தென்னாப்பிரிக்க தமிழர்கள் - திருமா - கருணாநிதி சந்திப்பு
தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த தமிழர்கள் குழு, முதல்- அமைச்சர் கருணாநிதியை நேற்று (18.10.2010) சந்தித்தது. அவர்கள் விடுத்த பல்வேறு கோரிக்கைகளை பரிசீலிப்பதாக முதல்-அமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் இருந்து, தமிழகத்துக்கு வந்துள்ள தமிழர்கள், முதல்-அமைச்சர் கருணாநிதியை நேற்று சந்தித்துப்பேசினார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், இச்சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார். சந்திப்பு முடிந்து வெளியே வந்தபோது நிருபர்களிடம் திருமா கூறியதாவது:-
1860-ம் ஆண்டில், தென்னிந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்க கரும்பு தோட்டங்களுக்கு தமிழர்கள் அழைத்துச்செல்லப்பட்டார்கள். வரும் 16-ந் தேதியோடு, இங்கிருந்து போய் 150 ஆண்டுகள் ஆவதையொட்டி, தங்கள் மூதாதையர் பிறந்த மண்ணை பார்ப்பதற்காக லாசரஸ் பிள்ளை என்பவர் தலைமையில் 50 பேர் தமிழகத்துக்கு வந்துள்ளார்கள். அவர்கள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியை நேரில் சந்தித்து அவருக்கு பாரம்பரிய நினைவுப்பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சருடன்.....
தென்னாப்பிரிக்க குடியரசுத் தலைவர் ஜேக்கப் ஜீமோவின் தலைமையில் 150-ம் ஆண்டு விழா, வருகிற நவ.21-ந் தேதி டர்பனில் நடக்கிறது. அந்த விழாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து பிரதிநிதிகளையும், கலாசாரக் குழுக்களையும் அனுப்பி வைக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள். தமிழ் சொல்லி கொடுப்பதற்கு, தென்னாப்பிரிக்காவுக்கு ஆசிரியர்களை அனுப்பி வைக்க வேண்டும், அங்கே ஒரு தமிழ் நூலகம் அமைக்க வேண்டும், தென்னாப்பிரிக்க பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வரிடத்தில், கிறிஸ்டியன் நெட்வொர்க் இன்டர்நேஷனல் என்ற இந்த அமைப்பு சார்பில் தென்னாப்பிரிக்க தமிழர்களும், பிற இந்தியர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். தென்னாப்பிரிக்காவில் சுமார் 15 லட்சம் தமிழர்கள் உள்ளனர். அவர்களில் 10 லட்சம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
தென்னாப்பிரிக்க தமிழரோடு, நீண்ட நேரம் பேசிய முதல்-அமைச்சர் கருணாநிதி, இந்த அழைப்புக்கு விரைவில் பதில் அளிப்பதாக கூறியுள்ளார். மொரீஷியஸ் தீவுக்கு தமிழ் ஆசிரியர்களை அனுப்பியதுபோல், இதற்கும் முயற்சி எடுப்போம் என்று தெரிவித்தார்.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
முதல்-அமைச்சரை சந்தித்து விட்டு வந்த தென்னாப்பிரிக்க குழுவினர், திடீரென, அவர்கள் மொழியில் தமிழகத்தையும், தென்னாப்பிரிக்காவையும் வாழ்த்தி கோஷம் போட்டார்கள். இதனால் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் திபுதிபுவென ஓடிவந்தார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக...
தென்னாப்பிரிக்கா தமிழர்களை வி.ஜி.பி சந்தோஷம், செல்வராஜ் ஆகியோர் வரவேற்று பாராட்டு விழா (17.10.2010) நடைப்பெற்றது. சிறப்பு விருந்தினராக தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டார். இவ்விழா வி.ஜி.பி கோல்டன் பீச்சில் நடைபெற்றது. அப்போது, அவர்கள் வருகையை பதிவு செய்து கல்வெட்டு ஒன்றும் திறக்கப்பட்டது.
2 கருத்துகள்:
உலகத் தமிழர்களுக்கெல்லாம் குரல் கொடுக்கும் ஒப்பற்ற மனிதரே உன்னால் இத்தமிழ் சமூகம் பெருமை கொள்கிறது. வாழ்க நீர்! வளர்க உன் புகழ்!!
அப்துல்நாசர்
அமீரகம்
incomparable leader Thoil.Thruma
கருத்துரையிடுக