ஆயுதப் படைகள் சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! - தொல். திருமாவளவன் வலியுறுத்தல்
ஜம்மு காஷ்மீர் மாநில மக்களின் கோரிக்கையை ஏற்று
ஆயுதப் படைகள் சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்
தொல். திருமாவளவன் வலியுறுத்தல்
ஆயுதப் படைகள் சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்
தொல். திருமாவளவன் வலியுறுத்தல்
ஜம்மு காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக இன்று (15.9.2010) மாண்புமிகு பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் புதுடெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
""மாண்புமிகு தலைமை அமைச்சர் அவர்களே மற்றும் மதிப்பிற்குரிய அனைத்துக்கட்சித் தலைவர்களே வணக்கம்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் திருமதி. சோனியாகாந்தி அவர்கள்," ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள், நமது மக்களே' என்று கூறினார். இது மிகவும் பாராட்டுக்குரியதாகும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்களிடையே உள்ள உண்மை நிலவரம் என்ன என்பதைச் சுட்டிக் காட்ட நான் விரும்புகிறேன். அம்மாநிலத்தைச் சேர்ந்த மக்களின் மனநிலை என்ன என்பதை இந்திய அரசு அறிந்துள்ளதா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. அங்கு உள்ள பெரும்பான்மையான மக்கள் திருமதி. சோனியாகாந்தி சொன்னதைப் போல உணரவில்லை என்பதுதான் உண்மையாகும். இதை இங்கு இவ்வாறு சொல்வதற்காக வருந்துகிறேன். இந்திய அரசுக்கும் ஜம்மு காஷ்மீர் குடிமக்களுக்கும் இடையே உள்ள முதன்மையான முரண்பாடு இதுதான் என்று உணர்கிறேன். அம்மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது எனும் கோணத்திலிருந்து இப்பிரச்சனையை இந்திய அரசு அணுக வேண்டும் என, இங்கே நான் அழுத்தமாகச் சொல்வதை எனது கடமையாகக் கருதுகிறேன். அவ்வாறு இதனை அணுகாவிட்டால் இப்பிரச்சனைக்கு நிலையானதொரு தீர்வை நம்மால் காணவே முடியாது. தற்போது நாம் இங்கே கூடியிருப்பது நிலையான தீர்வைக் காண்பதற்காக அல்ல. அப்பகுதியில் பொது ஒழுங்கையும் பொது அமைதியையும் உருவாக்குவதற்கும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவுமே இன்று இங்கே நாம் கூடியிருக்கிறோம் என்று நம்புகிறேன். இதுவே, இந்த நொடிப்பொழுதின் இன்றியமையாத தேவையானதாக உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்த மண்ணின் மைந்தர்களின் கோரிக்கையினை இந்திய அரசு உரிய வகையில் பரிசீலித்திட வேண்டும். அந்த மக்களின் விருப்பங்களுக்கு மாறாக, கருத்துச் சொல்வதற்கு எனக்கு எந்தத் தகுதியும் இல்லை எனக் கருதுகிறேன். எனவே, ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை எவ்விதத் தயக்கமும் இன்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். அங்கு அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கவும் பொது அமைதியை நிலைநாட்டவும் இதைத் தவிர வேறு வழியே இல்லை. நெருப்பால் நெருப்பை அணைக்க முடியாது, அதைப் போல பயங்கரவாதத்தால் இன்னொரு பயங்கரவாதத்தை நசுக்க முடியாது. சட்டம் ஒழுங்கு என்னும் பெயரில் குடிமக்களுக்கு எதிராக எத்தகைய அடக்குமுறையையும் ஏவலாம் என இராணுவத்தை ஒரு சட்டம் அனுமதிக்குமேயானால், அதுவே அரச பயங்கரவாதமாகும்.
ஆகவே, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மக்களின் கோரிக்கையை வலுவாக ஆதரிக்கும் வகையில், ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுகிறேன். சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த, மாற்று வழிகள் கட்டாயம் இருக்கும். ஆகவே இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற தயக்கம் காட்டவோ, பாகிஸ்தானிய பயங்கரவாதத்திற்கு அச்சப்படவோ வேண்டாம் என இந்திய அரசை விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.''
இவ்வாறு அவர் பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக