பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் காஜாமைதீன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார்
பிரபல தயாரிப்பாளரும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொருளாளருமான காஜாமைதீன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார்.
இதற்கான இணைப்பு விழா தியாகராய நகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் நேற்று (30.09.2010) இரவு நடந்தது. கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு மாலை அணிவித்து உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு தனது ஆதரவாளர்கள் ஆயிரம் பேருடன் எழுச்சி தமிழர் திருமாவளவன் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார்.
காஜாமைதீன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக நியமிப்பதாக திருமாவளவன் நிகழ்ச்சியில் அறிவித்தார்.
கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:-
தமிழ் மக்களுக்காக பணியாற்ற விடுதலை சிறுத்தைகளுடன் கைகோர்த்துள்ள காஜாமைதீனை வரவேற்கிறேன். அவர் அரசியலில் நல்ல விளைச்சல் தரக்கூடியவர். தமிழக அரசியலில் அமைதி புரட்சி, சாதி முத்திரை குத்தப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அனைத்து தரப்பினரும் இணைகிறார்கள்.
ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் படுத்துவதே நமது நோக்கம். அவர்களை அதிகாரத்தில் அமர்த்த போராடுகிறோம். நம்மீது வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் என முத்திரைகள் குத்த சதி நடக்கிறது. அதனை கட்டுப்பாடு சகிப்பு தன்மையால் முறியடிக்க வேண்டும்.
நிறைய பேர் பதவிக்காக அரசியல் கட்சிகளில் சேருகிறார்கள். அணியும் மாறுகிறார்கள். அவர்களை போல் மைதீன் சிந்திக்கவில்லை. அதனால்தான் சேரிமக்களை பற்றி சிந்திக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்துள்ளார். இப்போதெல்லாம் ஒரு சில படங்களில் நடிகர்களுக்கு அரசியல் ஆசை வந்து விடுகிறது. அடுத்த முதல்வர் நான்தான் என்கிறார்கள்.
கதாநாயகிகளை கட்டிபிடிப்பதே முதல்- அமைச்சருக்கான தகுதி என நினைக்கிறார்கள். ஆனால் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் சிறுக சிறுக வலுவாக காலூன்றி வளர்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வி.சி. குகநாதன், ஆர்.கே.செல்வ மணி, டி.சிவா, கே.எஸ்.சீனிவாசன் மற்றும் கலைக்கோட்டு தயம், வன்னிஅரசு, சைதை பாலாஜி, கவிஞர் இளங்கோ ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள்.
மாவட்ட செயலாளர்கள் இளஞ்செழியன், வீரமுத்து, கபிலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளால் செய்யப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக