கறுப்பு மை குறிப்புகள்

அநீதிகளைப் புனிதமாக்கும் நாடு இந்தியா. மனித மாண்பிற்கு புறம்பான அத்தனைக் கொடுமைகளும் இங்கு கடவுளின் பெயராலேயே அரங்கேறுகின்றன. கடவுளும் மதமும் அறிவுறுத்தும் நல்லொழுக்கத்திலிருந்து வழுவி விடாமல், ஒவ்வொரு நொடியும் அடிமைத்தனங்களை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கின்றனர் இந்துக்கள். எந்த அநீதி - சாதி பின்னணியையும், மத அடிப்படையிலான புனித விளக்கங்களையும் கொண்டிருக்கிறதோ, அந்த அநீதியை சட்டத்தால் மட்டும் ஒருபோதும் அழித்துவிட முடியாது. இந்தியாவில் பாலியல் தொழிலுக்கும் இதே வேதனையான பின்னணி இருப்பதை நாம் கவனித்தாக வேண்டும்.
இந்தியாவில் சுமார் ஒன்றரை கோடி பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். பெண்களை புனிதமாகக் கருதும் / பாலியல் கட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு நாட்டில், இந்த எண்ணிக்கை நிச்சயம் அதிர்ச்சியை உண்டாக்கக்கூடும். பாலியல் தொழில் என்பது இந்தியாவில் தோன்றி, இந்தியாவில் மட்டும் நிலைத்திருக்கும் கொடுமையல்ல. உலகின் பல முதலாளித்துவ நாடுகளில் பாலியல் தொழில் எனும் கொடுமை, லாபம் கொழிக்கும் துறையாக நிலைத்துவிட்டது. பன்னாட்டு நிறுவனங்களைப் போல, பன்னாட்டு பெண்களையும் இறக்குமதி செய்யும் சிவப்பு விளக்குப் பகுதிகள், பொருளாதார மய்யங்களாக நிலைத்துவிட்டன.
முதலாளித்துவம் பெற்றெடுத்த குழந்தையாக விபச்சாரத்தைப் பார்க்கிறார்கள் மார்க்சிஸ்டுகள். பொருளாதாரச் சுரண்டல் அடிப்படையில் இந்த விளக்கம் பொருந்தும் என்றாலும், மதங்களும் அவை இப்புவியில் விதைத்துள்ள மூட நம்பிக்கைகளுமே பாலியல் தொழிலைப் பெற்றெடுத்தன என்பதே உண்மை. எந்த சமூகத்தில் பெண்களுக்கெதிரான ஒழுக்க விதிகள் அதிகம் இருக்கிறதோ, அந்த சமூகத்தில்தான் பெண்கள் மீதான உரிமை மீறல்களும் கட்டுக்கடங்காமல் இருக்கின்றன. இந்தியாஅதற்கு முதன்மையான எடுத்துக்காட்டு.

வறுமையும், அறியாமையுமே பாலியல் தொழிலை வளர்க்கின்றன. இந்தியச் சூழலில், ஒடுக்கப்பட்டோரை ஆட்டுவிக்கும் வறுமை என்பது வெறும் அம்புதான். அதை அடித்தட்டு மக்களின் மீது எய்துவிட்டு, எல்லா அநீதிகளுக்கும் அடித்தளமாக ஆக்கிவிட்டது சாதி. வறுமையை குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே உரித்ததாக ஆக்கிய காரணிகள், உலகம் முழுக்க வெவ்வேறானவை. ஆனால் ஒன்றோடு ஒன்று வலுவான தொடர்புடையவை. மதம் - சாதி - இனம் - மொழி அடிப்படையிலான பாகுபாடுகள் அடித்தட்டு மக்களுக்கு நிகழ்த்தி வரும் அநீதி, எக்காலத்திற்கும் முற்றுப் பெறாததாக நீடிக்கிறது.
மனிதர்கள் தோன்றிய காலத்திலேயே பாலியல் தொழில் தோன்றிவிடவில்லை. என்று மதங்கள் தோன்றினவோ, கடவுளர்கள் உருவாக்கப்பட்டனரோ, மூட நம்பிக்கைகள் வளரத் தொடங்கினவோ, பெண்கள் ஆண்களுக்கு கட்டுப்பட்டவர்களாக, கீழானவர்களாக மாற்றப்பட்டார்களோ - அந்த காலத்திலும் சூழலிலுமே பாலியல் தொழில் தோன்றியது. பண்டைய கிரேக்கத்தில் பாலியல் தொழில் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருந்து வந்திருக்கிறது. சிரியாவின் பழம் பெரும் நகரமான ஹீலியோப்போலிஸில், திருமணமாகாத ஒவ்வொரு பெண்ணும் குலதெய்வக் கோயிலில் அந்நியர்களுக்கு தன் உடலை ஒப்படைக்க வேண்டும் என சட்டமே இருந்தது. பெண்களை கோயிலுக்கு அர்ப்பணிக்கும் வழக்கம், பல நாடுகளிலும் தொன்றுதொட்டு இருந்து வருவதுதான். "கடவுளுக்கு சேவை' என்ற பெயரில் அர்ப்பணிக்கப்பட்ட பெண்கள் எல்லாம் ஆண்களுக்கே சேøவ செய்ய வேண்டியிருந்தது!
இந்தியாவில் பாலியல் தொழில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தோன்றிவிட்டதாகக் கூறுகின்றன வரலாற்றுக் குறிப்புகள். முந்தைய காலங்களில் பாலியல் தொழிலாளர்களை "தேவதாசி'கள் என அழைத்தனர் இந்தியர்கள். இந்தியாவில் தேவதாசி வழக்கத்தைத் தோற்றுவித்தது இந்து மதமே. பவுத்தத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் கி.பி. 1000 ஆவது நூற்றாண்டில்தான் தேவதாசி வழக்கம் உருவாகியிருக்கிறது. பவுத்தம் வீழ்ந்து, பார்ப்பனர்களின் இந்து மதம் தழைத்தோங்கத் தொடங்கிய காலகட்டத்தில், பவுத்த தலங்களை இந்து கோயில்களாக மாற்றும் வேலை தீவிரமாக நடந்தேறியது. தங்கள் கோயில்களை இழந்த நிலையில் பவுத்தத் தலங்களில் தொண்டாற்றிய பெண் துறவிகளை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு தேவதாசிகளாக்கியதாகவும் குறிப்புகள் கூறுகின்றன.
இந்து மதம் வேரூன்றி சாதியக் கட்டமைப்பு நிலைக்கத் தொடங்க, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண்களை அடிமைகளாக்கிவிட்டு, பெண்களை கோயில்களில் தாசிகளாக்கினர் பார்ப்பனர்கள். கோயில்களில் நடனமாடுவதுதான் தேவதாசிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணி எனினும், ஆதிக்க சாதி ஆண்கள் தங்கள் இச்சைகளைத் தீர்க்கவே இப்பெண்களை பயன்படுத்திக் கொண்டனர். பெண்களை இந்து கடவுளர்களுக்கு அர்ப்பணிக்கும் தேவதாசி வழக்கம், வெளிப்படையான விபச்சாரமாக வளர்ந்தது. ஆதிக்க சாதி ஆண்களுக்காக விபச்சாரம் செய்வது, கடவுளோடு இருப்பதற்கு சமம் என்ற நம்பிக்கை வளர்த்தெடுக்கப்பட்டது.
அதனால், பெண்கள் மீதான அப்பட்டமான இந்த உரிமை மீறல் பெரும் பேராகவும் புனிதமாகவும் போற்றப்பட்டது. சாதி இந்துக்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீது நிகழ்த்திய மற்றுமொரு வன்கொடுமைதான் இந்த தேவதாசி முறை. ஆதிக்க சாதி ஆண்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எந்த பெண்ணையும் தேவதாசியாக்கிவிட முடியும்! "கடவுளின் சேவகர்கள்' என்ற கவுரவமான பெயரில் தேவதாசிகள் அனுபவித்ததெல்லாம் சாதிய வன்கொடுமைகளையும் பாலியல் துன்புறுத்தல்களையுமே!
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை, பருவம் எய்தும் முன்பே கோயில்களுக்கு அர்ப்பணித்தாக வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. அர்ப்பணிக்கப்படும் சிறுமிகளுக்கு கடவுளர்களோடு திருமணம் முடிந்துவிட்டதாகப் பொருள். தேவதாசிப் பெண்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதியில்லை. பருவம் எய்திய பின் தங்களின் கடைசி காலம் வரையிலும் ஆதிக்க சாதி ஆண்களால் சூறையாடப்பட்டு, கோயில்களிலேயே மடிந்து முடிந்தது தேவதாசிகளின் வாழ்க்கை.
இந்து மதம் இம்மண்ணில் வேரூன்ற, தேவதாசி வழக்கமும் நிலைத்துவிட்டது. இந்து கோயில்களின் வீழ்ச்சியையும் வளர்ச்சியையும் பொருத்தே தேவதாசி வழக்கத்தின் வீழ்ச்சியும் வளர்ச்சியும் அமைந்தது. கலைநயமிக்க கோயில்களை எழுப்பி தமிழர்களை தலைநிமிரச் செய்ததாக சோழர்களின் பெருமை பேசுகிறது தமிழ் வரலாறு. சோழர்களின் ஆட்சியில் கோயில்களோடு சேர்ந்து தேவதாசி வழக்கமும் தழைத்தோங்கியது. கட்டடக் கலையின் உச்சத்தைத் தொட்ட இந்த கோயில்களுக்கு கிடைத்த பாராட்டுகளுக்கு முன் தேவதாசிகளின் கண்ணீர் கதைகள் கேட்பாரற்று தொலைந்தன.
1934 இல் உருவாக்கப்பட்ட தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம், இந்த கொடிய வழக்கத்தை தடை செய்தது என்றாலும், ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீது செலுத்தும் அதிகாரத்தை தடுக்க முடியாததால், தேவதாசி வழக்கமும் தொடர்ந்தது. 1980 இல் இச்சட்டம் மறுபடியும் செயல்படுத்தப்பட்டது. ஆனால் எந்த பலனும் இல்லை. தேவதாசி வழக்கம் வேறு வேறு வடிவங்களை எடுத்துக் கொண்டு, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை பாலியல் தொழில் என்னும் படுகுழியில் தள்ளுவதை எவராலும் தடுக்க முடியவில்லை.
இந்து மதத்தின் சாதிய சூழ்ச்சியை புரிந்து கொள்ளாத ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், கோயில்களுக்கு சிறுமிகளை நேர்ந்துவிடுவதை தெய்வ வழக்கமாக இன்றும் தொடர்ந்து வருகின்றனர். தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகத்தில் இந்த வழக்கம் மிகத் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழக - ஆந்திர எல்லை மாவட்டங்களில் வசிக்கும் அருந்ததியர்கள் "மாத்தம்மா' என்ற குல தெய்வத்திற்கு பெண் குழந்தைகளை நேர்ந்து விடுகின்றனர். வறுமை, உடல்நலக் கோளாறு, குடும்பத் தகராறு போன்ற வாழ்வியல் இன்னல்கள் தீர வேண்டி, சிறுமிகளுக்கு மாத்தம்மா எனப் பெயரிட்டு, ஊர் கோயில்களில் விடுகின்றனர்.
மாத்தம்மா கோயில் திருவிழாவின் போது பெண்களால் தாலி கட்டப்பட்டு, கடவுளுக்கு மனைவியாகின்றனர் இந்த சிறுமிகள். மொத்த வாழ்க்கையையும் கோயிலிலேயே கழிக்கத் தொடங்கும் சிறுமிகள், பிழைப்பிற்காக திருவிழாக்களில் ஆடத் தொடங்கி பாலியல் தொழிலாளர்களாக திசை மாறுகின்றனர். கடவுளின் மனைவியான மாத்தம்மாக்கள் எவரையும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையால் பல ஆண்களால் சீரழிக்கப்படுகின்றனர். சிறிது காலம் சேர்ந்து வாழ்ந்துவிட்டு, கருவுற்றதும் காணாமல் போய்விடும் தற்காலிகக் கணவர்களால் மனச் சிதைவுக்கு ஆளாவதோடு, பல்வேறு வகையான பாலியல் நோய்களால் தாக்கப்பட்டு, முப்பது வயதிற்குள்ளேயே வாழ்வைத் தொலைத்து விடுகின்றனர்.
இதுபோன்ற தேவதாசி வழக்கம், வடக்கு கர்நாடகத்தை சுற்றிய பத்து மாவட்டங்களிலும், ஆந்திராவில் 14 மாவட்டங்களிலும் இன்றும் நிலைத்திருக்கிறது. சிறுமிகளை/பெண்களை பாலியல் தொழிலுக்காக கடத்தும் கும்பல் இப்பகுதிகளை குறி வைத்து இயங்குகின்றன. பெற்றோர்/கணவனால் கைவிடப்பட்ட பெண்களை ஏமாற்றி அழைத்துச் சென்று, சிவப்பு விளக்குப் பகுதிகளில் விற்கின்றன கடத்தல் கும்பல். மூட வழக்கங்களை தவிர்த்துவிட்டு பார்த்தாலும், சாதிய ஒடுக்குமுறையும் அதனால் விளைந்த வறுமை, அறியாமையும் ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களை அதிகளவிலான பாலியல் சுரண்டல்களில் தள்ளுகிறது.
இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு நான்கு பெண்கள் பாலியல் தொழிலுக்கு வருவதாகவும், இதில் மூன்று பெண்கள் வலுக்கட்டாயமாகத் தள்ளப்படுவதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது. ஒரு மணி நேரத்திற்கு நான்கு பெண்கள் என்ற கணக்கில் நான்கு பேருமே அடித்தட்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கத்தான் வாய்ப்பு அதிகம். இது குறித்த தனியான ஆய்வுகளோ, புள்ளிவிவரங்களோ இருப்பதாகத் தெரியவில்லை. எனினும், இந்திய சாதிய சூழலில் வறுமைக்குப் பிறந்த குழந்தைகளாகவும், கல்வி கற்கும் வாய்ப்பு கிட்டாதவர்களாகவும், வாழ்வியல் தரம் உயராதவர்களாகவும் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால், மிக வெளிப்படையாக அது ஒடுக்கப்பட்ட மக்கள்தான்.
கடத்தல் கும்பல் என்ற குறியீடு, யாரோ முகம் தெரியாத அந்நியர்களை மட்டும் குறிக்கவில்லை. பெரும்பாலும் அறிமுகமானவர்களாலேயே அந்நியர்களுக்கு விற்கப்படுகின்றனர் பெண்கள். எங்கோ தொலைதூர நாட்டில் தொடங்கி உலகம் முழுவதும் பரந்து விரிந்து இந்திய குக்கிராமங்களில் வறுமை படிந்த குடிசைகள் வரை, பாலியல் தரகர்கள் மற்றும் கடத்தல் கும்பல் மிக நெருக்கமாக இயங்குகிறது. வேலை வாய்ப்பிற்காகவோ, காதலனை நம்பியோ, குடும்பச் சூழல் பிடிக்காமலோ, வேறெந்த காரணத்திற்காகவோ வீட்டை விட்டு வெளியேறும் பெண்கள், அடுத்த சில மணி நேரத்தில் சிவப்பு விளக்குப் பகுதியில் விற்கப்பட்டிருப்பார்கள். அந்த அளவிற்கு கண்கொத்திப் பாம்பாகத் திரியும் தரகர்கள், பெரும்பாலும் குடிசைப் பகுதிகளில் தொடர்ப்பு வைத்துக் கொண்டு அங்கேயே சுற்றி வருகிறார்கள்.
காரணம், குடிசைப் பகுதிகளில் இயல்பாக அமைந்துவிட்ட கொடுமையான வாழ்க்கைச் சூழல் கொடுக்கும் நெருக்கடி. சிதைந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் மன ஓட்டத்தை கவனித்துக் கொண்டே இருக்கும் தரகர்கள் - வெளி மாநிலத்தில் வேலைவாய்ப்பு, கைநிறைய சம்பளம், சுகமான வாழ்க்கைக்கான உத்திரவாதத்தோடு அணுகுகின்றனர். தொடர்ச்சியான மூளைச் சலவையின் பலனாக, எந்த சிக்கலுமின்றி ஒவ்வொரு பெண்ணும் அவர்களின் அனுமதியோடே கடத்தப்படுகின்றனர். இப்படியாக வீட்டை விட்டு பற்பல கனவுகளோடு வெளியேறும் பெண்கள், சிவப்பு விளக்கு பகுதிகளுக்கு சென்று அங்கு அனுபவிக்கும் கொடுமைகள் உச்சபட்சமானவை!
ஆசியாவின் மிகப் பெரிய சிவப்பு விளக்குப் பகுதி இந்தியாவில்தான் இருக்கிறது. 19 - 20 ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர்கள் அவர்களின் "வசதிக்காக' உருவாக்கிய பகுதி மும்பை காமத்திப்புரா. ஆங்கிலேயப் படைகளும், இந்திய தொழிலாளர்களும் அய்ரோப்பிய நாடுகளிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் கடத்தி வரப்பட்ட பெண்களைக் கொண்டு இளைப்பாறினார்கள். ஆங்கிலேயர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு, இந்திய தேவதாசிகளும் பாலியல் தொழிலாளர்களும் காமத்திபுராவை நிரப்பினர்.
இன்று காமத்திபுராவில் மட்டும் இரண்டு லட்சம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. குறுகிய அறைகளின் வாசல்களிலும் தெருக்களிலும் அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை, அலங்கரிக்கப்பட்ட விலங்குகளைப் போல காத்திருக்கும் பெண்கள் பெரும்பாலும் கடத்தி வரப்பட்டவர்கள். குழந்தையைப் புணர்ந்தால் ஆயுள் நீடிக்கும், நோய் தீரும் என்பது போன்ற வக்கிரமான மூட நம்பிக்கைகளின் பலனாக, ஆறேழு வயது சிறுமிகளெல்லாம் சிவப்பு விளக்குப் பகுதிகளில் சிதைக்கப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் இப்பெண்கள் சந்திக்கும் உரிமை மீறல்கள் கற்பனைக்கும் எட்டாதவை.
பெண்கள் நவீனத்தையும் நாகரிகத் தையும் கற்றுக் கொண்டதாலேயே பாலியல் தொழில் செய்யத் துணிவதாகவும் மேற்கத்திய பண்பாட்டின் தாக்கமும், சுக வாழ்க்கைக்கான பண மோகமும் பாலியல் தொழில் செய்ய பெண்களை தூண்டுவதாகவும் ஒரு கற்பனை இச்சமூகத்தில் நிலவுகிறது. பாலியல் தொழில் என்பது, ஒரு சூழ்ச்சி வலை. இந்தியச் சூழலில் கட்டுப்பாடுகளோடு வளரும் பெண்கள் மட்டுமல்ல, மேற்கத்திய பண்பாட்டில் சுதந்திரத்தோடு வளர்வோரும் இந்த வலையிலிருந்து தப்பிக்க முடிவதில்லை. மும்பை காமத்திபுரா, கொல்கத்தாவிலுள்ள சோனாகஞ்ச் போன்ற சிவப்பு விளக்குப் பகுதிகளில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் நேபாள பெண்கள் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் அய்யாயிரம் நேபாள பெண்கள் இந்தியாவிற்கு கடத்தி வரப்படுகின்றனர். இவர்களின் வயது 10 - 14 வயதிற்குட்பட்டது. இந்த கடத்தல் நிச்சயம் ஒரு வழிச் சாலை அல்ல.
வேலைவாய்ப்பு வாக்குறுதிகளோடு இந்தியப் பெண்களும் வேறு நாடுகளுக்கு கடத்தப்படுகின்றனர். காணாமல் போகும் சிறுமிகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அதை கண்காணிக்கவோ, கண்டறியவோ, கட்டுப்படுத்தவோ வலுவான முயற்சிகளோ, நடவடிக்கைகளோ இல்லை. பாலியல் தொழில் எப்பொழுதும் தேவை இருக்கும் ஒரு துறையாகவே நிலைத்துவிட்டதால், ஊழல் அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு உற்ற துணையாக நின்று வருமானம் பார்க்கிறார்கள்.
பல லட்சம் பெண்களின் வாழ்க்கையாக இருப்பதாலும், பாலியல் தொழிலாளர்கள் மீதான உரிமை மீறல்களை, காணாமல் போகும் பெண்கள்/சிறுமிகளை கண்டறியவும் கண்காணிக்கவும் பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுக்கிறது. ஏற்கனவே பாலியல் தொழிலுக்கு வந்துவிட்ட கோடிக்கணக்கான பெண்களுக்கு வேறு வழியில்லை! கிடைத்த வட்டத்திற்குள், திணிக்கப்பட்ட வாழ்க்கைக்குள் சில உரிமைகளையும் கொஞ்சம் மரியாதையும் அவர்களுக்கு தேவைப்படலாம்.
பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்க வேண்டுமென கோரிக்கை வைக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் மனித உரிமையாளர்களுக்கும்கூட வேறு வழியில்லை. கடத்தலை தடுக்கவும், பாலியல் தொழிலைக் கட்டுப்படுத்தவும், மறைமுக /சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை தடுக்கவும், பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், மருத்துவ வசதிகளுக்காகவும், "விபச்சாரி'கள் என்ற நிலையிலிருந்து பாலியல் தொழிலாளர்கள் என்ற தகுதிக்கு உயர்த்துவதற்காகவும் பாலியல் தொழிலை
அங்கீகரிக்க கோருகின்றனர். இந்த அங்கீகாரத்தை வழங்க வேண்டிய அரசு அதைப் பெருமையோடு செய்துவிட முடியாது. கடத்தலை ஒழிக்க முடியாத, பல லட்சம் பெண்களின் வாழ்வை பலியாக்கிய தோல்வியை ஒப்புக்கொண்டுதான் அங்கீகரிக்க வேண்டும்.
"தொன்று தொட்டு வரும் தொழில்', "பாலியல் தொழில் ஒரு கலை' என்றெல்லாம் நாம் சிலாகித்துக் கொள்ளத் தேவையில்லை. எதுவொன்று இன்னொருவரின் மீது திணிக்கப்பட்டதோ, அது கொடுமைதானே அன்றி தொழிலாக முடியாது. பல்வேறு தொண்டு நிறுவனங்களும் அரசின் பெண்கள் மேம்பாட்டு அமைச்சகமும் நடத்திய ஆய்வுகள், நாள்தோறும் பாலியல் தொழிலுக்கு வரும் 200 பெண்களில் 80 சதவிகிதம் பேர் தங்களின் விருப்பத்திற்கு மாறாக, கொடுமையான பல துன்புறுத்தல்களாலேயே பாலியல் தொழிலாளியாவதாகக் கூறுகின்றன. எந்த நிலையிலும், கொடுமைகள்கூட பழகிவிட்டால் எளிமையாகிவிடும் என்பதையே பாலியல் சுரண்டலை, பாலியல் தொழிலாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உணர்த்துகிறது.
தலித்துகள் மீது திணிக்கப்பட்ட தொழில்களை எண்ணிப் பாருங்கள்! மலமள்ளும் தொழிலாளர்களுக்கான உரிமைகளைக் கோர வேண்டியதுதான். ஆனால், மனித உரிமைகளையும் மனித மாண்பினையும் சிதைக்கும் அத்தொழிலை அழிப்பதொன்றே நம் அதிகபட்ச லட்சியமாக இருக்க முடியும். பாலியல் தொழிலும் அப்படிப்பட்டதே! அதை சட்டப்பூர்வமாக்கி விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பதுகூட, ஆறுதலுக்காக நாம் செய்து கொள்ளும் கற்பனைதான். தடுக்க முடியாது என்பதற்காகவே ஒரு குற்ற வழக்கத்தை அங்கீகரித்தல் என்பது, சிறிய அளவிலேனும் நியாயத்தை செய்யுமா என்று தெரியவில்லை.
மதம் அங்கீகரிக்கும் மனித உரிமை மீறல்கள் எதையும் வெறும் சட்டத்தால் மட்டுமே தடுத்துவிட முடியாது. ஏனெனில், நம்பிக்கை எனும் பெயரில் ஒடுக்கப்பட்டோரே தங்கள் மீதான உரிமை மீறல்களை ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டோரை சாதி இழிவுகளை ஏற்றுக் கொள்ள வைத்ததும், பெண்களை ஆணாதிக்கத்தை அங்கீகரிக்கச் செய்ததும் மதமே! பெண் உடலை ஆண் சுரண்டும் பாலியல் தொழிலை தவிர்க்க முடியாத தேவையாகக் கருதும் போக்கு, இந்த கருத்தியலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான்!
அதிகாரம் வெவ்வெறு வடிவங்களை எடுக்கும்போது, ஒடுக்கும் முறையும் அதன் வடிவங்களை மாற்றிக் கொள்கிறது. அரசாட்சியில் தேவதாசி என்றால் முதலாளித்துவத்தில் அது பாலியல் தொழில். எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டிருந்தாலும் மதங்கள் போதித்த உரிமை மீறல்கள், கால மாற்றத்திற்கு ஏற்ப அதன் வடிவங்களை மாற்றிக் கொண்டே வருகின்றனவே தவிர அழிக்கப்படவில்லை. விளைவு, குற்றங்களிலும் வன்கொடுமைகளிலும் நமக்கான உரிமைகளை தேடத் தொடங்கிவிட்டோம். கொலைகாரனிடம் கருணையோடு வலியில்லாமல் கொலை செய்யச் சொல்வது போலத்தான் இதுவும்!
பாலியல் தொழில் ஒரு குற்றமாக இருக்கும் வரையிலாவது அதை அழித்தாக வேண்டும் என்ற கோரிக்கை இருக்கும். அதை அங்கீகரித்துவிட்டால், இன்னும் முறைப்படுத்தப்பட்ட குற்றமாக அது தழைத்தோங்கும். பாலியல் தொழிலை அங்கீகரிக்கச் சொல்லும் பாலியல் தொழிலாளர்களின் குரல், தொண்டு நிறுவனங்களின் குரலாகவே ஒலிக்கிறது. தனிப்பட்ட முறையில் பாலியல் தொழில் செய்யும் எந்த பெண்ணும் இதை அங்கீகரிக்க முடியாது. இதுவரையிலும் அய்ம்பதிற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளிகளுடனான ஆழமான உரையாடலிலிருந்து உணர்ந்த உண்மை இது!
2007 ஆம் ஆண்டு மீட்கப்பட்ட 18 வயதுகூட நிறைவடையாத ஒரு சிறுமி, தான் ஓர் இரவிற்கு அய்ம்பது வாடிக்கையாளர்களை எதிர்கொண்டதாகச் சொன்னார். அப்பெண் தற்பொழுது நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 16 வயதில் சிவப்பு விளக்குப் பகுதியில் விற்கப்பட்டபோது இருட்டறையில் அடைத்து, பிறப்புறுப்பில் மிளகாய் பொடி வீசி கொடுமைப்படுத்தப்பட்டதாகக் கூறினார், காமத்திபுராவில் நான் சந்தித்த ஒரு பாலியல் தொழிலாளி! பாலியல் தொழிலை ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டுமா, சட்டப்பூர்வமாக்கி உரிமைகளை வழங்க வேண்டுமா என்ற கேள்வி - இப்பெண்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு முன் அர்த்தமற்றதாகிவிடுகிறது.
பாலியல் தொழிலை சட்டப்பூர்வமானதாக்கி விட்டால், பாலியல் தொழிலாளர்கள் மீதான பார்வை மாறிவிடும் என்பதெல்லாம் ஏற்க முடியாத கற்பனை! ஏனெனில், "வேசி' என்ற வார்த்தைக்கு இந்த சமூகம் வைத்திருக்கும் அர்த்தத்தை சட்டத்தால் மாற்ற முடியாது, அழிக்க முடியாது! மேற்கத்திய நாடுகளைப் போல அல்ல, இந்தியச் சூழலில் பாலியல் தொழிலாளி என்று ஒரு பெண் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டால், இன்னும் அதிகமான சுரண்டல்களையே எதிர்கொள்ள நேரிடும். ஏனென்றால், பெண்களை வெறும் உடலாக மட்டுமே பார்க்கும் ஆணாதிக்க சமூகம் இது! இக்கருத்தியலை மாற்றாமல், புதிய சட்டவரைவுகள் துரும்பைக்கூட அசைக்காது. அடையாள அட்டையோடு ஒரு பாலியல் தொழிலாளி மருத்துவமனைக்கோ, காவல் நிலையத்திற்கோ தன் பிரச்சனைகளைக் கூறச் சென்றால், அங்குள்ள ஆண்கள் மரியாதையோடு நடத்துவார்களா என்ன?
சட்டம் ஆண்களின் மனப்போக்கை மாற்றிவிடும் எனில், இங்கு வரதட்சணைக் கொடுமையோ, குடும்ப வன்முறைகளோ, பாலியல் துன்புறுத்தல்களோ இல்லாது போயிருக்கும். பாலியல் தொழில் மட்டுமல்ல, பெண்கள் மீதான அத்தனை ஒடுக்குமுறைகளும் அழிய வேண்டுமெனில், ஆதிக்கக் கருத்தியல்களிலிருந்து இந்த சமூகம் விடுபட வேண்டும். அதற்கான முனைப்புகளைத்தான் தீவிரப்படுத்த வேண்டுமே தவிர, சட்டப்பூர்வமாக்கும் கோரிக்கையோடு நாம் சுருங்கிவிடக் கூடாது. ஆதிக்கக் கருத்தியலும் ஆணின் பாலியல் கோட்பாடுகளும் மாறும்போது, பாலியல் தொழிலாளர்கள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த பெண் சமூகமே உரிமை மீறல்களிலிருந்து விடுதலையாகும்.
- மீனாமயில்
thanks : dalitmurasu

0 கருத்துகள்:

கருத்துரையிடுக