தமிழகத்தில் ராஜபக்சேவின் வெள்ளை வேன்!





இலங்கையில் வெள்ளை வேனைக் கண்டாலே நடுங்குவார்கள். சிங்கள ராணுவத்தினரால் ஆபரேட் செய்யப்படும் வெள்ளை வேன்களை பற்றி பேசவே ஈழத் தமிழர்கள் பயப்படுவார்கள். கொடுமைகளின் சின்னமாக இலங்கையில் இன்றும் இயக்கப்பட்டு வரும் வெள்ளை வேன்களை தமிழகத்திலும் ராஜபக்சே ஆதரவாளர்கள் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இயக்குகிறார்கள் என பயங் கலந்த இரகசிய குரலில் சொல்கிறார்கள் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்கள்.


கடந்த வாரம் திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார் ஈழத் தமிழ் இளைஞர் சிவபாலன். ஒரு வெள்ளை நிற மாருதி வேன் வந்து அவர் அருகே நின்றது. அதிலிருந்து இறங்கிய நான்கு இளைஞர்கள் ஈழத் தமிழில் அவரிடம், “”உங்கள் பெயர் சிவபாலன்தானே. நீங்கள் விடுதலைப்புலி என நாங்கள் அறிகிறோம். உங்களிடம் விசாரிக்க வேண்டும் வாருங்கள்” என கூப்பிடுகிறார்கள். “”நான் விடுதலைப்புலி அல்ல; எனது உறவினர்கள் திருச்சி யில் இருக்கிறார்கள். அவர் களைப் பார்க்க நான் போகின்றேன்” என விடாப்பிடியாக மறுக் கிறார் சிவபாலன்.

“”அப்படியா… சரி அந்த விபரத்தை அங்கேயுள்ள  வெள்ளை குவாலிஸ் வேனில் அமர்ந்துள்ள இந்திய அதிகாரியிடம் விளக்கி சொல்லி விட்டு நீங்கள் போகலாம்” என அவர்கள் கட் டாயப்படுத்தி அழைக்க… “சரி நான் வருகிறேன்’ என சென்ற சிவபாலனை தூக்கிக் கொண்டு இரண்டு வேன்களும் கிழக்கு கடற்கரை சாலை யில் பறந்தது. “”அந்த நிமிடங்கள் நான் சென் னையில் இருக்கிறேனா அல்லது கொழும்பில் இருக்கிறேனா என புரியாத நிமிடங்களாக இருந்தது. ராஜபக்சேவின் வெள்ளை வேன்கள் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.

அந்த வேன்களில் என்ன நடக்கும் என்பதை சென்னையில் அவர்கள் புரிய வைத்தார்கள். துப்பாக்கி முனையில் நான்கு பேர் என்னை அடித்து துவைத்தார்கள். என்னை பேசவே விடவில்லை. எனது பையில் நான் வைத்திருந்த நான்கரை லட்சம் ரூபாயை பார்த்த பிறகுதான் அடிப்பது நின்றது. எனது உறவினரின் மருத்துவ செலவுக்காக வெளிநாட்டு உறவினர் அனுப்பிய தொகை அது. வாட்ச், மோதிரம், செயின், மடி கணினி என அனைத் தையும் பறித்துக் கொண்டார்கள்.

உயிர் பயத்தில் நடுங்கி கண்ணீர் விட்டபடி கதறிக் கொண்டிருந்த என்னை ஒரு சவுக்குத் தோப்பில் தள்ளி விட்டுவிட்டு பறந்து விட் டார்கள்” என்கிறார் சிவபாலன். மரண பயம் இன்றும் அவர் கண்ணை விட்டு அகலவில்லை.

மடிப்பாக்கத்தில் வசிக்கும் வசந்தி, ஜெயக்குமார் தம்பதியின் உறவினர் ஒருவர் இலங்கையில் உள்ள ராணுவ முகாமில் விடு தலைப்புலி என்ற சந்தேகத்தில் அடைபட்டு கிடக்கிறார். அவர் வீட்டு வாசலுக்கு வெள்ளை வேன் ஒன்று இரண்டு வாரங்களுக்கு முன்பு வந்து நின்றது. சிவபாலனிடம் பேசிய அதே நபர்கள் இவர்களையும் அணுகினார்கள். “”உங்கள் உறவினர் இந்த முகவரியை தனது முகவரியாக இலங்கை அரசிடம் தெரிவித்திருக்கிறார், நீங்களும் விடுதலைப்புலியா? விசாரிக்க வேண்டும்” என அதே டயலாக்கை எடுத்து விட்டிருக்கிறார்கள். உண்மையில் அவரது உறவினர் ஒருவர் இலங்கை முகாமில் இருப்பதால் வந்தவர்களை வீட்டுக்குள் அழைத்துச் சென்று அவருக்கும் எங்க ளுக்கும் எந்த தொடர்புமில்லை என அந்த தம்பதிகள் பொறுமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

“”நாங்கள் இந்திய உளவுத்துறையின் ஆட்கள். நாங்கள் இலங்கை ராணுவத்துடன் தொடர்பில் இருக்கிறோம். அந்த உறவினர் பற்றிய விபரங்களை இலங்கை அரசுதான் எங்களுக்குத் தந்துள்ளது. உங்களை இலங்கைக்கு நாடு கடத்த சொல்லி இந்திய அரசு உத்தரவு போட்டுள்ளது” என தங்களது பில்ட்- அப்பை அதிகரித்தனர் வந்தவர்கள். “”நாங்கள் அடுத்த வாரம் வருகிறோம், 25 லட்சம் பணம் எடுத்து வையுங்கள். உங்கள் உறவினரை இலங்கை ராணுவ முகாமில் இருந்து விடுவித்து விடலாம். அவர் விடுதலையானால் உங்களுக்கு பிரச்சினையில்லை” என அவர்கள் சொன்னதை கேட்டு ஓரளவுக்கு பணத்தை தயார் செய்தனர். அடுத்த சில நாட்களிலேயே தாம்பரம் பேருந்து நிலையத்துக்கு வா என உத்தரவு போட் டார்கள். தாம்பரத்தில் அந்த வெள்ளை வேன் நின்று கொண்டிருந்தது. அந்த வேனுக்குள் ஏற சொன்னார்கள். வேனில் அமர்ந்து கொண்டுவந்த பணத்தை எண்ணி முடித்ததும், அந்த வேன் ஓடத்தொடங்கியது. வண்டலூர் தாண்டி கேளம்பாக்கம் போ கும் சாலையில் சிவபாலனைப் போலவே வசந்தியும் ஜெயக்குமாரும் அடியையும் உதையையும் வாங்கிய தோடு நகை, வாட்ச், மோதிரம் எல்லாவற்றையும் பறிகொடுத்து விட்டு வேனிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்கிற சூழ்நிலையில் தள்ளிவிடப்பட்டார்கள்.


மாநில உளவுப் பிரிவான க்யூ பிராஞ்ச் ஒரு ஈழத் தமிழரை பிடித்து சென்று விட்டது. அவரது பெயரைச் சொல்லி அவரை விடுவிக்க ஏற்பாடு செய்கிறோம் என மற்றொரு ஈழத்தைச் சேர்ந்த குடும்பத்திலும்  பத்து லட்சம் ரூபாயை இதே பாணி யில் இதே கும்பல் பறித்து சென்றுள் ளது.

இதுமட்டுமல்ல, சாதாரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஈழத் தம்பதிகளிடமும் வெள்ளை வேனில் வந்து பணத்தை பறித்துச் சென்றிருக் கிறார்கள் என கதறுகிறார்கள் ஈழத் தமிழர்கள்.

பணத்தை பறி கொடுத்தவர்கள் போலீசில் புகார் கொடுத்தால் தமிழக போலீசாரால் வேறெதாவது தொல்லை வருமோ என அஞ்சும் இவர்களது வீக்னசை பயன்படுத்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இந்த வெள்ளை வேன்களின் தலை வனை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம் என்கிறார் விடுதலைச் சிறுத்தைகளின் கட்சி மாநில நிர்வாகிகளில் ஒருவரான வன்னி யரசு.

“”அவன் பெயர் ரஜினிகாந்த். இவனிடம் பணத்தை பறிகொடுத்த சிவபாலன் அடையாளம் காட்டி னார். சாலிக்கிராமத்தில் ஒரு பெரிய ஃபேன்சி ஸ்டோரை நடத்துகிறான் ரஜினிகாந்த். சிவபாலனிடம் பணம் பறித்ததை ஒப்புக் கொண்டான்.

இதுபோல கடந்த ஒரு வருடத்தில் 50 சம்பவங்களில் அவன் ஈடுபட்டிருக்கிறான். இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்றதை ஆதரித்த அமைப்பான ராஜன் தலைமையிலான ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி என்ற அமைப்பைச் சேர்ந்த இவ னும் மோகன் என்பவனும் சேர்ந்து தான் ராஜபக்சே ஸ்டைலில் வெள்ளை வேன்களை தமிழகத்தில் இயக்குகிறார்கள். நாங்கள் ரஜினி யை நெருங்கிவிட்டதை அறிந்து மோகன் டெல்லிக்கு சென்று பதுங்கிவிட்டான். அவனுக்கு உதவி செய்தவர்களும் சிதறி ஓடிவிட் டார்கள்.

அவனிடம் விசாரித்தபோது, “ஆமாம் நாங்கள்தான் சிவபால னையும் மற்றவர்களையும் தாக்கி னோம். இந்திய உளவுத்துறை சொன்னதால்தான் இவற்றை செய்தோம். அவர்களிடம் கொள்ளையடித்த பணத்தையெல்லாம் அவர்களிடம் கொடுத்து விட்டேன். அதற்கு நன்றியாக இவ்வளவு பெரிய கடையை எனக்கு அவர்கள் வைத்து கொடுத்திருக் கிறார்கள்’ என வெளிப்படையாகவே சொல்கிறான் ரஜினி. அவனை எங்களால் என்ன செய்ய முடியும்” என்கிறார் வன்னியரசு.

“”ரஜினியும் மோகனும் மட்டுமல்ல தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இயக்கங்களாக செயல் பட்ட மற்ற போராளி இயக்கத்தில் உதிரிகளாக சுற்றித் திரியும் போராளிகள் இந்த வெள்ளை வேன் தாக்குதல் களை ஈழத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்துகிறார்கள் என நாடு கடந்த தமிழீழ அரசை நடத்தும் உருத்திர குமாரனிடம் பல நாடு கடந்த ஈழத் தமிழர்கள் புகார் செய்திருக்கிறார்கள்” என்கிறார் பத்திரி கையாளர் பாண்டி யன்.

இந்த புகார்கள் உண்மையில்லையென இந்திய உளவுத்துறை அதிகாரிகள் மறுக்கி றார்கள். கொடுமைகளே வாழ்க்கையாக திறந்த வெளி சிறைச்சாலையாக மாறிப் போன புலிகள் இல்லாத ஈழத்திலிருந்து சமீபத்தில் 3 மாதம் ஒரே ஒருவேளை உணவை மட்டுமே சாப்பிட்டு, 300 ஈழத் தமிழர்கள் படுக்கக்கூட கப்பலில் இடமில்லாமல் பயணம் செய்து ஆஸ்திரேலியாவுக்கு போனார்கள். அங்கே இறங்க அவர்கள் அனுமதிக்கப்படாததால் ஒருவழியாக கனடா வுக்குப் போய் உயிர் பிழைத்திருக்கிறார்கள்.

அதுபோன்ற ஒரு பயணத்திற்கு போவதற்கு முன்பு குற்றாலத்தில் குளித்து விட்டு வரலாம் என போன 50 ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்த பிரச்சினையெல்லாம் வேண்டாம் என அதிகாரப்பூர்வமாக சட்ட அனுமதியுடன் தாய் தமி ழகத்திற்கு வந்து சேரும் ஈழத் தமிழர்கள்மீது, ராஜபக்சே கும்பல் பாணியில் வெள்ளை வேன்கள் மூலம் தாக்குதல் தமிழகத்தில் நடைபெறுகிறது என்றால் ஈழத் தமிழர் களுக்கு எப்போதுதான் விடிவுகாலம்?

-பிரகாஷ்

நன்றி : நக்கீரன்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக