காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவு விழா! ராஜபக்சேவை அழைத்ததைக் கண்டித்து தொல். திருமாவளவன் புறக்கணிப்பு!
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவு விழா!
ராஜபக்சேவை அழைத்ததைக் கண்டித்து
தொல். திருமாவளவன் புறக்கணிப்பு!
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள்,
நாடாளுமன்ற உறுப்பினர்களும் புறக்கணிக்க வேண்டுகோள்!
புது தில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவுவிழா வரும் 16Š10Š2010 அன்று நடைபெறவுள்ளது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சிங்கள இனவெறியன் ராஜபக்சேவை இந்திய அரசு அழைத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி லட்சக் கணக்கில் கொன்றுகுவித்த ராஜபக்சேவை புதுதில்லிக்கு அழைத்துச் சிறப்பிக்க விரும்பும் இந்திய அரசின் அணுகுமுறையானது சுமார் பத்து கோடிக்கும் மேலான ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் கேவலப்படுத்துவதாக அமைந்துள்ளது. அத்துடன் பிறர் துன்பத்தில் இன்பம் காணும் கொடூர வன்மம் நிறைந்த வக்கிரபுத்தியை இதன்மூலம் இந்திய அரசு வெளிப்படுத்தியுள்ளது. ராஜபக்சேவும் சிங்கள அரசும் போர் மரபுகளை மீறி மாந்தநேயமற்ற முறையில் போர்க் குற்றம் இழைத்துள்ளனர் என்று ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள சர்வதேச நாடுகள் கண்டித்து வருகிற இந்த நிலையில் இந்திய அரசு அதற்கு நேர்மாறாக ஒரு போர்க் குற்றவாளிக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது அத்தகைய போர்க் குற்றத்தில் இந்திய அரசின் பங்களிப்பு எத்தகையது என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இந்திய அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. ராஜபக்சேவை அழைக்கும் இந்த முடிவை இந்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் தமிழினத்தின் சார்பில் வற்புறுத்துகிறோம்.
நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் நிறைவு விழாவில் பங்கேற்பதற்கு எனக்கும் அழைப்பு வந்துள்ளது. ஆனால் இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கைக் கண்டிக்கும் வகையில் அவ்விழாவை நான் புறக்கணிக்கிறேன். தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் தமிழின ஓர்மையை வெளிப்படுத்தும் வகையில் அவ்விழாவைப் புறக்கணிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
(தொல். திருமாவளவன்)
2 கருத்துகள்:
Great!!! Need more stress!!!!
EXCELLANT ANNA.UNGALAI POL ANAITHU URUPPINARUM AVOID SEYYANUM.
கருத்துரையிடுக