அவனுடைய அரசியல் ஈடுபாடு எனக்கு உடன்பாடுதான்
அய்யா தொல்காப்பியன் நினைவு :
(தமிழ்மண்ணில் வெளியான செவ்வி)
இராமசாமி தொல்காப்பியன் ஆனார்!
“பேர மாத்துனது எனக்கு சம்மதம்தான்!”
திருமாவளவன் தந்தை மகிழ்ச்சி!
விடுதலைச் சிறுத்தைகள் தங்கள் இந்துப் பெயரை மாற்றாவிட்டால் இயக்கத்திலிருக்க முடியாது - என்று எச்சரித்த அவ்வியக்கத்தின் பொதுச்செயலாளர் திருமாவளவன், தன்னுடைய பெயர் தமிழ்ப்பெயர் என்பதனால் அதனை மாற்றிக்கொள்ளவில்லை. எனினும் தனது குடும்பத்தைச் சார்ந்தவர்களின் இந்துப் பெயர்களையெல்லாம் மாற்றி தமிழ்ப் பெயர்களை மேடையிலேயே சூட்டினார். அவருக்குப் பெயர் வைத்த அவரது தந்தையின் பெயரையும் மாற்றினார்.
70 வயது நிறைந்த அவரது தந்தையின் இயற்பெயரான இராமசாமி என்பதை மாற்றி ‘தொல்காப்பியன்’ என அறிவித்தார். இதனால் திருமாவளவனின் முன்னெழுத்தான ‘இரா’ என்பது இப்போது ‘தொல்’ என்று மாறிவிட்டது. தந்தை பெயரோடு தனது சகோதரி (அக்காள்) யின் இயற்பெயரான பானுமதி என்பதை ‘வான்மதி’ என்றும், சகோதரியின் பிள்ளைகளான இளையராசாவுக்கு ‘இளவரசு’ என்றும், இராசேந்திர பிரசாத்துக்கு ‘இசையமுதன்’ என்றும், மாலதிக்கு ‘மாலைமதி’ என்றும் பெயர்களை மாற்றி அறிவித்தார். அதே நேரத்தில் திருமாவளவனின் அன்னையர் இருவரின் பெயர்களான பெரியம்மாள், செல்லம்மாள் ஆகியவை தமிழ்ப் பெயர்களேயாதலால் அவற்றை மாற்ற வேண்டிய தேவையில்லை என்றும் அறிவிப்புச் செய்தார்.
விடுதலைச்சிறுத்தைகள் தம்முடைய பெயர்களை மட்டுமல்லாது குடும்பத்தில் உள்ளவர்களின் இந்துப் பெயர்களையும் மாற்றிட வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் வகையில் அவரது குடும்பத்தினரின் பெயர் மாற்றம் அமைந்தது. திருமாவளவன் தமது குடும்பத்தினரின் பெயர்களை அவர்களின் அனுமதியோடு மாற்றினாரா? அம்மாற்றத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டார்களா? என்பதை அறிந்துகொள்ள அவரது தந்தை இராமசாமி என்கிற தொல்காப்பியன் அவர்களைச் சந்தித்தோம். அவர் அந்த காலத்தில் எட்டாம் வகுப்புவரை படித்தவர். அவர் ‘தாய்மண்’ணுக்கு அளித்த நேர்காணல்:
தாய்மண்: அய்யா ஒங்க பேர ஒங்க பையன் மாத்திட்டரே! தெரியுமா?
தொல்காப்பியன்: தெரியுங்க. தொல்காப்பியன்னு பேர மாத்தியிருக்காங்க.
தாய்மண்: ஒங்கள கேட்காம பேரமாத்துனது ஒங்களுக்கு வருத்தமில்லையா?
தொல்காப்பியன்: அதுல என்னங்க வருத்தம்? நான் அவனுக்கு திருமாவளவன்னு பேருவச்சேன். எங்கப்பா எனக்கு ராமசாமின்னு வச்சாரு. அவன் எல்லோரோட இந்துப்பெயரையும் மாத்தனும்னு சொல்றான். அதனால என்னோட பேரயும் மாத்தியிருக்கான். இதுல என்னங்க இருக்கு வருத்தப் படுறதுக்கு? அந்த காலத்துல சாதியோட சேர்ந்துதான் பேரு வச்சுக்குவாங்க. பறையன்ங்கிறதுக்கு அடையாளமா ஆம்பளைங்களுக்கு நெத்தியிலயும், பொம்பளைங்களுக்கு கையிலயும் பச்சை குத்துவாங்க. இந்த மாதிரி மோசமான நெலமைகள மாத்துறதுக்கு பேர மாத்தறது நல்லது தானே! (அவரது நெற்றியிலும் பச்சை குத்தப்பட்டுள்ளது)
தாய்மண்: தொல்காப்பியன்ங்கிற பேரு ஒங்களுக்கு பிடிச்சுருக்கா?
தொல்காப்பியன்: இந்தப் பேரு ரொம்ப பழமையான பேரு. அதனால எனக்கு பிடிச்சுருக்குங்க. இப்ப நான் ராமசாமின்னு போடுற கையெழுத்த இனிமே தொல்காப்பியன்னு போடனும். அதனால, இத அப்படி வுட்டுடாம, ‘ரிக்கார்டு’ பண்ணனும்.
தாய்மண்: ஒங்கள ஊருல 70 வருசமா ராமசாமின்னு கூப்பிட்டவங்க, இப்ப தொல்காப்பியன்னு கூப்புடுறாங்களா?
தொல்காப்பியன்: என்னோட நண்பர்கள்தான் தொல்காப்பியன்னு கூப்புடுறாங்க. இனிமேதான் மத்தவங்களும் கூப்புடுவாங்க.
தாய்மண்: ஒங்க காலத்துல சுப்பன், குப்பன்னுதானே பேரு வப்பீங்க. ஒங்க பையனுக்கு எப்படி திருமாவளவன்னு வச்சீங்க?
தொல்காப்பியன்: படிக்கிற காலத்துல சேர, சோழ, பாண்டிய வரலாறெல்லாம் படிச்சுருக்கேன். கல்லணை கட்டுன கரிகாலனுடைய பேருதாங்க திருமாவளவன். அந்த பேரதான் இவனுக்கு வச்சேன். அடுத்தடுத்த பையங் களுக்கு செங்குட்டுவன், பாரிவள்ளல்ன்னு பேரு வச்சேன். கடைசி பையன் ராதாகிருஷ்ணனுக்கு அவனோட அம்மா விருப்பப்படி பேரு வச்சோம். அவன் 1993ல் மதுரையில ஒரு விபத்துல இறந்துட்டான். திருமாவளவன மகாவிஷ் ணுவுடைய பேரு ‘திருமால்னு’ நினைக்கிறாங்க. ஆனா, அதுக்கும் நான் வச்ச பேருக்கும் சம்மந்தமில்ல. இது சுத்தமான தமிழ் பேருங்க!
தாய்மண்: ஒங்க பையனை எப்படி ஆளாக்க நினைச்சீங்க?
தொல்காப்பியன்: அவன வாத்தியாரா ஆக்கனுமுன்னு நினைச்சேன். நான்தான் 8ம் வகுப்போடு படிச்சு வேலை கிடைக்காம வீணா போயிட்டேன். அவனையாவது நல்லா படிக்க வைக்கலாமுன்னு தான் ரொம்ப கஷ்டப்பட்டேன். இவனெல்லாம் எப்படி பையனை படிக்கவைக்கப் போறான்னு என்ன எளக்காரமாக பேசுவாங்க. அதனால கஷ்டத்தோட கஷ்டமா அவன படிக்க வச்சேன்.அவன் மெட்ராசுல பிரசிடென்சி காலேஜ்ல படிக்க வந்தான். அப்பதான் அரசியல்ல எறங்கிட்டான்.
தாய்மண்: அரசியலுக்கு போனதுல ஒங்களுக்கு சங்கடமில்லையா?
தொல்காப்பியன்: அவன் அரசியலுக்குப் போனது ரெம்ப நாளைக்கப்புறம்தான் தெரிஞ்சது. அவன் படிச்சுட்டு வேலையில இருக்கான்னுதான் நினைச்சுட்டு இருந்தோம். அப்புறம்தான் போகப் போக அவன் சாதிப்பிரச்சினைக் காக போராடுறான்னு தெரிஞ்சுது. அதனாலதான் நான் ஒன்னும் சொல்லல. எங்க ஊருல உள்ளவங்க, “அம்பேத்காரே போராடி ஒண்ணும் பண்ண முடியல; ஒங்க பையன் என்ன பண்ண போறான்னு” கேலி பேசுவாங்க. “சாதிவெறியனுங்க ஒங்க பையன கொன்னுடு வாங்கன்னு” பயமுறுத்துவாங்க. ஆனா நான் எதயும் கண்டுக்கல. அவனுடைய அரசியல் ஈடுபாடு எனக்கு உடன்பாடுதான்.
2 கருத்துகள்:
//அந்த காலத்துல சாதியோட சேர்ந்துதான் பேரு வச்சுக்குவாங்க. பறையன்ங்கிறதுக்கு அடையாளமா ஆம்பளைங்களுக்கு நெத்தியிலயும், பொம்பளைங்களுக்கு கையிலயும் பச்சை குத்துவாங்க. இந்த மாதிரி மோசமான நெலமைகள மாத்துறதுக்கு பேர மாத்தறது நல்லது தானே! (அவரது நெற்றியிலும் பச்சை குத்தப்பட்டுள்ளது)//அப்படியா? திருமா அவர்களின் தந்தைக்கு இருப்பதுபோலவே சில தாழ்த்தப்பட்ட சமுதாயத்துப் பெரியவர்களுக்குக் கூட நெத்தியில் கருப்பு பச்சை யை பார்த்திருக்கிறேன்.அதற்கு இதுதான் அர்த்தம் என் இப்போதுதான் புரிந்தது.அட ஜாதி வெறியர்களா!
Dear Thirumavalavan
My deep condolances to you and your family on the demise of your respected father.
I read an article on the renaming of your father from Ramasami to Tholkappiyar. Happy to hear your zeal to change the hindu names to tamil names.
Would you also apply this logic to Christian and Muslim names as well.
Regards
Suppadi
கருத்துரையிடுக