வன்கொடுமை தடுப்புச் சட்டமும் பிற்படுத்தப்பட்டவர்களும்


பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்கக்கோரும் போது தங்களை பிற்படுத்தப்பட்டவர்களாக உணருகிறார்களா ஆதிக்கசாதியாக உணருகிறார்களா?
-மதியவன் இரும்பொறை
எல்லா ஜாதிக்காரர்களுமே தங்களுக்கு மேல் உள்ள ஜாதிக்காரர்களின் ஆதி்க்கத்தை எதிர்ப்பதைவிடவும் தங்களுக்கு கீழ் உள்ள ஜாதி்க்காரர்கள், மேல் நிலைக்கு வராமல் இருப்பதை தடுப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள், விரும்புகிறார்கள். இதுதான் ஜாதி உணர்வு செயல்படும் நிலை.
அநேகமாக, அருந்ததிய சமூகத்தை தவிர எல்லா ஜாதிய உணர்வாளர்களின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது.
‘ஜாதிய அமைப்பு, உயர்வு x தாழ்வு என்கிற இரண்டே நிலையில் இருந்து இருக்குமானால் அது எப்போதோ தூக்கியெறியப்பட்டிருக்கும். ஆனால், அது ஒருவருக்குமேல் ஒருவர் என்கிற படிநிலை அமைப்பில் இருப்பதால்தான் இத்தனை ஆண்டுகளாக உயிர் வாழ்கிறது’ என்று டாக்டர் அம்பேத்கர் சொல்வார்.

பிற்படுத்தப்பட்ட சமூகங்களுககுள்ளே உள்ள நாவிதர், மீனவர், குயவர், வண்ணார், வன்னியர், கள்ளர் போன்ற மிக பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களை;  பிள்ளை, செட்டி, முதலி இன்னும் இவைகளைப் போல் உள்ள ‘பிற்படுத்தப்பட்ட’ அல்லது பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதிக்காரர்கள் இழிவானவர்களாக தங்களை விட மட்டமானவர்களாக கருதுகிறார்கள்.
ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களான அருந்ததியர், பறையர், பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்கள், மிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த  நாவிதர், மீனவர், குயவர், வண்ணார், வன்னியர், கள்ளர்  போன்ற உழைக்கும் மக்களை இழிவானவர்களாகவோ, தங்களைவிட கீழானவர்களாகவோ நினைப்பதில்லை. அவர்களை மரியாதையாகத்தான் நினைக்கிறார்கள்.
ஆனால், தங்களை மட்டமானவர்களாக நினைக்கும் ஆதிக்க ஜாதி பிற்படுத்தப்பட்டவர்களிடம் சுமூகமாக நடந்துகொள்ளும் மிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜாதிய உணர்வாளர்கள்; தங்களை மதிக்கும் தாழ்த்தப்பட்டவர்களைதான் இழிவானவர்களாக கருதுகிறார்கள். அவர்களின் வளர்ச்சியில் வெறுப்புறுகிறார்கள்.
தங்களை இழிவானவர்களாக கருதும் ஆதிக்க ஜாதியர்களோடு சேர்ந்து  தங்களை பிற்படுத்தப்பட்டவர்களாக அடையாளம் படுத்திக்கொள்ளும்  நாவிதர், மீனவர், குயவர், வண்ணார், வன்னியர், கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஜாதிய உணர்வாளர்கள்; தங்களை மதிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களோடு இணைத்து அடையாளப்படுத்திக்கொள்வதில்லை.
இதுதான் ஜாதிய உணர்வுநிலை. இந்த நிலையின் காரணமாகத்தான் பிற்படுத்தப்பட்ட ஜாதிக்காரர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தையும் நீக்க கோருகிறார்கள்.

thanks : http://mathimaran.wordpress.com/2010/10/18/article-337/

0 கருத்துகள்:

கருத்துரையிடுக