங்க வேண்டும் என்பதே கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு. இதுதான் ஜெயலலிதா நிலைப்பாடு. இதுதான் வரதராஜன் நிலைப்பாடு. இதுதான் தா. பாண்டியன் நிலைப்பாடு. இதுதான் ராஜபக்சேயின் நிலைப்பாடு.


ஆனால் தனித் தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்ற கருத்துடையவன் நான். அந்தக் கருத்தை உடைய மதிமுக, அந்தக் கருத்தையுடைய பா.ம.க. ஆகிய இந்த மூன்று கட்சிகளாவது ஒன்று சேர வேண்டும். அந்தக் கருத்திலே உடன்பாடுள்ள அய்யா நெடுமாறன், அந்தக் கருத்திலே உடன்பாடுள்ள ஆசிரியர் வீரமணி நாங்களெல்லாம் ஒன்று சேர வேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொன்னவன் திருமாவளவன்தான். நான் முயற்சி எடுத்தேன். தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேறி அதிமுக கூட்டணியில் இருக்கிற கட்சிகளோடு நான் சேர்ந்து பயணப்படுகிறேன். தி.மு.க. எங்களை வெளியேற்றினாலும் பரவாயில்லை, என்னை கைது செய்தாலும் பரவாயில்லை, எங்களை அம்போ என்று நடுத்தெருவில் விட்டாலும் பரவாயில்லை. என்ன பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை. என்ன இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை. நட்டத்தைச் சந்திக்கத் தயார். எம் மக்களைப் பாதுகாக்க வேண்டும். அதற்காக அடுக்கடுக்கான போராட்டங்களை நடத்திய ஒரே இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம். இதுதான் அங்கே வெப்பத்தை உருவாக்கியது. திருமாவளவன் நடத்திய உண்ணாவிரதத்தில் பங்கேற்றவன்தான் முத்துக்குமார். அந்தத் தாக்கத்தில்தான் அவன் தீக்குளிக்கிறான். யாரும் இதை மறுக்க முடியாது. 10க்கும் மேற்பட்டவர்கள் தீக்குளித்தார்கள். முத்துக்குமார் சாகிற நேரத்தில்கூட மருத்துவமனையில் மருத்துவர்கள் கேட்கிறார்கள். அப்போது அவன் சொன்ன வார்த்தை, திருமாவளவனுக்கும் தலைவர் பிரபாகரனுக்கும் என் சாவைச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டுச் செத்துப் போனான். விடுதலைச் சிறுத்தைகள் மூன்று பேர் உயிரிழந்தார்கள்.


தோழர்களே, நான் தி.மு.க.வோடு சேர்ந்ததனால் ஈழத்தமிழர் விவகாரத்தை நான் கை விட்டுவிட்டேன் என்று பலர் கருதுகிற காரணத்தால் நான் இவற்றைச் சொல்கிறேன். தமிழ்நாட்டு அரசியலுக்குள்ளே என்னன்ன நிலைமைகள் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று சொன்னது ஜெயலலிதா. நான்தான் தடை விதிக்கச் சொன்னேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டது ஜெயலலிதா அம்மையார். அண்ணன் அவர்கள் சர்வதேச ஊடகவியலாளர்களைச் சந்தித்த போது, தேவையேயில்லாமல், பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும், தூக்கிலேற்ற வேண்டும் என்று சொன்னது ஜெயலலிதா. ஈழத்தைப் பற்றியும் விடுதலைப் புலிகளைப் பற்றியும் பேசியதற்காக அண்ணன் வைகோ அவர்களை 18 மாதங்கள் பொடாவில் போட்டது ஜெயலலிதா. அய்யா பழ. நெடுமாறன் அவர்களை பொடாவில் போட்டது ஜெயலலிதா. கடைசி நாள் வரையில்கூட திருமாவளவனைக் கைது செய் என்று சொன்னது ஜெயலலிதா. ஈழம் பற்றி பேசக் கூடாது என்பது ராஜபக்சேவின் கருத்து. அதுவேதான் ஜெயலலிதாவின் கருத்து. அதனால்தான் நான் சொன்னேன், ஜெயலலிதா வேண்டாம், கருணாநிதி வேண்டாம், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையிலே ஒரு தனி அணி கட்டுவோம் என்று சொன்னேன். ஈழத் தமிழர்களுக்காக ஒரு அணி. பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், தமிழர் தேசிய இயக்கம் ஒன்று சேர்ந்து போராடுவோம், குரல் கொடுப்போம், தேர்தலைச் சந்திப்போம் என்று சொன்னேன். ஜெயலலிதா எப்படி ஈழத் தமிழருக்கு ஆதரவானவராக இருக்க முடியும்? போராட்டம் நடத்தியிருக்கிறாரா? அறிக்கை வெளியிட்டிருக்கிறாரா? பிரதமரைச் சந்திக்க வந்தாரா? சட்டமன்றத் தீர்மானங்களை ஆதரித்து ஒரு நாளாவது பேசினாரா? என்றைக்காவது ஈழத்தை ஆதரித்துப் பேசியிருக்கிறாரா? இவ்வளவு துயரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன உலக கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் ஒரே ஒரு போராட்டத்தையாவது அறிவிக்க முன்வந்தாரா? எதுவும் இல்லை.

ஆக ஜெயலலிதாவும் சரியில்லை என்று முடிவு செய்து, நான் தோற்றால் பரவாயில்லை எனறு தனித்து நிற்கப் போன போதுதான். 2006லிருந்து கூட்டணியில் இருந்தோம். நான் இவர்களோடு சேர்ந்து விட்டதனால் கூட்டணியில் இருக்கிறோமா இல்லை என்கிற தோற்றம் உருவானது. இருக்கிறேன் என்று தி.மு.க. தலைவர் அறிவித்தார். அல்லது அவர்களுக்கு ஒரு கட்டாயம் ஏற்பட்டது. தமிழக அரசியல் நான் ஒடுக்கப்பட்ட மக்களை, ஏழை எளிய மக்களை அணி திரட்டி தேர்தலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு எந்தப் பின்புலமும் இல்லை. பெரிய முதலாளிகளின் ஆதரவு கிடையாது. நிலச்சுவான்தார்கள் கிடையாது. ஊடகங்களின் ஆதரவு கிடையாது. எந்த அரசியல் கட்சியும் என் வளர்ச்சியை விரும்பாது. இந்த நிலையிலே நான் தனித்து 1999ல் போட்டியிட்டுத் தோற்றேன். 2004லே போட்டியிட்டுத் தோற்றேன். இப்போது 2009லும் போட்டியிட்டுத் தோற்றுப் போனால் நாடாளுமன்றத்திலே பேசுவதற்கான வாய்ப்பு ஏற்படாது. இந்தச் சூழ்நிலையில் அவர்களின் அழைப்பை மறுதலிக்கக் கூடாது என்று நானும் கட்சியின் முன்னணி தலைவர்களெல்லாம் சேர்ந்து முடிவெடுத்துத்தான் தி.மு.க. அணியிலேயே தொடர்ந்தோம். அந்த நேரத்தில் எல்லோரும் அதிக நாட்கள் பிரச்சாரம் செய்தார்கள். நான் ஒரு வாரமே பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். 2 தொகுதிகளைக் கொடுத்த கலைஞரிடத்திலே நான் சென்று, 2 தொகுதிகள் எனக்கு வேண்டாம். ஈழத்திலே நடந்து கொண்டிருக்கிற கொடுமைகளைப் பார்த்துக் கொண்டு, இங்கே என்னால் பிரச்சாரம் செய்ய முடியாத நிலையிலில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே எனக்கு அழுகை வந்துவிட்டது.. கலைஞர் அவர்கள் என்னை தோளிலே தட்டிக் கொண்டு சொன்னார், விடுதலைப் புலிகள் என்றைக்குமே வீரமானவர்கள். அவர்கள் போராட்டம் சாதாரணமானதல்ல. இன்றைக்குப் பின்னடைவைச் சந்தித்து விட்டது என்பதற்காக நீங்கள் சோர்வடைந்து விடவேண்டாம். தேர்தலைச் சந்தியுங்கள். பார்ப்போம் என்று அவர் என்னை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். அப்படித்தான் இருந்தோம். சோனியா காந்தி கலந்து கொண்ட கூட்டத்தில்கூட முதலில் நான் கலந்து கொள்வதில்லை என்பதுதான் முடிவு. பிறகு நான் கலந்துகொண்டேன். அந்தக் கூட்டத்தில்கூட ஈழத் தமிழர்களை நீங்கள் காப்பாற்ற வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்தேன். நான் பேசவே கூடாது என்றுதான் தடுத்தார்கள். ஆனால் நான் மீறி பேசினேன்.

அதன் பிறகு தேர்தலில் என்னை தோற்கடிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் பாட்டாளி மக்கள் கட்சியும் அதிமுகவும் இணைந்து செய்தது. நான் கேட்டேன், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சியின் பொன்னுசாமி வெற்றி பெற்றால் ஈழத்தைப் பற்றிப் பேசுவாரா? திருமாவளவன் வெற்றி பெற்றால் ஈழத்தைப் பற்றிப் பேசுவானா? யார் உங்களுக்குத் தேவை என்று வாக்களியுங்கள் என்றுதான் நான் கேட்டேன். தேர்தலில் வெற்றி பெற்றேன்.

ஜெயலலிதாவுடன் சேர்ந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பது எப்படி ஞாயமானது என்றுதான் இன்றைக்கும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆகவே, ஜெயலலிதாவோடு சேர முடியாது, ஈழத்துக்கு எதிரானவர், ஈழ விடுதலைக்கு எதிரானவர், விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர், விடுதலைப் புலிகளுக்குத் தடை விதிக்கச் சொன்னவர், பிரபாகரனைக் கொண்டுவந்து தூக்கில் போட வேண்டும் என்று சொன்னவர், வன்முறையாளர்கள் என்றுசொன்னவர், பயங்கரவாதிகள் என்று சொன்னவர் அப்படிப்பட்டவருடன் நான் சேர முடியாது என்று நான் சொன்ன காரணத்தினால்தான்...

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்துக்கு ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று பெயர் வைக்கச்சொன்னேன். ஆனால் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று பெயரிடப்பட்டது. ஏனென்றால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஈழம் என்ற சொல்லில் உடன்பாடு இல்லை. ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று பெயர் வைத்தால் தா. பாண்டியன் இருக்க மாட்டார் என்பதற்காக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று பெயர் வைத்தார்கள். இப்படிப்பட்ட முரண்பாடுகளுக்கிடையிலேயேதான் நாங்கள் தனித்துவிடப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் தி.மு.க. அணியில் சேர்ந்தோம்.

எந்த நிலையிலும் விடுதலைச் சிறுத்தைகளோ திருமாவளவனோ ஈழத் தமிழர்களடைய உணர்வில், விடுதலை வேண்டும் என்கிற உணர்விலிருந்து மாறமாட்டோம். சூன் 8ந்தேதி என் முதல் கன்னிப் பேச்சிலேயே இந்திய அரசு மாபெரும் துரோகத்தைச் செய்துவிட்டது என்று சொன்னேன். நாடுகடந்த தமிழீழ அரசை உருவாக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார் வழக்கறிஞர் அண்ணன் உருத்திரகுமாரன். அதை நான் படித்துப் பார்த்தேன். தாயகம், தமிழ்த்தேசியம், தன்னாட்சியுடன் கூடிய ஒரு நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதை அவர் அங்கே குறிப்பிட்டிருந்தார். இதனையெல்லாம் படித்துப் பார்க்கிறபோது ஒரே ஒரு செய்தியை மட்டும் இங்கே சொல்லிவிட்டு விடைபெறலாம் என்று நினைக்கிறேன்.



ஜெர்மனி தமிழர் வாழ்வுரிமை மாநாடு - திருமாவின் எழுச்சி உரை (பகுதி 1)

ஜெர்மனி தமிழர் வாழ்வுரிமை மாநாடு - திருமா எழுச்சி உரை (பகுதி 2)

-

1 கருத்துகள்:

u r the one & only real leader of our tamil ellam.....

11 செப்டம்பர், 2009 அன்று 10:51 PM comment-delete

கருத்துரையிடுக